வலியை வெற்றிகொள்ள வழி : அக்.16 உலக மயக்கவியல் தினம்| Dinamalar

வலியை வெற்றிகொள்ள வழி : அக்.16 உலக மயக்கவியல் தினம்

Added : அக் 14, 2016 | கருத்துகள் (1)
வலியை வெற்றிகொள்ள வழி  : அக்.16 உலக மயக்கவியல் தினம்

பொதுவாக 'வலி' என்பது நோய்களின் ஒரு அறிகுறியாக மட்டுமே அறியப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவ உலகில், நோயை குணப்படுத்த மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் போது அதி பயங்கரமான வலி ஏற்படுவது தவிர்க்க இயலாதது. அந்த வலியை முழுமையாக நீக்க வேண்டும். இல்லையென்றால் நோயாளிக்கு அளவில்லாத துன்பமும், மரணமும் கூட சம்பவிக்கலாம் என்பது அறிவியல் உண்மை. அறுவை சிகிச்சை துறைகளில் முன்னேற்றத்திற்கு அடிப்படை காரணம் வலி நீக்கியல் அல்லது மயக்கவியல் துறையை சார்ந்த 'அனஸ்தீசியா' மருத்துவ நிபுணர்கள்தான். அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் அளவில்லாத வலியை முழுமையாக நீக்கி, அதே சமயம் வலி நீக்கும் முறைகளினாலோ (மயக்க நிலையினால்), அறுவை சிகிச்சையினாலோ நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல், இதயம், மூளை, சுவாச செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து, அறுவை சிகிச்சை நிபுணர் தன் பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க வழிவகுக்கின்றனர்.அந்த காலத்தில்பண்டைய காலங்களில் அறுவை சிகிச்சையின் போது உண்டாகும் அளவுக்கு அதிகமான வலியினால் ஏற்படும் மரணங்களை தடுக்க அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டன. ஆயினும், நோயினால் அழுகிவிட்ட காலை வெட்டி நீக்குதல் போன்ற உயிர்காக்கும் சில சிகிச்சைகள் மட்டும் செய்யப்பட்டு வந்தன. அத்தகைய நேரங்களில் பலசாலிகளான நான்கு ஆண்கள் நோயாளியை அமுக்கி பிடித்துக்கொள்ள மருத்துவர் அவசர அவசரமாக சில நிமிடங்களில் அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். சிகிச்சைக்கான வேகம், அக்காலத்தில் அறுவை சிகிச்சை நிபுணரின் சிறப்பு தகுதியாக கருதப்பட்டது. சில சமயம் வலியினால், மரணங்கள் ஏற்பட்டாலும் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருந்தனர்.கண்டுபிடிப்பு௧௬ம் நுாற்றாண்டு முதலே அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால், வலியை நீக்கும் வழிகள் கண்டறியப் படவில்லை. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மெசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் பல் மருத்துவ மாணவராக இருந்தவர் வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன். இவர் வலிநீக்கும் முறைகள் குறித்து தமக்கிருந்த ஆர்வம் காரணமாக, ௧௮௪௬, அக்.,௧௬ல், 'ஈதர்' என்ற வேதிப்பொருளை உருவாக்கி ஒரு கருவியின் மூலம் ஆவியாக்கினார். பின்னர், அதை நோயாளிகளை சுவாசிக்க செய்வதன் மூலம் வலியை நீக்க முடியும் என்பதை செயல்படுத்தி காட்டினார்.கில்பர்ட் அப்பாட் என்ற நோயாளியின் கழுத்திலிருந்த ஒரு கட்டியை ஜான் காலின் வாரன் என்ற மருத்துவர் உலகிலேயே முதன் முறையாக எவ்வித வலியும், அசைவுகளும் இன்றி அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்.ஈதர் டேஅதை பார்த்த பிரபல மருத்துவர்கள் 'நோயாளி அசையவில்லை. ஆனால் மூச்சு விடுகிறார். உயிரோடு உள்ளார்' என ஆச்சரியப்பட்டனர். இந்நிகழ்ச்சி நடந்த இடம், 'ஈதர் டோம்' என்ற பெயரில் நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த செய்தி வெகு விரைவில் உலகமெங்கும் பரவி 'ஈதர்' உலகெங்கிலும் பயன்பாட்டுக்கு வந்து, வலியற்ற அறுவை சிகிச்சைகள் துவங்கியது.