இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெயலலிதா கையெழுத்திட்டாரா: கருணாநிதி சந்தேகம் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெ., கையெழுத்திட்டாரா: கருணாநிதி சந்தேகம்

Added : அக் 12, 2016 | கருத்துகள் (185)
இலாக்கா மாற்ற கோப்புக்களில் ஜெ., கையெழுத்திட்டாரா: கருணாநிதி சந்தேகம்

சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் வகித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூடுதலாக ஒப்படைக்கப்படுவதாக கவர்னர் மாளிகை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை குறிப்பிட்டு திமுக தலைவர் கருணாநிதி சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் : தமிழக ஆளுநர் அவர்கள் நேற்றிரவு வெளியிட்ட அறிவிப்பில், முதல் அமைச்சர் ஜெயலலிதா நிர்வகித்து வந்த அனைத்துத் துறைகளும், இந்திய அரசியல் சாசனத்தின் 166 (3) ம் ஷரத்தின்படி நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குஆளுநர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார் என்றும், அமைச்சரவைக் கூட்டங்களுக்கு நிதியமைச்சரே தலைமை வகிப்பாரென்றும், இந்த ஏற்பாடுகள் அனைத்தும் முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஓர் அரசின் நிர்வாகச் செயல்பாடுகள் எக்காரணம் கொண்டும் தேக்க நிலையில் இருந்திட அனுமதிக்காமல் தொடர்ந்து அரசு இயங்கிட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவே கருதுகிறேன்.
கடந்த 19 நாட்களாக, முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் நீண்ட நாட்கள் மருத்துவ மனையிலேயே இருந்திட வேண்டும் என்ற நிலையில், அவரது உடல் நிலை பற்றி அரசுத் தரப்பில் எந்த விதமான அதிகாரப் பூர்வமான அறிக்கைகளும் இதுவரை வராத நிலையில், பல்வேறு வதந்திகள் உலவிட நேரிட்ட பிறகு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் "அப்பல்லோ" மருத்துவ மனை சென்ற போது, சிகிச்சை பெற்று வரும் முதல் அமைச்சரை நேரில் பார்க்கவோ நலம் விசாரிக்கவோ வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இச்சூழ்நிலையில், நேற்று தமிழக ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை முதல் அமைச்சரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது என்பது வியப்பைத் தருகிறது. ஏனென்றால் முதல் அமைச்சர் தனது இலாக்களை, அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனிப்பார் என்று கோப்பிலே கையெழுத்திட்டு அறிவுரை வழங்கியுள்ளாரா என்ற கேள்வி சிலரிடையே எழுந்துள்ளது.
மேலும், அ.தி.மு.க. வின் சார்பில் மாநிலங்களவையில் அண்மைக் காலம் வரை உறுப்பினராக இருந்த ஒரு அம்மையாரே முதல் அமைச்சரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காரியங்கள் நடப்பதாகக் குற்றஞ்சாட்டி யிருக்கிறார். பல்வேறு தரப்பிலும் விவாதிக்கப்படும் இந்தக் குற்றச்சாட்டிற்கு எந்தவிதமான பதிலும் அரசின் சார்பாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எப்படியிருந்த போதிலும், தாமதமாகவேனும், முதலமைச்சரின் இலாகாக்களை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இனி கவனிப்பார் என்று ஆளுநர் செய்துள்ள அறிவிப்பு நிர்வாக வசதிக்கான ஏற்பாடு என்ற வகையில் ஏற்றுக் கொள்ளலாமே தவிர, பொறுப்பு ஆளுநர், புதிய ஏற்பாட்டிற்கு ஒப்புதல் வழங்குவதற்கு முன்பு, அரசியல் சட்டத்தின் பரிமாணங்கள் அனைத்தையும் இந்தக் குறுகிய இடைவெளியில் முழுமையாகப் பரிசீலித்திருப்பாரா என்று எழுந்துள்ள அய்யப்பாட்டினை அறவே புறக்கணித்து விட முடியாது. இவ்வாறு கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X