புதுடில்லி: ''தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை அதிக விலைக்கு விற்றால், அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும்,'' என, மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் எச்சரித்து உள்ளார்.
அதிக விலை:
இதுகுறித்து டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் ஆகியவை, அதிகபட்ச விற்பனை விலையைவிட, கூடுதல் விலைக்கு, தியேட்டர்கள், விமான நிலையங்கள், மால்கள் போன்றவற்றில் விற்கப்படுகின்றன. இது தொடர்பாக, நுகர்வோர் அளித்த ஒரு புகாரில், அபராதம் விதித்து, தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால், அதிக விலைக்கு விற்பது தொடர்கிறது.
சிறை தண்டனை:
இது குறித்து, நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் பாட்டில், குளிர்பானங்களை அதிக விலைக்கு விற்றால், அபராதம், சிறை தண்டனை விதிக்கப்படும். தண்ணீர் பாட்டில்களுக்கு, ஐ.எஸ்.ஐ., தரச் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதை உறுதியுடன் செயல்படுத்த வேண்டும்.
தரமான தயாரிப்பு:
தரம் இல்லாமல், 'மேக் இன் இந்தியா' திட்டம் வெற்றி பெற முடியாது. 'மேட் இன் அமெரிக்கா' என்ற முத்திரை இருந்தால், சந்தோஷமாக வாங்கும் இந்தியர்கள், இந்திய தயாரிப்புகளை வாங்குவதற்கு யோசிக்கின்றனர். இந்த நிலை மாற, நல்ல தரத்துடன் பொருட்களை தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.