யார் பைத்தியக்காரன்?

Updated : அக் 15, 2016 | Added : அக் 15, 2016 | கருத்துகள் (33)
Share
Advertisement
யார் பைத்தியக்காரன்?தஞ்சை கண்டிதம்பட்டு பொட்டச்சாவடி புதுஆற்றாங்கரையோரம் சில நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளை பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து கிடக்க நடுவில் ஒரு பிணம் மிதந்து கொண்டிருந்தது.தகவலறிந்து போலீசார் பிணத்தை மீட்டனர்.ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்ற போது, இறந்து
யார் பைத்தியக்காரன்?

யார் பைத்தியக்காரன்?


தஞ்சை கண்டிதம்பட்டு பொட்டச்சாவடி புதுஆற்றாங்கரையோரம் சில நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளை பல்வேறு பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து கிடக்க நடுவில் ஒரு பிணம் மிதந்து கொண்டிருந்தது.
தகவலறிந்து போலீசார் பிணத்தை மீட்டனர்.

ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இருபது வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்ற போது, இறந்து போனவர் பெயர் ஜவகர் என்பதும் தஞ்சை கருணாவதிநகர் குமரன் என்பவர் மகன் என்பதும் தெரியவந்தது.
பிணம் ஒப்படைக்கப்பட்டது,'வாழவேண்டிய வயதில் உனக்கு அப்படி என்னப்பா பிரச்னை?'என்று பெற்றோரும் உற்றோரும் கதறி அழுது பின் அடக்கம் செய்துவிட்டனர்.

இது நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு ஜவகர் தொடர்பான பொருட்களை அவரது நினைவாக எடுத்து வைத்துக்கொண்டு ஜவகரின் அப்பா குமரன் கண்களில் ஜவகரின் மொபைல் போன் தட்டுப்பட்டது.
அதை எடுத்து ஆன் செய்தவர் அதிர்ந்துபோய்விட்டார்

காரணம் அதில் இருந்த ஜவகரின் வார்த்தைகள்

நான் ஜவகர் பேசுகிறேன், எவ்வளவோ முறை இந்த பிளாஸ்டிக்கின் ஆபத்தை சொல்லிப்பார்த்தும் யாரும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.மெல்ல மெல்ல கொல்லும் பிளாஸ்டிக் அரக்கனிடம் இருந்து இந்த மக்களை காப்பாற்ற அக்கறை இல்லாத இந்த சமூகத்தில் வாழவே பிடிக்கவில்லை, ஆகவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என் மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை, இயற்கை அன்னையை பகைத்துக்கொண்டு யாராலும் உயிர்வாழமுடியாது ,என் மரணத்திற்கு பிறகாவது இந்த பிளாஸ்டிக் ஆபத்தை உணர்ந்து ஒழிக்க அனைவரும் முன்வரவேண்டும்...என்று ஜவகர் அதில் பேசியிருந்தார்.
இதைக்கேட்டதும் குமுறி குமுறி அழுத அவரது தந்தை பிளாஸ்டிக்கை ஒழிக்கவேண்டும் என்ற உன்னத கோரிக்கைக்காக என் மகன் உயிரை விட்டுள்ளான் என்று சொல்ல யார் இந்த ஜவகர் என்ற விசாரணையில் கவனம் திரும்பியது.

பத்தாவது வரை படித்துள்ள ஜவகர் அதற்கு பிறகு எலக்ட்ரீசியனாக வாழ்ந்து வந்தார்.எப்போது எப்படி இவர் மனதில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான கருத்து விழுந்தது என்பது தெரியவில்லை ஆனால் அழுத்தமாக ஆழமாக விழுந்துவிட்டது.
அதன்பிறகு கடந்த சில வருடங்களாகவே வீட்டில் துணிப்பைதான், யாராவது பிளாஸ்டிக் பை உபயோகித்தால் கடுமையாக கோபப்படுவார்.நம் வீட்டை திருத்தினால் பத்தாது அக்கம் பக்கம் வீடுகள் பின் நமது தெரு அடுத்த தெரு ஏன் ஊரையே திருத்தவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்.

வெறுமனே சொல்லிக்கொண்டு இருக்காமல் எலட்ரீசன் வேலை இல்லாத நேரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பைகளை மாலையாக போட்டுக்கொண்டு நான்தான் பிளாஸ்டிக் அரக்கன் உங்கள் மண்ணை அழிக்கபோகிறேன் உங்களுக்கு உணவு இல்லாமல் செய்யப்போகிறேன் உங்களுக்கு புற்றுநோய் தரப்போகிறேன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு மக்கள் சந்திக்கும் இடங்களில் போர்டை வைத்துக்கொண்டு மணிக்கனக்கில் உட்கார்ந்திருப்பார்.இயற்கையை காப்போம் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று, யார் கேட்கிறார்கள் கேட்கவில்லை என்ற கவலை இல்லாமல் கோஷம் போட்டுக்கொண்டே இருப்பார்.

யாரோ பைத்தியக்காரன் வேலை இல்லாமல் உட்கார்ந்திருக்கிறான் என்று கேலி பேசி சென்றனர், போகிற போக்கில் போலீசிலும் போட்டுக்கொடுத்துவிட்டு சென்றனர்.போலீசாரும் வந்து பொதுஇடத்தில் இப்படியெல்லாம் உட்காரக்கூடாது என்று துரத்திவிட்டனர்.

பஜாரில் துரத்தினால் கலெக்டர் அலுவலக வாசலில், அங்கேயும் துரத்தினால் பஸ்நிலையம் அங்கே துரத்தப்பட்டால் ரயில் நிலையம் என்று மக்கள் கூடுமிடமாக பார்த்து பார்த்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்தார்.
பிரச்சாரத்திற்கு கிடைத்த பலன் எல்லாம் பைத்தியக்காரன் பட்டம்தான்.

தன் மீதும் தன் பிரச்சாரத்தின் மீதும் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக செல்போன் டவர் கலெக்டர் அலுவலகம் கட்டிடம் மீதெல்லாம் ஏறி கத்திப்பார்த்தார் பைத்தியக்காரனாக பெயர் பெற்றவர் இதன்பின் சுத்த பைத்தியக்காரன் பட்டம் பெற்றவரானார்.
பார்தீனியத்தைவிட படுபயங்கரமாக விஷமாக பரவும் பிளாஸ்டிக்கின் ஆபத்தை ஏன் யாருமே உணரமாட்டேன் என்கிறார்கள், ஒரு நல்ல விஷயத்தை காது கொடுத்து கேட்டு ஒத்துழைக்கமாட்டேன் என்கிறார்கள் என்ற ஆதங்கம் மன உளைச்சலாக மாறியதன் விளைவு செல்போனில் மரணவாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு தஞ்சை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையெல்லாம் கேள்விப்பட்ட பிறகும் கையில் இருக்கும் பிளாஸ்டிக் பையை துாக்கி எறியாமல்,ஆயிரம் இருந்தாலும் தற்கொலை செய்து கொண்டு இருக்கக்கூடாது பைத்தியக்காரன் என்றுதான் இன்னமும் இந்த சமூகம் இப்போதும் சொல்கிறது.
ஜவகரை பைத்தியக்காரன் என்று இன்னோருமுறை சொல்லும் முன்பாக பிளாஸ்டிக் ஏற்படுத்தும் அபாயத்தில் சிலவற்றை மட்டும் படித்துவிடுங்கள்.

பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.தோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகின்றது. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது.

மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படும்.
நெகிழி உறைகள்சுற்றப்பட்டு வரும் உணவுப் பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது.

எளிதில் மட்காத, சிதையாத நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சக்கடைகள் ஆகியவைகளில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி துர்நாற்றம், கொசுவளர்ப்பு, நோய்கள் ஆகியவை ஏற்படக் காரணமாகின்றன.
கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.

மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.
மக்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

கடற்கரை ஓரம், கடலில் எரியும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்துவிடக் கூடியவை.
நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது. இது கூடுதல் தீமையை தான் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது,உருவான காலம் முதல் இந்த மண்ணையும் மக்களையும் மெள்ள மெள்ள கொல்லும்.இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்காலும் அதுதந்த நோய்களாலும் நிரம்பிவழியும்.

இப்போது சொல்லுங்கள் இவ்வளவு கொடுமையான பிளாஸ்டிக்கை எதிர்த்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட ஜவகர் பைத்தியக்காரனா?நீங்கள்தான் சொல்லவேண்டும்.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
18-நவ-201612:17:44 IST Report Abuse
Rajesh ஜவகர் இன்னும் சில பேரின் துணை கொண்டு கூட்டாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கலாம். இப்போதோ சோசியல் மீடியா உதவி மூலம் பல பேர் ஒன்றுபடுத்தியிருக்கலாம். நல்ல மனிதரை இயற்கை அன்னை இழந்துவிட்டது. என்னால் முடிந்தவரை நான் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கிறேன். உங்கள் ஆத்ம சாந்தி பெற வேண்டுகிறன்
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
18-நவ-201606:05:00 IST Report Abuse
Rajesh முதலில் இந்த தி.நகரில் உள்ள கடாயில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க வேண்டும். தினமும் எவ்வளவு பிளாஸ்டிக் பைகளை கொடுக்கிறார்கள் தெரியுமா? மரத்தை காப்பாற்றுகிறேன் பேர்விழி என்று இந்த பிளாஸ்டிக்கை கட்டிக்கொண்டு அழுகிறோம். இதற்கெல்லாம் தீர்வு நம் வீட்டில் இருந்து துணிப்பை எடுத்துகொண்டு செல்வதுதான். துணிப்பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு 1 % சலுகை என்று சொன்னால் இந்த பிளாஸ்டிக் பிரச்னையில் இருந்து விடுபட்டுவிடலாம் செய்யுமா இந்த அரசாங்கமும் தொழில் நிறுவனங்களும்
Rate this:
Cancel
Rajendran Pillai - Chennai,இந்தியா
13-நவ-201608:11:30 IST Report Abuse
Rajendran Pillai ஜவகர் இன்னும் சில பேரின் துணை கொண்டு கூட்டாக விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கலாம். பைத்தியக்காரன் பட்டமும் வாங்காமல் இருந்திருக்கலாம். இருந்தாலும் அவரின் முயற்சிக்கு தலை வணங்குகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X