மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம்! இன்று உலக மூட்டு வலி தினம்| Dinamalar

மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம்! இன்று உலக மூட்டு வலி தினம்

Updated : அக் 12, 2016 | Added : அக் 12, 2016 | கருத்துகள் (4)
 மூட்டு வலிக்கு முடிவு கட்டுவோம்! இன்று உலக மூட்டு வலி தினம்

மூட்டுவலி என்பது முன்பெல்லாம் முதியவர்களைப் பாதிக்கும் பிரச்னையாக இருந்தது; இப்போதோ இளம்வயது பிரச்னையாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

இன்றைய இளைய வயதினருக்கு உடல் உழைப்பு குறைந்து வருவதும் உடற்பயிற்சி இல்லாததும் இதற்கு முக்கியக்காரணங்கள்.கணினித்துறை பெருவளர்ச்சி பெற்ற பிறகு 35 சதவீத இளைஞர்கள் அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு மூட்டுத்தசை இறுகி மூட்டுவலி வந்துவிடுகிறது. மாறிவரும் உணவுமுறை மூட்டுவலிக்கு அடுத்த காரணம். இளைய தலைமுறையினர் பலரும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால், சிறுவயதிலேயே உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள் வந்து அவதிப்படுகின்றனர். இது நாளடைவில் மூட்டுவலிக்கும்வழி அமைத்துவிடுகிறது.


முழங்கால் மூட்டுவலி :

மூட்டுவலி என்பது உடலில் எந்த மூட்டிலும் ஏற்படக்கூடியதுதான் என்றாலும், முழங்கால் மூட்டில் ஏற்படுகிற வலியைத்தான் 'மூட்டுவலி' ( Arthritis ) என்று பொதுவாக சொல்கிறோம். உடற்பருமன், முதுமை, அடிபடுதல், மூட்டுச்சவ்வு கிழிதல், கிருமித்தொற்று, ருமாட்டிக் நோய், காச நோய், யூரிக் அமிலம் மூட்டுகளில் படிவது போன்றவை முழங்கால் மூட்டுவலிக்குப் பொதுவான காரணங்கள். மூட்டுவலி வந்துள்ள முழங்காலுக்கு அதிகவேலை கொடுத்தால், மூட்டில்நீர் கோர்த்து, வீங்கி மூட்டுவலியை அதிகப்படுத்தும்.


முதுமையில் மூட்டுவலி :

வயதாகஆக, குருத்தெலும்பு தேய்ந்து அழற்சி உண்டாவது இயற்கை. இதற்கு 'முதுமை
மூட்டழற்சி'(Osteoarthritis) என்றுபெயர். முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்பு வழுவழுப்பாக இருக்கும். 'கொலாஜன்' எனும் புரதப்பொருள் இந்தவழுவழுப்புத் தன்மையைப் பாதுகாக்கிறது; குருத்தெலும்பை வலுவாக வைத்துக்கொள்கிறது. முதுமை நெருங்கும் போது, இயற்கையாகவே கொலாஜன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்பு திசுக்கள் தேய்ந்துவிடும். இதன்விளைவால், முழங்கால்மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல மூட்டுவலி ஏற்படுகிறது.


என்ன சிகிச்சை?

எலும்பு தேய்மானத்தால் மூட்டுவலி ஏற்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மூலம் நிவாரணம் பெற முடியும். இவற்றில் SWD, IFT சிகிச்சைகள் பிரதானம். இவற்றுடன் தொடை தசைகளுக்குப் பயிற்சி கொடுத்தால் மூட்டுவலி குறையும். சிலருக்கு முழங்கால் மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசியைப் போட்டால், சில மாதங்களுக்கு வலி இருக்காது. இன்னும் சிலருக்கு 'ஆர்த்ராஸ்கோப்' மூலம் மூட்டின் உட்பகுதி சுத்தம் செய்யப்படும். இதன் பலனால், 6 மாதமோ, ஒரு வருடத்துக்கோ மூட்டுவலி இல்லாமல் இருக்க முடியும். மூட்டுத் தேய்மானம் கடுமையாக இருந்தால், இந்த சிகிச்சைகள் திருப்தி தராது. 'செயற்கைமூட்டு மாற்று சிகிச்சை' தான்சரியான தீர்வு தரும் .


