வளம் பெற ஐந்து வழிமுறைகள்| Dinamalar

வளம் பெற ஐந்து வழிமுறைகள்

Added : அக் 13, 2016 | கருத்துகள் (1)
 வளம் பெற ஐந்து வழிமுறைகள்

ஒரு தொழிலகம் மற்றும் வீடு உன்னதமான நிலையை அடைவதற்கு உதவும் ஐந்து அடிப்படை செய்கைகளை உள்ளடக்கிய ஐந்து ஜப்பானிய சொற்களால் விவரிக்கப்படுவதை ஐந்து 'எஸ்' என்கிறோம்.
செய்ரி- - அப்புறப்படுத்துதல்செய்டன் - ஒழுங்கு படுத்துதல்செய்சோ - துப்புரவாக்குதல்செய்கெட்சு - நிர்ணயித்தல்சிட்சுகே - பயிற்சியும் கட்டுப்பாடும்சேப்டி - பாதுகாப்பு
இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் தொழிற்சாலையிலும் பல்வேறு மாற்றங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. ஐந்து 'எஸ்' செயல்களை செய்வதற்கு எல்லா இடமும் பொருத்தமான இடமே. வாடிக்கையாளர்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே தொழிற்சாலை நிரந்தரமாக இயங்க முடியும் என்ற ஒரு கட்டாயமான சூழ்நிலை உருவாகி வருகிறது.தொழிற்சாலைகள் 2000-ம் ஆண்டுக்கு முன் தற்போது உள்ள போட்டியான நிலையை சந்திக்கவில்லை. தற்போதைய கால கட்டத்தில், மிக உயர்ந்த தரமான பொருட்களை குறைந்த விலையில் உரிய நேரத்தில் கொடுத்தால் மட்டுமே வாடிக்கையாளர்கள் முழுமையான திருப்தியை அடைய முடியும் என பல தொழிற்சாலைகள் உணரத் தொடங்கியிருக்கின்றன.தொடர்ச்சியான முன்னேற்றம் அடைய வேண்டுமென்றால் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் மற்றும் வீட்டிலும் ஏற்படக்கடிய அனைத்து விரயங்களையும் முறையாகவும், தொடர்ச்சியாகவும் தவிர்க்க வேண்டும். இதற்கு ஊழியர்கள் மற்றும் வீட்டின் நபர்களிடம் முழுமையான ஈடுபாடு அவசியம் தேவை. பல வகையான விரயங்கள் ஒரு தொழிற்சாலையின் அல்லது வீட்டின் அன்றாட செயல்களில் நிகழ்கின்றன.ஆனால், பலரும் அதை பற்றி தெரிந்து கொள்வதில்லை. 24 மணி நேரத்தில், கால விரயமாக தேடுவதற்கு மட்டும் நாம் சராசரியாக 2 மணி நேரம் வீணாக்குகிறோம். அவற்றை குறைப்பதற்கு நாம் முயற்சிப்பது இல்லை. நமது செயல்களில் கால தாமதம் இல்லாமலும், பிழைகள் இல்லாமலும் பல செயல்கள் நடப்பதில்லை. கால தாமதத்தினாலும், பிழையுள்ள செயல்களாலும் அதிகமான பொருள் விரயம், மனித வள விரயம், பண விரயம், கால விரயம் போன்ற பல விரயங்கள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதற்கோ அல்லது குறைப்பதற்கோ உள்ள வழிமுறைகள் தான் ஐந்து 'எஸ்.'
ஐந்து 'எஸ்' எப்பொழுது?
'ஒன்றே செய்யினும் அதை நன்றே செய்கநன்றே செய்யினும் அதை இன்றே செய்க'நல்ல செயல்களை தொடங்க நாம் காலத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இருந்தாலும் தொழிற்சாலையிலோ, அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ கீழ்கண்ட அறிகுறிகள் அதிகமாக தோன்றினால் உடனே ஐந்து 'எஸ்' செயல்கள் தொடங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முடிவு செய்யலாம்.
அப்புறப்படுத்துதல் : நாம் ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு முதல்நாள் போகிப்பண்டிகை அன்று ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்ற பழக்கத்தை இன்றும் கடைபிடிக்கிறோம். நமது முன்னோர்கள் ஒரு வீட்டின் ஆரோக்கியமான சூழ்நிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது பழைய தேவையற்ற குப்பைகளை களைய வேண்டும் என்று, அதற்கென ஒரு விழாவை அமைத்து நல்ல பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.தேவையற்ற பொருட்களை களைவதற்கும், தேவையுள்ளவைகளை சரியாக வைத்து கொள்வதற்கும் உறுதியான குறிக்கோள் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
ஒழுங்குபடுத்துதல் :
'எப்பொருள் எத்தன்மை தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு'தேவையுள்ள பொருட்களை தேவைக்கேற்ப வகைப்படுத்துவது முக்கியம். வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் பொருட்களின் உபயோகத்திற்கு தகுந்தபடி, அடிக்கடி தேவையானவை, அவ்வப்போது தேவையானவை, எப்போதாவது தேவையானவை என்று வகைப்படுத்தலாம். வீட்டில் சமையலில் அடிக்கடி தேவைப்படும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அஞ்சறை பெட்டி, ஸ்டவ் அடுப்பின் அருகாமையில் இருக்கும். அவ்வப்போது உபயோகப்படும் செருப்புகளை வைப்பதற்கு தனியாக ஓர் இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்.