சென்னை: தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, நேற்று முன்தினம், அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் ஜெலலிதாவின் உடல் நலம் குறித்து,
சசிகலாவிடம் விசாரித்து உள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவால், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், மருத்துவமனை சென்று, அவரது உடல் நலம் பற்றி விசாரித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு,
கருணாநிதியின் ஒப்புதலுடன், அவரது மனைவி ராஜாத்தி, அப்பல்லோ மருத்துவமனை சென்றார். அங்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்து, முதல்வரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்; இந்த சந்திப்பு, 30 நிமிடங்கள் நீடித்தது. ஜெயலலிதா பூரண நலம் பெற்று, விரைவில் வீடு திரும்பி, பணிகளை கவனிக்க வேண்டும் என, சசிகலாவிடம், ராஜாத்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார்; கருணாநிதி சார்பிலும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதற்கு, சசிகலா நன்றி தெரிவித்து உள்ளார். அவரை தொடர்ந்து, விரைவில், தி.மு.க., மகளிர் அணி செயலர், கனிமொழியும், அப்பல்லோ மருத்துவமனை செல்ல திட்டமிட்டு உள்ளார் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், எம்.எல்.ஏ.,க்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோருடன், அப்பல்லோ சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.