குறையுது கனெக்ஷன் கூடுது கலெக்ஷன்!| Dinamalar

குறையுது 'கனெக்ஷன்' கூடுது 'கலெக்ஷன்'!

Added : அக் 11, 2016
Share
மருதமலை செல்லும் மினி பஸ்சில், பண்பலையில் ஒலித்த பாட்டைக் கேட்டு, சித்ராவும், மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.'என்னங்க சார் ஒங்க சட்டம்...என்னங்க சார் ஒங்க திட்டம்...கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம்....'''தமிழ்நாட்டுக்காகவே 'சிச்சுவேஷன் சாங்' எழுதிருக்காரு யுகபாரதி,'' என்றாள் சித்ரா.''ஸ்டேட்டை விடுக்கா...நம்மூர்ல என்ன வாழுதாம்?
குறையுது 'கனெக்ஷன்' கூடுது 'கலெக்ஷன்'!

மருதமலை செல்லும் மினி பஸ்சில், பண்பலையில் ஒலித்த பாட்டைக் கேட்டு, சித்ராவும், மித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
'என்னங்க சார் ஒங்க சட்டம்...என்னங்க சார் ஒங்க திட்டம்...கேள்வி கேட்க ஆளில்லாம போடுறீங்க கொட்டம்....'
''தமிழ்நாட்டுக்காகவே 'சிச்சுவேஷன் சாங்' எழுதிருக்காரு யுகபாரதி,'' என்றாள் சித்ரா.
''ஸ்டேட்டை விடுக்கா...நம்மூர்ல என்ன வாழுதாம்? நல்ல நாள்லயே இங்க, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சேர்ந்து அள்ளித்தட்டுவாங்க. இப்போ, 'கவர்மென்ட்'ன்னு ஒண்ணு இருக்கான்னே தெரியலை. அப்புறம் ஏன் கொட்டம் அடிக்க மாட்டாங்க?,'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன் கலாட்டாவைப் பார்த்தா அப்பிடித்தான் தெரியுது; நடக்காத எலக்ஷனுக்கு, 21 ஏ.ஆர்.ஓ., போட்டாங்களே. அதுல முக்கியமான ஏரியாவுல போட்டவுங்க எல்லாம், ஆளுங்கட்சி ஆளுங்க. அதுல ஒரு ஏ.சி.,தான், எம்.எல்.ஏ., எலக்ஷன்ல ஆளுங்கட்சிக்கு தன்னோட வண்டியில பணத்தை எடுத்துட்டுப்போய், மாட்டுனவரு. அவரு, வண்டியையே பறிமுதல் பண்ணுனாங்க,''
''ஆமா! அவரைக் கூட எலக்ஷன் டூட்டியில இருந்து கழட்டிவிட்டாங்களே!''
''அவரே தான். அவருக்கு இப்போ தி.மு.க., ஜெயிச்ச சிங்காநல்லூர் தொகுதியில 'டூட்டி' போட்டிருந்தாங்க. அவருக்குத் துணையா, பீளமேட்டுல நம்ம 'குப்பை' இன்ஜினியரைப் போட்டாங்க. ஆளுங்கட்சி முக்கியஸ்தரோட வலது கையா இருக்கிற 'ஞானமான' இன்ஜினியருக்கு 'மேயர் கேண்டிடேட்' வார்டுல தேர்தல் பணி, எப்பூடி?'' என்றாள் சித்ரா.
''எல்லாத்துக்கும் 'டூப்பு' போட்டாங்க; இப்போ ஐகோர்ட் 'ஆப்பு' வச்சிருச்சு,'' என்றாள் மித்ரா.
பஸ்சிற்குள் கூட்டம் அதிகமானது. கண்டக்டர், 'சீட்டு சீட்டு' என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
''நம்ம 'டவுன்டாடி' இந்த தடவை 'சீட்' கேக்கவே இல்லியாம். அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் பாரு... எலக்ஷன் தள்ளிப்போனதுல, 17 நாளு மறுபடியும் வண்டியை வாங்கிட்டு, வலம் வர்றாரு. அதுக்குள்ள ஏன் என்னோட ஆபீசைப் பிரிச்சீங்கன்னு ஆபீசர்களை பிரிச்சு மேஞ்சிருக்காரு. அப்புறம்...ஏதோ அதிரடி பேட்டி தட்டப்போறதா ஒரு தகவல் பரவுச்சு,'' என்றாள் சித்ரா.
