திரும்பும் திசையெல்லாம் திருடர் கூட்டம்!| Dinamalar

திரும்பும் திசையெல்லாம் திருடர் கூட்டம்!

Added : அக் 08, 2016 | கருத்துகள் (5)
திரும்பும் திசையெல்லாம் திருடர் கூட்டம்!

எங்கு பார்த்தாலும், கொள்ளையடிப்பது, கொசு அடிப்பதை போல, சாதாரண நிகழ்வாக மாறி போயிருக்கிறது. ஏழைகள், ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு, அதற்கான வழி இல்லாததால், படித்தும் வேலை கிடைக்காத இளைஞர்கள் பலர் இதில் ஈடுபடுகின்றனர்.போலீஸ் தங்களை கண்காணிக்கிறது; சட்டம் தகுந்த தண்டனையை தரும் என்ற பயம் போய்விட்டது. சிறிது நாட்கள் வாழ்ந்தாலும், ராஜ வாழ்க்கை வாழ ஆசைப்படும் இவர்கள் மனதில் விஷ வித்தை துாவியதில், பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், சினிமாக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மற்றும் கிரிக்கெட் வீரர்களுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.தங்கள் தகுதி, உழைப்புக்கு மீறி, சினிமாக்காரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர் தவறான வழிகளில் சம்பாதித்து, வருமான வரி மற்றும் வணிக வரியை ஏய்த்து, கொள்ளை அடிக்கும் ஒரு கும்பல்; எந்த தொழிலையும் செய்யாமல், தங்களை தொழிலதிபர்களாக காட்டிக் கொள்ளும் மற்றொரு கும்பல்; வங்கிகளை ஏமாற்றி, 'தொழிலுக்காக' என்று கூறி, கடன் வாங்கி கோடிக்கணக்கில் ஏமாற்றும் நாகரிக கும்பல்; மக்களுக்கு சேவை செய்வதாக கூறி, ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகளை கொண்ட, திட்டங்கள் போட்டு திருடும் கும்பல். இப்படி திரும்பும் திசையெல்லாம், திருடர்களின் கூட்டம் பல விதமான, முகமூடிகளை அணிந்து, தங்கள் குற்றங்களுக்கு தண்டனை அடையாமல், நிம்மதியாக வாழ்கின்றனர். அதை, பார்க்கும் சாதாரண மனிதர்களுக்கு, துணிச்சல் வராமல் இருக்குமா? 'அவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர்களே தப்பித்து விடுகின்றனர்; நாம் கொஞ்சமாய் திருடினால், என்ன தவறு?' என்ற மனோபாவத்திற்கு பலரும் சென்று விட்டனர்.கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை, சில, தனி மனிதர்களின்,இழிகுணங்களாக இருந்த நிலை மாறி, அதுவே, சமூகத்தின் மனோபாவமாக இன்று மாறி போயிருக்கும் அவலம், திடீரென நடக்க கூடிய ஒன்றல்ல.இருப்பவன், இல்லாதவன், படித்தவன் மற்றும் படிக்காதவன் என, பலரும் தமக்கு தெரிந்த வழிகளில், தவறுகள் செய்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொள்ளும்போது தான், விஷயம் வெளியே தெரிகிறது. அதுவரை, யாரையும் தோற்றத்தை வைத்தோ, பின்னணியை வைத்தோ எந்த முடிவும், செய்ய முடியாத நிலையில் கையை பிசைந்து நிற்கிறோம். மனிதனுக்கு மிக அடிப்படையான குணமாக இருப்பது, வெட்கம் தான். அது தான், அவனை மிருகத்திடமிருந்து, வித்தியாசப்படுத்தி காட்டுகிறது. மனிதன் ஆடைகள் உடுத்தினாலும், வெட்கம் இல்லை என்றால், அவன் பாதி மனிதன் தான்.அந்த வெட்கம் தான், அவனுக்குதயக்கம் மற்றும் பயத்தை தந்து, தவறுகள் பக்கம் செல்லாமல் தடுக்கிறது; அதை, இப்போது, காண முடியவில்லை. இந்நிலைக்கு மனிதர்களை, அவர்களின் மனங்களை மாற்றியதில், 'டிவி'களில் வரும் விளம்பரங்களுக்கும், முக்கிய பங்கு உண்டு. ஆடம்பரமாக வாழத்தான், அத்தனை விளம்பரங்களும் துாண்டுகின்றன.ஒழுக்கத்தையும், திறமையையும் மற்றும் உழைப்பையும் கற்றுத் தரவேண்டிய கல்வியையே, ஒரு கூட்டம் கொள்ளையடிக்கும் கூடாரமாக மாற்றி விட்டது. கொள்ளையில் ஆரம்பமாகும் கல்வி, எதில் போய் முடியும்... அந்த பணத்தை திருப்பி கொள்ளையடிக்கும் ஆவலை தானே துாண்டும்... ஹரியானாவில், முன்னாள் முதல்வரான, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு சொந்தமான பல இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், 1,500 கோடி ரூபாய் நில மோசடி விவகாரம் தொடர்பாக, 'ரெய்டு' நடத்தியுள்ளனர். இப்படிப்பட்டவர்கள் ஒரு பக்கம் என்றால்,'ஆம் ஆத்மி' கட்சி, எம்.எல்.ஏ., ஒருவர் செய்த கீழ்த்தரமான செயலால், ஏமாற்று அரசியல் ஒன்றே நிரந்தரம் என்பது புரிகிறது.டில்லியில், ஆம் ஆத்மி கட்சியின், ஆட்சி நடக்கிறது. இதில், அமைச்சராக இருக்கும், சந்தீப்குமார் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற, ஆபாச, 'சிடி' வெளியானது; தேசம் எங்கும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது.அவரிடமிருந்து, அமைச்சர் பதவி பறிப்பு, கட்சியிலிருந்து நீக்கம் என, முதல்வர் கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்துள்ளார். வேறு வழி இல்லாததால், தற்சமயம் சந்தீப்குமார், தானாகவே போலீசில் சரணடைந்து விட்டார்; சில நாட்களில் வெளியே வந்து விடுவார்; அது வேறு விஷயம்.மேலிடத்திலிருந்து துவங்கும் இந்த ஒழுக்கமின்மை மற்றும் கொள்ளையடிக்கும் மனோ பாவம் கடை நிலை வரை தொடர்கிறது. ஆட்சி செய்பவர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளே இப்படி இருப்பதால், பொதுமக்களுக்கும் குளிர் விட்டுப் போகிறது.அதை தான் நாம் இன்று தினமும் நடக்கும் அவலங்களாக பார்த்து வருகிறோம். 'நம்மால் என்ன செய்ய முடியும்?' என, கைகளை பிசைகிறோம். 'நம்மை என்ன செய்ய முடியும்?' என, அவர்கள் கைகளை முறுக்குகின்றனர். இதை தினமும் பார்க்கும் சாதாரண மனிதன் விரக்தி நிலைக்கு தள்ளப்படுகிறான்; யார் ஆண்டாலும், நம் நிலை மாறாது என்ற துயரத்தில் வாழ்கிறான்.
- அப்சல் -

எழுத்தாளர், சிந்தனையாளர் இமெயில் : affu16.m@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X