உள்ளத்தில் உறுதியிருந்தால் உலகமே வசப்படும் | Dinamalar

உள்ளத்தில் உறுதியிருந்தால் உலகமே வசப்படும்

Added : அக் 10, 2016 | கருத்துகள் (1)
உள்ளத்தில் உறுதியிருந்தால் உலகமே வசப்படும்

உள்ளமே உடலின் உயிர். உள்ளம் என்பது பெருங்கோயில். கற்க வேண்டியதை எல்லாம் கற்று பின், உள்ளத்தை சிதற விட்டால் உயர்ந்த நிலையை யாரும் அடைய முடியாது. திருஞானசம்பந்தரின் கோளறு திருப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் கடைசி இரு வரிகளும் 'ஆசு அறும் நல்ல நல்ல, அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே' என முடியும். காரணம் நல்ல நல்ல என்று கூறும் பொழுது மனதிலும் நல்ல எண்ணங்கள் ஏற்படும். அதே கூற்றை திருவள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.
'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிற'
மனத்துாய்மை பெற அன்பு ஒன்றே ஆணி வேர். அதுவே மனநலத்தின் அச்சாணி. உளம் மாசுபட்டால் மனநலம் குன்றும். ஒவ்வொரு குழந்தையின் மனவளர்ச்சியும் மரபையும், சூழ்நிலைகளையும் சார்ந்துள்ளது. மரபு என்பது இயற்கை. சூழல் என்பது அனுபவங்கள். குழந்தையின் மனவளர்ச்சியில் பெற்றோரின் மரபு வழிப் பண்புகள் உள்ளது என்று உளவியல் அறிஞர்கள் கூறியிருப்பதை அன்றே சித்தாந்தம், வேதாந்தம், விஞ்ஞானம், மருத்துவம் என்று அனைத்தையும் கூறிய ஞானி திருமூலரும் தன் பாடலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
'மாண்பதுவாக வளர்கின்ற வன்னியைக் காண்பது ஆண், பெண் அலி எனும் கற்பனைபூண்பது மாதா, பிதா வழி போலவே ஆம்பதி செய்தான்'
குழந்தையின் மனநலம் பேணுதல் பயிருக்கு ஏற்றார் போல மண்ணையும், தண்ணீரின் அளவையும், உரத்தையும் தேர்ந்தெடுப்பது போல, ஒவ்வொரு குழந்தையின் தன்மை அறிந்து அதற்கு ஏற்ப தளத்தையும், வழிமுறைகளையும் மாற்ற வேண்டும். மரபாலும், சூழ்நிலையாலும், உடலாலும், அறிவாலும், குழந்தைகள் வேறுபடுவதால் ஒரே இலக்கை வைத்து செயலாற்றக்கூடாது. அவர்களை சரியான முறையில் வழிப்படுத்தி வழி நடத்த வேண்டும். குழந்தையின் மனம் பலுானை போன்றது. பலுானுக்கு ஏற்றாற் போல காற்றடைக்காவிட்டால் உடைந்து விடும். குழந்தைகளின் மனதிற்கு ஏற்றாற் போல் பளுவை ஏற்ற வேண்டும். இல்லாவிட்டால் மனமுறிவு ஏற்படும். எலிசபெத் பி.ஹர்லாக் என்ற உளவியல் அறிஞர் வளர் உளவியலை எட்டு பருவமாக பிரித்துள்ளார். அதில் முதல் பருவமே கருப்பருவமாகும். மரபினாலும் கருப்பருவம் தீர்மானிக்கப்பட்டாலும், புறச்செயல்களாலும் தீர்மானிக்கப்படுகிறது என்கிறார் உளவியல் அறிஞர். கோபப்படும் போது மனப்போராட்டங்கள் நிகழும்போது, பயம் தோன்றும் பொழுது பெரியவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதயக்கோளாறு இன்னும் பல நோய்கள் தோன்றுகின்றன. காரணம் உள்ளே செல்லும் காற்றின் அளவு மாறுபட்டு உறுப்புகளின் இயக்கத்தை தடை செய்கிறது. சில சமயங்களில் செயற்கை சுவாசமும் அளிக்கும்படியாகிறது. உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் இயக்கத்திற்கும் ஆதாரம் மூச்சே. கரு வயிற்றில் இருக்கும் போது, தாய்க்கு ஏற்படும் கவலை, கோபம், அச்சம், சூழ்நிலையால் ஏற்படும் துயரங்கள், மனவேறுபாடு இவற்றால் கருவுக்கு செல்லும் சீரான மூச்சு தடைபடுகிறது. தாய் விடும் மூச்சின் வேறுபாட்டால் கூட கருவிலுள்ள உள்ள குழந்தை பாதிக்கப்படலாம். இதனால் கருவின் மூளையின் நரம்பு மண்டலத்திலும் குறைபாடு ஏற்படலாம். இதம் தரும் இசை, இன்பம் தரும் இயற்கை, அன்பு தரும் உறுதுணை, ஆதரவு தரும் சமுதாயம் இவற்றால் கருவிற்கு நல்ல அதிர்வுகள் ஏற்பட்டு ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகும்.