''என்ன பேட்டி...'பதவி கொடுத்தாங்க அம்மா; பார்த்துட்டு இருந்தேன் சும்மா'ன்னு சொல்லப் போறாரா?'' என்று வெடித்துச் சிரித்தாள் மித்ரா.
''அதில்ல மித்து...உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போனதுக்கு பொறுப்பேற்று, ஒருத்தர் ராஜினாமா பண்ணனும்னு பேட்டி கொடுக்கப்போறார்னு ஒரு சேதி உலாவுச்சு; ஆனா, விசாரிச்சதுல யாரோ கிளப்பி விட்டதுன்னு தெரிஞ்சது,'' என்றாள் சித்ரா.
''நல்லவேளைக்கா எலக்ஷன் நடக்கலை...நடந்திருந்தா?'' என்று கொக்கி போட்டாள் மித்ரா.
''ஏன்டி...ஒனக்கென்ன பிரச்னை?''
''பிரச்னை எனக்கு இல்லை. நம்ம கார்ப்பரேஷன்ல துணை பொறுப்புல இருந்த லேடி ஆபீசர், ஐ.ஏ.எஸ்., ஆன பிறகும், இங்கேயே பல பொறுப்புல இருந்தாங்களே. அவுங்களைத் தான், இப்போ தேர்தல் பார்வையாளராப் போட்ருந்தாங்க. சர்க்யூட் ஹவுஸ்ல குமணன் இல்லத்துல, அவுங்களுக்கு 'ரூம்' கொடுத்திருக்காங்க. ஆனா, அவுங்க 'ஸ்டேட்டஸ்'க்கு அது போதலையாம்''
''அதனால...!''
''டைல்ஸ் சரியில்லை; கண்ணாடி கிளாஸ் புதுசா வேணும்; 'மேட்'டை மாத்துங்க; இங்க சமைச்சா சாப்பிட மாட்டேன்னு படுத்தி எடுத்துட்டாங்களாம். அப்புறமா, வேற 'சூட்' மாத்திக் கொடுத்திருக்காங்க. எலக்ஷன் தள்ளிப் போனதும் தான், அவருக்குப் பணிவிடை பண்ணுன 'ஸ்டாப்' எல்லாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்ருக்காங்க,''
''பேருல இருக்குற 'சாந்தம்' பேச்சுல இல்லியோ. அவுங்களே திரும்ப வந்தா அவ்ளோதான்,''
இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, இடையில் வந்த அலைபேசியை எடுத்துப் பேசினாள் சித்ரா.
''யாரு...நடராஜன் மாமாவா...சொல்லுங்க மாமா...நான் பஸ்சுல போயிட்டு இருக்கேன்; ஒரே சத்தமா இருக்கு; இறங்குனதும் நானே கூப்பிடுறேன்,'' என்று அலைபேசியைத் துண்டித்தாள்.
''அக்கா, ஒங்க மாமா பேரைக் கேட்டதும், நம்மூரு 'மண்டலம்' ஒருத்தரோட மேட்டர் ஞாபகம் வந்துச்சு. சிட்டியிலேயே அவரோட வார்டு தான் பெருசு. விடாம சுத்துனாலும், முழுசாப் போக முடியாது. ஆனா, அவரு வார்டுக்குள்ள போகவே இல்லியாம். விசாரிச்சா, மந்திரவாதி ஒருத்தரு, 'நீங்க ஜெயிக்கணும்னா, மக்களை நேரடியா பார்க்கப்போகக்கூடாதுன்னு சொன்னாராம். தல அப்பிடியே ஒக்காந்துட்டாரு,'' என்றாள் மித்ரா.
''எலக்ஷன் வரட்டும்; வர்றாரான்னு பார்த்துரலாம்,'' என்றாள் சித்ரா.
பஸ், மருதமலை 'டெப்போ'வை கடந்து சென்று கொண்டிருந்தது.
''அக்கா, டி.என்.எஸ்.டி.சி., கோவை கோட்டத்துல நாலு மாவட்டத்துல 45 பஸ் டெப்போ இருக்கு; முப்பதுக்கு மேல தொழிற்சங்கம் இருக்கு. எலக்ஷனுக்கு, எல்லா யூனியன்காரங்களும் 'லீவ்' கேட்ருக்காங்க. ஆனா, ஆளுங்கட்சி யூனியன்காரங்களுக்கு மட்டும், டெப்போவுக்கு 20லயிருந்து 30 பேருக்கு 'லீவ்' கொடுத்து இருக்காங்க. மத்தவுங்களுக்கு தரலை. அதனால, யூனியன்காரங்க கொதிச்சுப்போயிருந்தாங்க,''
''இப்போ எலக்ஷனே நடக்கலையே!''