ருமட்டாய்டு மூட்டுவலி :

நம்முடைய நோய் எதிர்ப்பு செல்களே மூட்டுப் பகுதியைத் தாக்கி வீக்கம், வலி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும். இதற்கு'ருமட்டாய்டு மூட்டுவலி'என்று பெயர். இப்போது இளம் வயதினர் பலருக்கும் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதிலும் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் இந்த பாதிப்பு அதிகம். பெரும்பாலும் பரம்பரையாகவே இது வருகிறது. புகைபிடிப்பவர்களுக்கும் மது அருந்துபவர்களுக்கும் ஹார்மோன் பிரச்னை உள்ளவர்களுக்கும் சீக்கிரத்தில் இந்த நோய் தாக்கிவிடுகிறது.


அறிகுறிகள் என்ன?

நோயின் ஆரம்பத்தில் சிறு மூட்டுகளில் வலியும் வீக்கமும் இறுக்கமும் தொல்லை கொடுக்கும். முக்கியமாக காலையில் எழும்போது ஒரு மணிநேரத்துக்கு மேல் கை,கால்களைஅசைக்க முடியாத அளவுக்கு மூட்டுவலி கடுமையாக இருக்கும். விரல்களை நீட்டவோ, மடக்கவோ முடியாமல் போகும். போகப்போக, ஒரேநேரத்தில் பல மூட்டுகள் பாதிக்கப்படும்; உடலில் இரண்டு பக்க மூட்டுகளும் ஒரேமாதிரி பாதிக்கப்படுவது இதன் முக்கியமான அறிகுறி. பெரும்பாலும்கை, மணிக்கட்டு, கால், பாதம்ஆகியவற்றில் உள்ள சிறிய மூட்டுகளில் வீக்கமும் அதிக வலியும் ஏற்படும். இந்த மூட்டுவலி சுமார் 6 வாரங்களுக்கு மேல் நீடிக்கும்.


என்ன பரிசோதனைகள்?

மூட்டுகளை எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். ருமட்டாய் டுஃபேக்டர் பரிசோதனை, CCP எதிரணு பரிசோதனை மற்றும் மூட்டுநீர்ப் பரிசோதனை செய்து நோயை உறுதி செய்ய வேண்டும். நோயின் துவக்கத்தில் வலி நிவாரணிமாத்திரைகளும் மூட்டு அழற்சியைக்குறைக்கும் மாத்திரைகளும்தரப்படும்.இத்தோடு மூட்டில் ஏற்படும் அழற்சி வினைகளை மாற்றக்கூடிய மீத்தோட்ரெக்ஸேட், ஹைட்ராக்சி குளோரோகுவின், சல்ஃபாசலசின், லெஃபுளுநோமைட் ஆகிய மாத்திரைகள் தரப்படும்.


தடுப்பது எப்படி?

ஒமேகா3 கொழுப்பு அமிலம் மிகுந்த மீன் உணவு, வாதாம்பருப்பு,சோயாபீன்ஸ்,காளிபிளவர்,, அடர்பச்சைநிறக் காய்கறிகள், கீரைகள், முட்டைபால், பருப்பு, பயறுகள்ஆகிய உணவுகள்
மூட்டுத்தேய்மானத்தைத் தடுக்கும். உடல்எடையை வயதுக்கு ஏற்றபடிபராமரிக்க வேண்டியது கட்டாயம்.உடல்எடை அதிகரித்தால், மூட்டுக்குஅதிகப்படியான வேலை உண்டாகிறது. இதனால்மூட்டு சீக்கிரமே தேய்ந்துவிடுகிறது. மூட்டுவலி மற்றும் வீக்கத்துக்கு மருத்துவர் யோசனைப்படிதான்மாத்திரை,மருந்துகளைச்சாப்பிட வேண்டும். எக்காரணத்தாலும் சுயமருத்துவம் கூடாது. காரணம், இந்தவலி மாத்திரைகள் சிறுநீரகத்தைப்பாதிக்கும். சர்க்கரை நோய் இருந்தால் அதைக்கட்டுப்படுத்தவேண்டும். தினமும்உடற்பயிற்சி செய்ய வேண்டும். மூட்டுக்குவலிமை தருகின்ற யோகாசனங்கள்செய்வதும் நல்லது. புகைபிடிக்கக்கூடாது. மதுஅருந்தக்கூடாது.நாட்பட்டமூட்டுவலி உள்ளவர்கள் ஒருமுறை பிசியோதெரபி மருத்துவரிடம்ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. இவர், மூட்டுகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கும்,மூட்டுகளை முறையாகப் பயன் படுத்துவதற்கும் பயற்சிகள் செய்வதைக் கற்றுக்கொடுப்பார். இந்தப்பயிற்சிகளைத் தொடர்ந்துசெய்து வர மூட்டுவலி குறையும்.
டாக்டர். கு.கணேசன்
பொதுநல மருத்துவர்
ராஜபாளையம்.
gganesan95@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X