""வீடுகளில் திருட்டு போனா போலீசாரிடம் புகார் செய்யலாம்; அந்த போலீசாரிடமே திருடு போனால்..''என, வசந்த மாளிகை ஸ்டைலில் கேள்வி கேட்டபடி வீட்டுக்குள் நுழைந்தாள், சித்ரா.
""அட, இதென்ன கூத்து. எங்கே நடந்தது?,'' என்று வியப்புடன் கேட்டாள் மித்ரா.
""சிட்டி ஏ.ஆர். போலீஸ் கேம்ப்ல, சார்ஜ்' போட்டிருந்த பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை காணோம். விசாரணையில், அங்கிருந்த, சீனியர் போலீஸ்காரர் எடுத்தது தெரிஞ்சது. பார்த்துக்கோ, எல்லாம் கலிகாலம்,'' என்றாள் சித்ரா.
""ஏ.ஆர்., கேம்ப்ல, அவருக்கு என்ன வேலை? ' என, மித்ரா சந்தேகம் கிளப்பினாள்.
""அவர், ஏற்கனவே டூட்டி பார்த்த ஸ்டேஷன்களிலும், இது போல் சில சின்னசின்ன திருட்டு வேலைகளை செஞ்சு, பனிஷ்மென்ட் டூட்டியில், இங்கு வந்திருக்கார். வந்த இடத்திலயும், கையரிப்பு தாங்காம, கைவரிசை காட்டியிருக்காரு,'' என, சித்ரா விவரித்தாள்.
""அடடே, ஒரு முறை ஸ்டேஷனில் இருந்த ஆவணங்களை எடுத்து, வீட்டில் ஒளித்து வைத்து, "சிசி டிவி' கேமராவால் சிக்கினாரே; அவர் தானே'' என்றாள் மித்ரா.
""அவரே தான். மொபைல் போனை கண்டால், அவருக்கு, தலையில் கொம்பு முளைச்சுக்கும். ஜி.எச்.,சில் ஒரு வழக்கு விசாரணைக்கு போய், ஒரு பெண்ணிடம், மொபைலை "லவட்டி' சிக்கியிருக்கிறார்,'' என்றாள் சித்ரா.
""அவர் மேல், இன்னொரு வித்தியாசமான புகார் இருக்கு. வெளிய போனா, யாரிடமாவது மொபைல்போன் இரவல் வாங்கி, அவருக்கு பிடிக்காத ஆபீசர்
களுக்கு போன் போட்டு, சகட்டுமேனிக்கு திட்டுவாராம். இதனால், "மொபைல் மேனியா'ன்னு, அவருக்கு டிபார்ட்மென்ட்ல பேராம். இப்ப நடந்த சம்பவத்தில், கமிஷனர், அந்த போலீசை சஸ்பெண்ட் பண்ணிட்டாரு,'' என்று, கடகடவென சிரித்தபடி சொன்னாள் மித்ரா.
""மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தில, நடந்த சுவாரசியத்தை கேள்விப்பட்டியா,'' என்றாள் சித்ரா.
""செல்லம் நகர் கடைக்கு எதிரான போராட்டத்தைத்தானே சொல்றே?'' என்று, மித்ரா கேட்டாள்.
""ஆமாம். காலவரையற்ற உண்ணாவிரதமுன்னு, பொதுமக்களை திரட்டி, அனைத்து கட்சிகளும் போராட்டத்துக்கு வந்தாங்க. வழக்கம் போல், பேச்சுங்கிற பேரில், போலீஸ், அவர்களை "சமரசம்' செஞ்சுட்டாங்க.
ஆவேசமான சில பெண்கள், "மதுக்கடையால் தொல்லையில்லைன்னா, பேசாம போலீஸ் ஸ்டேஷன் பக்கம் வெச்சிக்க வேண்டியது தானே,'
கேட்டாங்களாம். போலீசாரால ஒண்ணும் பேச முடியாம, "கப்சிப்' ஆகிட்டாங்க,'' என்று, சித்ரா கூறினாள்.
""உள்ளாட்சி தேர்தல், இப்படி தள்ளிப்போகும்னு எதிர்பார்க்கலேன்னு, கட்சிக்காரங்களும், அதிகாரிகளும் புலம்பிட்டு இருக்காங்க,'' என்று, மித்ராவின் பேச்சு தேர்தல் பக்கம் சென்றது.
