பத்து மாத பந்தம் பாழ்பட்டு போகலாமா | Dinamalar

பத்து மாத பந்தம் பாழ்பட்டு போகலாமா

Added : அக் 20, 2016 | கருத்துகள் (5)
பத்து மாத பந்தம் பாழ்பட்டு போகலாமா

'தாயிற் சிறந்த கோயிலுமில்லைதந்தை சொல் மிக்க மந்திரமில்லைஅன்னை தந்தையே அன்பின் எல்லை'ஒரே சொல்லில், ஒரு காவியத்தை எழுத முடியுமா?
இன்னொரு சொல்லில் ஒரு பெரிய வரலாற்றை எழுத முடியுமா? முடியும்.
ஒரே சொல்லில் எழுதக்கூடிய காவியம் 'அம்மா'.
ஒரே சொல்லில் அடங்கும் வரலாறு 'அப்பா.'
இந்த காவியமும், வரலாறும் இணைந்து படைக்கும் வரலாற்று காவியமே 'பிள்ளை'.தாயின் வாசம்: பிஞ்சு குழந்தைக்கு நம்பிக்கை கொடுப்பது தாயின் அரவணைப்பு. அடையாளம் கண்டுபிடிக்க தெரியாத, முகம் பார்க்க தெரியாத பிஞ்சு குழந்தை கூட, தாய் கையால் துாக்கியதும் தன் அழுகையை நிறுத்தும். அதற்கு காரணம் தாயின் வாசம். அதனால் தான் தாயின் புடவையே தொட்டிலானது.பிள்ளைகள் இருந்தால் தான் பிற்காலத்தில் பெற்றோரை காப்பாற்றும். முதுமையில் உதவும் என்கிற கவலைக்கான முன்னேற்பாடு தான் பிள்ளைகளா? அதுவும் இல்லை. பொறுப்பற்ற பிள்ளைகள் பெற்றோரை காப்பாற்றாது. பொறுப்பான பிள்ளைகளோ, அமெரிக்கா, சிங்கப்பூர், கனடா என பறந்து விடும். பின் எதற்கு பிள்ளைகள்? 'பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும்'அப்பா பெயரை எங்கே சொல்ல பிள்ளை வேண்டும், போலீஸ் நிலையத்திலா? வழக்குகளில் சிக்கி கொண்டு 'இன்னார் மகனாகிய நான்' என்ற அப்பா பெயர் சொல்லவா பிள்ளை வேண்டும்? தாய் தந்தைக்கு திதி, திவசம் செய்கிறபோது, மூன்று தலைமுறையின் பெயர் சொல்லி, எள்ளும் தண்ணீரையும் இறைப்பது இந்துக்களின் வழக்கம். இப்படி மரணத்தின் பின் பெயர் சொல்ல வேண்டும் என்பதே பாரத மக்களின் பாரம்பரிய எண்ணம். பெயர் சொல்ல என்பதற்கு புகழ் உண்டாக்க என்றும் பொருள் உண்டு. பெற்றோரின் புகழை, இவன் தந்தை என் நோற்றான் கொல்' எனும் குறள்வழி ஊரே பாராட்ட பிள்ளை வேண்டும் என்றும் ஒரு பொருள் உண்டு.பிறக்கும்போதே பிள்ளையின் பெருமை, சிறுமை தீர்மானம் ஆகிறது என்று சிலர் கருதுகிறார்கள். அதெல்லாம் இல்லை வளர்ப்பு தான் காரணம் என்று பலர் வாதாடுகிறார்கள். இதில் எது உண்மை. இரண்டும் உண்மை தான். கருவில் திருவுடையார் என்று சிறப்புடன் பிறந்தவர்களும் உண்டு. முயன்று பாடுபட்டு முதலிடத்தை எட்டியவர்களும் உண்டு.பெற்றோர் கடமை: பிள்ளைகளை நன்கு வளர்க்க நினைக்கும் பெற்றோர் என்ன செய்ய வேண்டும். தங்களை நல்ல நண்பர்களாக, பிள்ளைகள் ஏற்று கொள்ளும்படி நடந்து கொள்ள வேண்டும். பேச வேண்டும், உரையாட வேண்டும். எவ்வளவு அதிக நேரம் பிள்ளைகளுடன் செலவிட முடியுமோ, அவ்வளவு நேரம் செலவிட வேண்டும். பிள்ளைகளை பற்றி யாராவது குறை சொன்னால், அதை அப்படியே நம்புவதும், அதை மனதில் மறைத்து கொண்டு பிள்ளைகளை குத்தி, குத்தி, ஜாடை, மாடையாக பேசுவதும் அசட்டுத்தனம்.ஓயாமல் சண்டையிடும் பெற்றோர், குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்கும் எதிரிகள். குழந்தைகளின் கண்கள் வீடியோ கேமராவை விட வலிமையானது. அவர்கள் மனம் ஆழமாக இவற்றை பதிவு செய்து கொள்ளும். குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றிய உத்தரவாதம் இல்லாமல் எப்போதும் பயந்து கொண்டே இருக்கும். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கேள்வி கேட்பதையே விரும்புவது இல்லை. தானும் சிந்திப்பது இல்லை. தன் பிள்ளைகள் சிந்திப்பதையும் விரும்புவதில்லை.