எப்போதாவது தேவைப்படுகிற தட்டு, முட்டு சாமான்கள் அநேகமாக பரணில் வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் உரிய ஓர் இடத்தை ஏற்படுத்தி வைக்கும்போது, பொருட்களை தேடி அலைவதினால் ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப்படுகின்றது. சரியான பொருட்களை சரியான நேரத்தில் பயன்படுத்துவதால் பொருட்களின் தரம் உயர்த்தப்பட்டு மனித விரயம், பொருள் விரயம் தடுக்கப்படுகிறது. துப்புரவாக்குதல் வேலை பார்க்கின்ற இடமும், நாம் வேலை பார்க்கும் இயந்திரம் மற்றும் உபயோகிக்கும் கருவிகளும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். தொழிற்சாலை மற்றும் வீட்டின் துாய்மை என்பது வெளியிலிருந்து பார்வையாளர்கள் வரும் சமயங்களில் மட்டுமே, மேற்கொண்டால், மற்ற நேரங்களில் உள் உறுப்புகளில் அதிவிரைவில் தேய்மானம் ஏற்பட்டு உற்பத்தியில் தரக்குறைவும், சேதாரமும் ஏற்படுகிறது.நமது நாட்டில் ''செய்யும் தொழிலே தெய்வம், அதில் திறமைதான் நமது செல்வம்'' என்று ஆண்டுக்கு ஒரு முறை தொழிலுக்கு வந்தனம் செய்யும் விதத்தில் 'ஆயுத பூஜை' கொண்டாடுகிறோம். இதற்கு தேவையான செய்கைகள், துலக்குதல், துடைத்தல், பெருக்குதல் கருவிகளை ஆய்வு செய்தல், பாலீஷ் மற்றும் பெயிண்ட் அடித்தல் முதலியன. அந்த காலத்து கடைகளில் மரத்திலான கதவுகளை கொண்டு வரிசையாக மூடி அடைத்து வைப்பார்கள். 1,2,3,4... வரிசை முறையாக அந்த மரப்பலகையை மாற்றி அமைத்தால் பொருத்த முடியாது. இதற்கு ஜப்பானிய முறையில் 'போகாயோக்' என்று பெயர்.ஒவ்வொரு வேலை இடத்திற்கும் ஒரு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கால வரம்புக்கு பொறுப்பாளராக அமைத்து அட்டவணை எழுதி வைக்க வேண்டும். தொழிற்சாலையில் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு கருவிகள், நடைபாதைகள், 'ஸ்டோர்ஸ்' போன்ற இடங்களில் சரியான அமைப்பை தீர்மானித்து பெயின்ட் மார்க் செய்து நிர்ணயிக்க வேண்டும். இந்த முன்னேற்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டுமென்றால் பலரும் எளிதில் புரிந்து கொள்ள கூடிய 'விசுவல் கன்ட்ரோல்' முறையை ஏற்படுத்த வேண்டும் இதற்கு 'லிஸ்ட்' ஒன்று தயார் செய்து அவ்வப்போது நடக்கும் செயல்களை, அதிகாரி மூலம் மதிப்பெண் கொடுத்து, ஆய்வு செய்து முன்னேற்றங்களை காணலாம். சில நேரங்களில் குறைந்த மதிப்பெண்கள் பெறும் பகுதிகளில், அதற்கான பிரச்னைகளை என்ன என்று தெரிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கு வழி காணலாம். பயிற்சியும் கட்டுப்பாடும் ஒரு நிறுவனத்தில் ஐந்து 'எஸ்' செயல்கள் சிறப்பாக நடக்க வேண்டுமென்றால் எல்லா நிலைகளிலும் போதிய பயிற்சி முக்கியம். வகுப்பறை பயிற்சி, புகைப்படங்கள், வீடியோ படங்கள் முதலியவற்றை பயன்படுத்தி பயிற்சி தரலாம். ஒரு குறிப்பிட்ட வேலை இடத்துக்கு பயிற்சி நடத்த வேண்டுமென்றால் ஐந்து 'எஸ்' செயல்கள் குறித்து விளக்கம் கூறிவிட்டு, அப்போதே அந்த வேலை இடத்தின் நிலையை வீடியோ படம் எடுத்து காண்பிக்கலாம். அவர்கள் தாங்களாகவே குறைகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்ய முன்வருவார்கள்.எல்லாருக்கும் எளிதான செயல் என்பது பிறரிடம் குற்றம் கண்டு, குறை கூறுவது. அதனால்தான் ''சொல்லுதல் யார்க்கும் எளிய அறியவாம் சொல்லிய வண்ணம் செயல்'' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். நாம் ஐந்து 'எஸ்' செயல்முறைகளை நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அதி விரைவில் நாம் சந்திக்கவிருப்பது 'ஐந்து 5 டி'. அதாவது டிலேயிஸ்! - (தாமதங்கள்), டிபெக்ட்ஸ் - (குறைபாடுகள்), டிஸ் சர்ட்டிபைஸ்டு கஸ்டமர் - (வாடிக்கையாளர்களின் அதிருப்தி), டிகிளினிங் புராபிட்ஸ் - (குறைந்து வரும் லாபங்கள்), டிமாரலைஸ்டு எம்ப்ளாயர்ஸ் - (உற்சாகம் குறைந்த ஊழியர்கள்).
தினசரி நடைமுறை : ஹவுஸ் கீப்பிங் என்பது நேர்த்தியான வழிமுறை. இதன் மூலம் காண்பது துாய்மை. துாய்மை நிலை தருவது உன்னதமான தரம். தரம் உயர்ந்தால் நாம் பெறுவது உற்பத்திக்கான உயர்வு. உற்பத்தி திறன் உயர்வதால் நாம் அடைவது வளமான வாழ்க்கை. வளமான வாழ்க்கையே நமது மகிழ்ச்சியின் எல்லை.
ஏ.குமாரவடிவேல், கல்லுாரி முதல்வர்

காரைக்குடி, 94438 50603.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X