யார் தீர்மானிப்பது : ஹவிகர்ஸ்ட் என்ற அறிஞர் பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதனுடைய அனைத்து பருவங்களும் பெற்றோர், ஆசிரியர், சமுதாயம் இவற்றால் தீர்மானிக்கப்படுகிறது என்கிறார். இவர்கள் தான் தங்களுடைய அன்பாலும், நட்புணர்வாலும், தேர்ந்த வழிகாட்டுதலும், அறிவு வளர்ச்சி , மனவெழுச்சி, சமூக வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி போன்ற வளர்ச்சி சார் செயல்கள் மேம்பட உறுதுணையாக நிற்கிறார்கள். இதையே திருமந்திரமும் வளர்ச்சி சார் செயல்களை பற்றி விரித்து கூறுகிறது.
'உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்மெள்ளக்குடைந்து நின்றாடர் வினைகெடப்பள்ளமும் மேடும் பரந்து திரிவரேகள்ளமனம் உடைக்கல்வி இல்லாரே'
அன்பு, கருணை, பாசம், நேசம், உண்மை, இன்னும் பல தீர்த்தங்கள் உள்ளத்தின் உள்ளே உள்ளது. அதை முகர்ந்து அனைவருக்கும் கொடுத்தால் அதுவே வளர்ச்சி சார் செயல்களுக்கு வித்திடும். அதை விடுத்து பாவம் போக காடு, மேடு பள்ளம் என மனிதர்கள் திரிகின்றனர் என்று திருமூலர் வருந்துகிறார். குழந்தை பருவத்தில் மட்டுமல்ல எல்லா பருவத்திலும் மனப்போராட்டத்தால் மனம் பாதிக்கப்படலாம்.
மனநோய் தாக்குதல் : மன உறுதியற்றவர்கள், மன இறுக்கம் உடையவர்கள் மனக்கவலையை சமாளிக்க முடியாமல் இருப்பவர்கள் தான் மனநோயால் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா பருவத்தினருக்கும் அவரவரின் சூழ்நிலைக்கு ஏற்ப மனம் பாதிக்கப்படும். வறுமையிலும் ஆங்கிலேயரின் படிப்பிலும் மரண எல்லைக்கே சென்ற போதும். பாரதியார் தன்னுடைய பாடல்களில் தன்னம்பிக்கையை இழக்காது, துயரத்தின் சாயலைக் காட்டாது, வீரமுடன் பாடல்களை எழுதியுள்ளார். அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே என்று அச்சத்தையே துரத்தி அடித்தவர் மகாகவி பாரதியார்.அதுபோல விவேகானந்தரின் ஒவ்வொரு வரிகளும், உறுதியையும், தன்னம்பிக்கையையும் வளர்ப்பதாக இருக்கும். கல்விக் கண்ணோடு, மனக்கண் என்னும் மன வலிமையை திறந்து வைத்து துயரைக் கண்டு துவண்டு விடாது. அனைவருமே மன ஆரோக்கியத்தை பெற வேண்டும்.
மனநலம் : கலங்காத தண்ணீரில் பொருளை காண்பது போல், மாசிலா உள்ளத்தில் மனத்தெளிவை காணலாம். உள்ளத்தில் உறுதி இருந்தால், உலகமே வசப்படும். மனநலம் மாண்புடன் இருக்கும். ஷாபர் என்பவர் மனநலம் உள்ளவர்கள் தோல்வியை கண்டு துவளாது, உண்மை நிலையை அறிந்து கொண்டு திறம்பட தீர்வு காண முயல்வார்கள். மனக்குழப்பத்திலும் தெளிவு காண்பார்கள். மனிதனின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டுமென்றால், மனநலத்தை பேண வேண்டும். மனநலம் பேண திறனை வளர்த்து, மனவெழுச்சியை நிலைப்படுத்தி, சமூக பாதுகாப்பை பெற வேண்டும். மனநலத்தை இழப்பது போன்ற உணர்வு இருந்தால் தனிமையை தவிர்ப்பது நல்லது. தோல்வியை கண்டு துவளாது. மனம் கலங்காது, நிமிர்ந்து நின்று, மனநலத்தை பேண வேண்டும். மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம்.
-----முனைவர் ச.சுடர்க்கொடிகாரைக்குடி. 94433 63865

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X