''நடக்கலை; ஆளுங்கட்சி யூனியன்காரங்களும், வேலைக்கு வந்துட்டாங்க. ஆனா, ஆளுங்கட்சிக்காரங்களுக்கு 'லீவு' கொடுக்காத ஆபீசர்கள் சில பேரை, 'காவு' வாங்குறதுக்கு தயாரா இருக்காங்களாம்,''
''இன்னிக்கு நிலைமையில, நேர்மையானவங்க தான் பயப்படவேண்டியிருக்கு. காசு வாங்குறவுங்க, கம்பீரமாத்தான் திரியுறாங்க,''
''என்னக்கா, காசை வாங்கிட்டு கம்பீரமாத் திரியுற ஆபீசர் யாரு?'' என்றாள் மித்ரா.
''நம்மூர்ல இருந்துட்டு நாலஞ்சு மாவட்டங்களை 'கன்ட்ரோல்' பண்ணுற டிரான்ஸ்போர்ட் ஆபீசர் தான். இங்க 'ஜாயின்ட்' ஆபீசரா இருக்கிற அவருதான், மதுரைக்கும் 'ஜாயின்ட்' பொறுப்புல இருக்காரு. அவரு கையில தான் விருதுநகர் 'டெபுடி' பொறுப்பும் இருக்கு. இப்போ, சென்னையில 'ரூல்ஸ்' பார்க்குற 'ஜாயின்ட்' பொறுப்பையும் அவர்ட்டயே கொடுத்துட்டாங்க,'' என்றாள் சித்ரா.
''என்னக்கா, நம்மூர்ல ஆர்.டி.ஓ.,வா இருந்தாலே, ரெண்டு கை பத்தாதும்பாங்க. இவர்ட்ட இத்தனை பொறுப்பு இருந்தா...,'' என்று 'இச்' கொட்டிச் சிரித்தாள் மித்ரா.
''இதென்ன பிரமாதம்? கோயம்புத்துார்ல கேபிள் 'டிவி'யை கண்காணிக்கிற லேடி ஆபீசர், ஏகப்பட்ட கேபிள் சேனல்களைத் திறந்து விட்டு, மானாவாரியா வசூல் பண்ணிட்டு இருக்காராம். லோக்கல் சேனல் அதிகமா இருக்கிறதால, தேவையான பல சேனல்கள் தெரியுறதில்லைன்னு புலம்புறாங்க,'' என்றாள் சித்ரா.
''ஏற்கனவே, கேபிள் கனெக்ஷன்களை 'கம்மி' பண்ணிக் காட்டுறதிலயே, அவருக்கு மாசத்துக்கு பல லட்சம் மாமூல் வருதுன்னு கேள்விப்பட்டேன். இதுவேறயா?'' என்றாள் மித்ரா. பஸ் நின்றது; இறங்கி இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
''மித்து! வர்ற தீபாவளிக்கு, ஆம்னி பஸ்கள் அள்ளித்தட்டுவாங்கள்ல. அதுலயும், நம்ம ஆர்.டி.ஓ., ஆபீஸ்காரங்க காசு பார்க்க வழி பண்ணிட்டாங்க. அத்தனை
அலுவலர்களும், தகுதிக்கேத்தது மாதிரி, ஒண்ணுல இருந்து நாலு, அஞ்சு வரைக்கும் பல ஊர்களுக்கு 'ஓசி' சீட்டு வாங்கி வச்சிருக்காங்களாம். அந்த 'சீட்' எல்லாம் நோட்டாகப் போகுது,'' என்றாள் சித்ரா.
''அக்கா! ஆர்.டி.ஓ., வைப் பத்திச் சொன்ன...நான் நம்ம ஆர்.டி.ஓ., அதான் கோட்டாட்சியர் ஆபீசைப் பத்தி, ஒரு மேட்டர் சொல்றேன். கோயம்புத்துாருக்கு புது ஆர்.டி.ஓ., இன்னும் வந்து சேரலை. அவரு வந்தாலும், அந்த ஆபீசைப் பொறுத்தமட்டுக்கும், அங்க இருக்குற 'கிளார்க்' ஒருத்தரு தான் கலெக்ஷன்ல எப்பவுமே 'ஏ.ஒன்'னா இருக்காராம். எல்லாத்தையும் அவரு தான் 'டீல்' பண்ணுவாராம்,'' என்றாள் மித்ரா.
அதைக் கவனிக்காமல், 'முருகா, முருகா' என்று கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட ஆரம்பித்து விட்டாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X