லண்டனில் ௧௮௪௬, டிச., ௧௯ல் முதன் முதலாக 'ஈதர்' பயன்படுத்தப்பட்டது. ௧௮௪௭ மார்ச் ௨௩ல் இந்தியாவில் கொல்கத்தா மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் முதன் முதலாக 'ஈதர்' பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடந்தது.'ஈதர்' பயன்பாடு முதன் முதலாக செயல்முறை விளக்கம் செய்யப்பட்ட அக்.,௧௬ 'ஈதர் டே' (உலக மயக்கவியல் தினம்) என உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.குளோரோபாம்௧௮௪௭ல் இங்கிலாந்து எடின்பர்க் நகரை சேர்ந்த ஜேம்ஸ் யங் சிம்சன் என்ற மகப்பேறு மருத்துவர் 'குளோரோபாம்' என்ற மயக்க மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். ஆரம்ப நாட்களில் வலியின்றி பிரசவம் நிகழ அதை பயன்படுத்தினார். கிறிஸ்தவ மத தலைவர்கள் 'இது மத கோட்பாட்டுக்கு எதிரானது; பெண்கள் வலியுடன்தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்' என கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், மயக்க மருந்து தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. விக்டோரியா மகாராணியின் இரண்டு பிரசவங்களின் போதும் (௧௮௫௩ மற்றும் ௧௮௫௭ல்) இம்மருந்து பயன்படுத்தப்பட்ட பின்னர் மத ரீதியான எதிர்ப்பு குறைந்தது.'குளோராபாம்' அறுவை சிகிச்சையின் போது சிறப்பான மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்ட போதும், இதயம் பலவீனமாகி எதிர்பாராமல் அதன் இயக்கத்தை நிறுத்தி விடும் ஆபத்தான பக்க விளைவு, மரணங்களை விளைவித்தது. ஆகவே, வெகு விரைவில் இது பாதுகாப்பற்ற மருந்து என அவப் பெயருக்கு ஆளானது. இருப்பினும், மயக்க மருந்து என்றாலே 'குளோரோபாம்'தான் என்று மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு பயன்பாட்டில் இருந்தது.பாதுகாப்பளிக்கும் நிபுணர்கள்ஆனால், 'ஈதர்' பயன்பாடு அதிகரித்தது. இது, மிகவும் பாதுகாப்பான பக்கவிளைவுகள் இல்லாத, விலை மலிவான மயக்க மருந்து என்ற பெருமையுடன் சுமார் ௧௬௦ ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது. இன்றும் சில மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். இன்று மயக்கவியல் துறை பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த உபகரணங்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றில் அளவற்ற வளர்ச்சி கண்டுள்ளது. மயக்கவியல் நிபுணர்கள், பல்வேறு மருந்துகளை தேவையான அளவில், சரியான நேரத்தில் செலுத்தி நோயாளியின் மூளை, இதயம், சுவாசகோளம் ஆகிய பிராண உறுப்புகளின் இயக்கத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அவற்றின் செயல் பாடுகளில் தேவையான மாற்றங்களை செய்து அறுவை சிகிச்சை சிறப்பாக நடக்க சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றனர். அறுவை சிகிச்சை முடிந்ததும் மீண்டும் நோயாளியை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, தீவிரமாக கண்காணித்து, பாதுகாப்பான திருப்திகரமான நிலையில் வைத்திருப்பதையும் மயக்கவியல் நிபுணர்கள் செய்கின்றனர்.தொடரும் முயற்சிமயக்கவியல் என்பது அறுவை சிகிச்சைக்கு மட்டும் இல்லாமல் பல்வேறு பரிணாமங்களை கொண்டுள்ளது. அவசர கால உயிர் பாதுகாப்பு, தீவிர சுவாச சிகிச்சை பிரிவு, வலியில்லா பிரசவ சேவை, நீண்ட கால வலி நீக்கம், புற்று நோய் வலி நீக்கம் போன்ற பல்வேறு சிறப்பு பிரிவுகள் கொண்ட துறையாக செயல்படுகிறது.மனிதன் வலியை வெற்றிகொள்ள மேற்கொண்ட முயற்சியின் முதல்படியில் கால்பதித்து ௧௭௦ ஆண்டுகள் ஆகின்றன. வலியை முழுமையாக வெற்றி கொண்டு விட்டோமா என்ற கேள்விக்கு பதில், முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன என்பதுதான்.- டாக்டர் எஸ். ஏகநாதபிள்ளைமயக்கவியல் துறை முன்னாள் பேராசிரியர், மதுரை,௯௮௪௨௧ ௬௮௧௩௬.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X