கண்டிப்பு அவசியம்: பிள்ளைகளின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்வதும், அது சரியல்ல எல்லை மீறியது என்றால், அதை பிள்ளைகளுக்கு புரிய வைப்பதும் தான் சரியான பெற்றோர் நிலை. பொறுப்பின்மை, சோம்பேறித்தனம், அலட்சியம், அக்கறையின்மை, விளையாட்டுதனம் காரணமாய் கடமை தவறும் பிள்ளைகளை கண்டிப்பதோ, கட்டாயப்படுத்துவதோ அடக்கு முறை ஆகாது. இது அவசியம். பிள்ளைகளை வழிக்கு கொண்டு வர நினைக்கும் சில பெற்றோர், பிள்ளைகள் மேன்மையாக கருதும் விஷயங்களில், பாய்ந்து கபளீகரம் செய்வார்கள். இது அநாகரீகம். அவர்கள் உயிராக நேசிக்கும் நண்பர்கள் முன்னால், அவமானப்படுத்துவது அல்லது வீடு தேடி வந்த அவர்களது நண்பர்களை அவமானப்படுத்துவது என நடந்து கொள்வார்கள்.சர்வாதிகார அப்பா: பெருவாரியான பெற்றோர் சமூகத்தில் தங்கள் இடம் தங்கள் பிள்ளைக்கு என்ற எண்ணத்தில் தான் வளர்க்கிறார்கள். இது தவறு. பிள்ளைகள் நம் மூலம் உலகிற்கு வந்தவர்கள். நம்மை போல் இருப்பார்கள். அதற்காக நாமாகவே அவர்கள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நல்லதல்ல.உணர்தலும், புரிய வைத்தலுமே அப்பாவின் கடமை. ஆனால், பணிய வைத்தலும், திணித்தலுமே இன்று பல அப்பாக்களின் நோக்கம். சர்வாதிகாரிகள் தன் சகாக்களாலேயே சாவது போல், அடக்கு முறை அப்பாக்கள், பிள்ளைகளால் தண்டிக்கப்படுவார்கள்.பல பெற்றோர் தாங்களே புரிந்து கொள்ளாத பல விஷயங்களை பிள்ளைகள் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தாங்கள் பின்பற்றாத பல விஷயங்களை, தங்கள் தலைமுறை பின்பற்ற வேண்டும் என்று சங்கடப்படுத்துகிறார்கள். இதை விட கொடுமை, தாங்கள் யாராக ஆக வேண்டும் என்று நினைத்து ஆகாமல் போனார்களோ, அவராக தன் பிள்ளையை ஆக்க நினைக்கிறார்கள்.யார் பெற்றோர்? எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்ைகயிலே... அவன் நல்லவன் ஆவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே... என்கிறது சினிமா பாடல். ஆனால், அன்னை என்ற பெண்ணை மட்டும், குற்றவாளி கூண்டில் ஏற்றாமல் அப்பாவையும் சேர்த்து ஏற்ற வேண்டும்.என் பிள்ளை என்பதாலேயே, அதன் எல்லா செயல்களையும் நியாயப்படுத்துவது அன்பு ஆகாது. எது தவறு? எது சரி? என்கிற நேர்மை உணர்வு தான் பிள்ளைகளுக்கு ஏற்பட வேண்டும். என்ன தவறு செய்தாலும், நாம் காப்பாற்றப்படுவோம் என்கிற எண்ணம் பிள்ளைகளுக்கு உண்டாவது நல்லதல்ல.
சொத்து தகராறு: வீடு என்பது செங்கலும், சிமென்ட்டும் சேர்ந்த கட்டுமானம் அல்ல. அது குடும்ப உறுப்பினர்களின் அன்பு பிணைப்பு. தாய், தந்தை, மகன், மகள் என்கிற எல்லா உறவுகளையும் விட காசு, பணம் தான் இன்று எல்லா குடும்பங்களிலும் பெரிய பிரச்னை. எதிர்கால பாதுகாப்பு என்று முதலீடு செய்கிற சொத்து, முதுமையில் பெற்றோருக்கு பெரிய தொல்லையாகி விடுகிறது. இந்த வீடு யாருக்கு? அந்த நகை யாருக்கு? என்று சண்டையிடுகிறார்கள்.
யார் பிள்ளைகள்? : பானையிலே சோறிருந்தால் பூனைகளும் சொந்தமடாபெட்டியிலே பணமில்லேபெத்த பிள்ளை சொந்தமில்லே!' - என்கிறது கண்ணதாசனின் கண்ணீர் வரிகள்.
பெற்றோரை நேசிக்காத பிள்ளைகள், பிள்ளைகளே இல்லை. பிள்ளைகளுக்கு விட்டு கொடுக்காத பெற்றோர்கள், பெற்றோர்களே அல்ல. குடும்பம் என்பது, கூட்டு முன்னேற்றத்துக்கான தளம். புண்ணியம் என்பது பூஜை செய்வதோ, கோயில், கோயிலாக செல்வதோ அல்ல. நாம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம். ஆனால் நம் அன்பற்ற, பண்பற்ற செயல்களால் பெற்றோர் நிம்மதியின்றி இருந்தால், நாம் தேடிய செல்வம் எல்லாம் குப்பைக்கு சமம். பத்து மாத பந்தம் பாழ்பட்டு போக பிள்ளைகளும், பெற்றோரும் அனுமதிக்க கூடாது. பெற்றோரை போற்றுவோம். பிள்ளைகளை வாழ்த்துவோம்.
எம்.பாலசுப்பிரமணியன்,சமூக ஆர்வலர், காரைக்குடி.94866 71830.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X