""ஆமா. திட்டமிட்டபடி நடக்கறதா இருந்தா, இந்நேரம், பிரசாரம் தீவிரமா நடந்திட்டு இருக்கும். இப்ப பாரு, ஊரே அமைதியா இருக்கு. வேட்பாளராக அறிவிக்கப்பட்டவங்க, தண்ணியில்லாத குளத்துல குதிச்ச மாதிரி, முழிச்சிட்டு இருக்காங்க. அதிகாரிங்களும், வேட்பாளர்களும் கவலையில இருக்காங்க;
ஆனா, ஆளும்கட்சியில் விருப்பமனு கொடுத்து, "சீட்' கிடைக்காதவங்க, மறு ஜென்மம் எடுத்தது போல் சந்தோஷமா இருக்காங்களாம்,'' என்று, சித்ரா கூறினாள்.
""அரசு அதிகாரிங்க ஏன் கவலைப்படறாங்க?''என்று, சந்தேகத்தை கேட்டாள் மித்ரா.
""தேர்தல் அறிவிச்சதுமே, அதிகாரிங்க, ரொம்ப சுறுசுறுப்பா செயல்பட்டாங்க. முக்காதிட்டம் வேலை முடிஞ்ச நேரத்தில் தேர்தலை ரத்து செஞ்சதால, மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிக்கணுமேன்னு, அவங்களுக்கு கவலை. மேயர் பயன்படுத்தின கார், கலெக்டருக்கு அடுத்த இடத்துல் இருக்கும் அதிகாரிக்கு போச்சு. புது போர்டு மாட்டி, பயன்படுத்திட்டு இருந்தப்ப, திடீர்னு தேர்தல் ரத்தானதால, சத்தமே இல்லாம, "சைரன்' வெச்ச அந்த காரை, திருப்பி
அனுப்பிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாடியே, "செலவு' செஞ்சிருக்காங்களா?'' என்று, மித்ரா சந்தேகம் கேட்டாள்.
""ஆமா! மத்த கட்சியில, வேட்பாளரை தேடிப்பிடிக்க வேண்டியதாச்சு. ஆளுங்கட்சியில், பணம் கொடுத்து "சீட்' வாங்குமளவுக்கு, "டிமாண்ட்' இருந்துச்சு. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கே, 10 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்காங்கன்னு பேசிக்கறாங்க. கைக்காசு இறைச்சும், காரியம் கைகூடாம போச்சேன்னு, செலவழிச்சவங்க புலம்பறாங்க,'' என்றாள் சித்ரா.
""இப்படி, ஒரு "குரூப் போட்டோ' கூட எடுக்காம கலைஞ்சிருவாங்கனு நினைக்கவே இல்ல'' என்று, புதிராக சொன்னாள் மித்ரா.
""யாரு? எங்க குரூப் போட்டோ எடுக்காம போயிட்டாங்க?'' என்று, சித்ரா கேட்டாள்.
""மாநகராட்சியிலதான். வழக்கமா தேர்தலுக்கு முன்னாடி, எல்லா கவுன்சிலரும் மேயர், கமிஷனர் கூட "குரூப் போட்டோ' எடுத்துக்குவாங்க. தி.மு.க., மேயர் இருந்தப்ப, அ.தி.மு.க., கவுன்சிலருங்க வரமாட்டாங்க. ஆனா, அ.தி.மு.க., மேயர் இருந்தும் கூட, அ.தி.மு.க., கவுன்சிலர் கூட போட்டோ எடுக்கல,'' என்றாள் மித்ரா.
""தனி அதிகாரி நியமிச்சுட்டாங்க. முழு அதிகாரமும், கலெக்டருக்கு போயிருமாக்கா?'' என்று, சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""அதிகாரம் கலெக்டருக்குத் தான் போகும். ஆனா, எம்.எல்.ஏ., எம்.பி.,கள் தான் அதிகாரம் செலுத்துவாங்க. அவங்களோட தலையீடு அதிகமா இருக்கும்.
மேயர், துணை மேயருக்கு போயிட்டு இருந்த எல்லா "கணக்கையும்', இவங்களே நேரடியா பார்க்க வேண்டியிருக்கும். அதிகாரி பொறுப்புல இருந்தாலும், ஆட்சி அவங்களோடது தானே. சரிக்கா. பக்கத்து வீட்டுல, அவங்க குழந்தைக்கு வித்யாரம்பம் பண்ணாறங்க. நான் போயி, தலைய காண்பித்து வந்துடறேன்?'' என்றவாறு மித்ரா, நடையை கட்ட, வழக்கம் போல, ஸ்கூட்டியில், தனது வீட்டுக்கு பறந்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE