மரம் வெட்டியதால் வந்த கோபம் மரக்கட்டில் வந்ததால் சுபம்

Added : அக் 18, 2016 | |
Advertisement
""தீபாவளிக்கு இன்னும், பத்து நாள்தான் இருக்கு. வா...வா... சீக்கிரம் போய், டிரஸ் எடுத்துட்டு வரலாம்,'' என்று கூறி, பட்டென்று, வண்டியை கிளப்பினாள் மித்ரா. பயணத்தில், சும்மா போக முடியுமா என்ன? வழக்கம் போல, வாயை திறந்த சித்ரா, ""ஆள் பிடிக்கும் வேலை மட்டும், அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே முடியாது போலிருக்கே,'' என்றாள்.""உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, இது பரவலாக
மரம் வெட்டியதால் வந்த கோபம் மரக்கட்டில் வந்ததால் சுபம்

""தீபாவளிக்கு இன்னும், பத்து நாள்தான் இருக்கு. வா...வா... சீக்கிரம் போய், டிரஸ் எடுத்துட்டு வரலாம்,'' என்று கூறி, பட்டென்று, வண்டியை கிளப்பினாள் மித்ரா. பயணத்தில், சும்மா போக முடியுமா என்ன? வழக்கம் போல, வாயை திறந்த சித்ரா, ""ஆள் பிடிக்கும் வேலை மட்டும், அரசியல் கட்சிகளுக்கு எப்போதுமே முடியாது போலிருக்கே,'' என்றாள்.
""உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, இது பரவலாக எல்லா இடத்திலும் நடந்ததே. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி யும் முரசு கட்சி, தாமரை கட்சி என, கிடைத்த இடத்தில் இருந்து, ஆட்களை இழுத்தனரே, '' என்றாள் மித்ரா.
""அந்த ஆள் இழுப்பு வேலையெல்லாம், உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைத்ததால, கட்சிக்காரங்களும் கொஞ்ச நாளைக்கு தள்ளி வெச்சாங்க. இதை வெச்சு, தீபாவளி கொண்டாட திட்டமிட்டிருந்த வர்களுக்கு தான் பெரிய ஏமாற்றம்,'' என சித்ரா கூறினாள்.
""அப்புறமென்ன? பொதுக்கூட்டம், பேரணின்னு, ஆள் பிடிப்பு வேலை நடக்குதா?'' என, மித்ரா கேட்டாள்.
""அதெல்லாமில்ல. சி.எம்., சீக்கிரம் குணமடைய வேண்டி, பல பகுதிகளில் கட்சி நிர்வாகிங்க, தொண்டருங்க பிரார்த்தனை செய்றாங்க. திருப்பூர் மாவட்டத்தில, அமைச்சர் தன்னோட ஊர்ல, அதே போல் கட்சிக்காரர்களை ஏராளமாக திரட்டி, பால் குடம் எடுத்து வேண்டுதல் நிறைவேத்தியிருக்கார்,'' என, சித்ரா விளக்கினாள்.
""அடடே! அதுக்குத்தான் ஆட்களை திரட்டினாங்களா,'' என்று கேட்டாள் மித்ரா.
""ஆமா. பகுதிவாரியாக பொறுப்பாளர்களை நியமிச்சு, ஆட்களை வரச்சொல்லியிருக்காங்க. காலையில் 9:00 மணிக்கு துவங்க இருந்த நிகழ்ச்சிக்கு, மினிஸ்டர், 11:00 மணிக்கு மேல் தான் வந்தாராம். அவர் வருவதற்கு முன்பே, "குடம் எனக்கு சின்னதா கொடுத்துட்டாங்க. அவங்களுக்கு பெரிசா கொடுத்தாங்க' அப்படின்னு வாக்குவாதம் நடந்துச்சாம். இதில், பொறுப்பாளர்கள் சிலர் தங்கள் தரப்பில் ஆட்களை அழைத்து வருவதற்காக, சிலருக்கு தலைக்கு இருநூறு ரூபாயும், இனாமாக பால்குடமும் கொடுத்தாங்களாம்,''என்றாள் சித்ரா.
""அது சரி. தேர்தல் செலவுக்கு பதிலாக, வேண்டுதல் செலவென்று கட்சி நிர்வாகிகள் கணக்கு போட்டிருப்பாங்க. புறநகர் மாவட்டம் சார்பில் மட்டுந்தான் வேண்டுதல் நடந்துச்சா? மாநகர் மாவட்டம் எதுவும் செய்யலியா?,'' என்று வினவினாள் மித்ரா.
""மாநகர் மாவட்ட தரப்பில, ஊரகப்பகுதி களில் உள்ள கோவில்களில், தொண் டர்களை அழைச்சிட்டு போய், அபிஷே கம், பூஜைன்னு, செஞ்சிருக்காங்க,'' என்று, சித்ரா பதிலளித்தாள்.
""எவ்வளவு தான் பிரச்னைன்னாலும், கொஞ்சம் கூட அலட்டிக்காம, செய்யற தவறை, போலீசார் சிலர் தொடர்ந்து கிட்டே இருக்காங்க,'' என்று, டாபிக்கை மாற்றினாள் மித்ரா.
""ஏன்? என்னாச்சு? எந்த போலீஸ் எங்கு பிரச்னை பண்ணினாங்க?'' என, கேள்விகளை அடுக்கினாள் சித்ரா.
""அரிசிக்கு பேர் பெற்ற ஊர்ல, லோடு ஏத்தி வந்த லாரியை மடக்கிய போக்குவரத்து எஸ்.ஐ., ஒருத்தர், "ஓவர் லோடு'ன்னு அபராதம் விதிக்கிறதா, டிரைவர்கிட்ட சொல்லியிருக்கார். அவர்கிட்ட கெஞ்சிய லாரி டிரைவர், போன் போட்டு ஓனர்கிட்ட பேசியிருக்கார். ஓனர் கிட்ட பேசிய எஸ்.ஐ., அன்பளிப்பா அரிசி மூட்டை கேட்டிருக்காரு. இந்த ஆடியோ, "வாட்ஸ் ஆப்'ல வெளியாகி பரபரப்பாயிருச்சு,'' என்றாள் மித்ரா.
""அதே பகுதியில, கொஞ்ச நாள் முன்னாடி, ரோட்டோரம் இருந்த ஒரு பெரிய மரத்தை வெட்டி, ஆளும் கட்சிக்காரர் ஒருத்தரோட மண்டபத்துக்கு வழி ஏற்படுத்தின பிரச்னை கௌம்பியிருக்கு தெரியுமா,'' என்று, சித்ரா புதிர் போட்டாள்.
""பிறகு என்னாச்சு?'' என, மித்ரா சந்தேகத்தை கிளப்பினாள்.
""மண்டப உரிமையாளர் தரப்பில், விலை உயர்ந்த புதிய கட்டிலும், மெத்தையும் பரிசா, முக்கியமான அதிகாரியின் வீட்டுக்கு, "டோர் டெலிவரி' ஆயிடுச்சு. அப்புறம் என்ன பெரிய நடவடிக்கை வந்திடப்போகுதுன்னு பேசிக்கிறாங்க. மரம் வெட்டின பிரச்னை, மரக்கட்டிலோட மறைஞ்சு போயிடுச்சு,'' என்று சித்ரா கூறி முடிக்கவும், சந்தான பாண்டியன் ஸ்டோர்ஸ் துணிக்கடை வரவும் சரியாக இருந்தது.
""ஏய்.. என்ன இது, இவ்ளோ கூட்டமாக இருக்குது. எனக்கு பசிக்குது, லைட்டா சாப்பிட்டு, அப்புறமா, துணி எடுக்கலாம்,'' என்று கூறிய மித்ரா, அருகிலிருந்த ஓட்டலுக்கு சித்ராவை அழைத்து சென்றாள்.
""பால் குடம் எடுக்கறதில காட்டின ஆர்வம், முக்கியமான மீட்டிங் நடந்தப்ப காட்டியிருக்கலாம்'' என்று, மித்ரா ஆதங்கத்தோடு சொன்னாள்.
""பால் குடம் எடுக்கறதுனா, ஆளும்கட்சி மேட்டர்தானே. நான், அப்பவே சொன்னேனே,'' என்று சித்ரா சொன்னதும், ""அது வேற, இது வேற, கொஞ்சம் பொறுமையாத்தான் கேளுங்க,'' என்றாள் சித்ரா.
""நான் சொல்ல வந்தது கலெக்டர் ஆபீஸ், பி.ஆர்.ஓ., ஆபீசுல இருக்கிற அதிகாரி யோட, "மாஜி'கிட்ட காட்டுற விசுவாசத்தை பத்தி. நம்ம மாவட்ட அமைச்சரு, சொந்த ஊர்ல, முதல்வர் குணமடைய வேண்டி, பால் குடம் ஊர்வலம் நடத்தியிருக்காரு. அங்கு ஆஜரான, மக்கள் தொடர்புல இருக்கிற அதிகாரி ஒருத்தரு, "முக்கியமான' பத்திரிகைகளுக்கு போன் போட்டு,"அமைச்சர் பால்குடம் எடுக்கறாரு'னு கூப்பிட்டிருக்காரு.
""காலையில "மீட்டிங்' நடந்தா, 6:00 மணிக்கு மேல்தான் தகவல் சொல்வாங்க; அமைச்சர் பால்குடம் எடுக்கறதுக்கு மட்டும் இவ்வளவு விசுவாசம். பால்குடம் எடுக்கறதுல காட்டின ஆர்வத்த, முக்கியமான மீட்டிங் நேரத்துலயும் காட்டினா பரவா யில்லையே சித்ரா'' என்றாள் மித்ரா.
""பூண்டி கோவிலில், ஆளுங்கட்சி சார்பில, அஞ்சு வகையான யாகம் நடத்தி, அன்னதானம் போட்டாங்களே ஞாபகம் இருக்கா? அதிலே, உள்ளாட்சி தேர்தலில் "சீட்' வாங்கின வேட்பாள ருங்க, மாவட்ட செயலாளர் பெயர் போட்டு, "மெகா' சைஸ் தட்டிகளை வெச்சுட்டாங்க. அந்த வழியாக போய்ட்டு வந்த ஜனங்க, "இது என்ன யாக பூஜையா? கட்சி மாநாடா?' அப்படீன்னு பேசிட்டே போனாங் களாம்,'' என்றாள் சித்ரா.
""அதுசரி, உள்ளாட்சி தேர்தல் நடக்குமா; நடக்காதா?'' என்று, மித்ரா சந்தேகத்தை கிளப்பினாள்.
""இன்னைக்கு வர்ற கோர்ட் முடிவுக்கு பிறகு தான், உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? தள்ளிப்போகுமானு தெரியும். கோர்ட் தலையிட்டு, உள்ளாட்சி தேர்லை ரத்து செஞ்சதால, இப்போதைக்கு தேர்தல் நடக்கறது சந்தேகம்னு பேசிக் கறாங்க. முதல்வர் வேற ஆஸ்பத்திரியில இருக்கறதால, பிறகு பார்த்துக்கலாம்னு அமைச்சர்களும் அமைதியா இருந்திடு வாங்க,'' என்று சித்ரா கூறினாள்.
""புதுச்சேரியில இப்படித்தானே, ஒதுக்கீட்டை முறைப்படுத்தணும்னு சொல்லி, உள்ளாட்சி தேர்தல நிறுத்தி வச்சாங்க; மறுபடி நடக்கவே இல்லை,'' என்று, மித்ரா அதை ஆமோதித்தாள்.
""எது எப்படியோ, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் திருத்தம் வர்றது உறுதி. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், வேட்பாளர் பட்டியல் வெளியீடு, அதுதொடர்பான போராட்டம் தொடர்பா, உளவுத்துறைகிட்ட "ரிப்போர்ட்' வாங்கி இருக்காங்களாம். முதல்வர், போயஸ் கார்டனுக்கு வந்ததும் பட்டியல் திருத்தம் நடக்கும்னு பேசிக்கிறாங்க,'' என்று சித்ரா கூறி விட்டு, "சரிவா, மழை வர்ற மாதிரி இருக்கு. சீக்கிரமா, டிரஸ் எடுத்துட்டு, வீட்டுக்கு போகலாம்,'' என்று மித்ராவுடன் துணிக்கடைக்குள் நுழைந்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X