அறிவுசார் சமுதாயமும், ஐ.டி., துறையும்!| Dinamalar

அறிவுசார் சமுதாயமும், ஐ.டி., துறையும்!

Added : அக் 20, 2016 | கருத்துகள் (6)
அறிவுசார் சமுதாயமும், ஐ.டி., துறையும்!

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வேரூன்றி வளர்ந்து பெங்களூரு, ஐதராபாத், சென்னை, புனே, மும்பை போன்ற நகரங்களை வளமாக்கி இந்தியாவின் பெருமை மிக்க துறையாக திகழ்கிறது தகவல்
தொழில்நுட்பம் (ஐ.டி.,). : துவக்கத்தில் தொழில்நுட்ப நிபுணர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்தி, அமெரிக்கா டாலர்களை ஈட்டுத்தந்த இத்துறை இன்று, இந்தியாவை மாபெரும் அறிவுசார் சமுதாயமாக அடையாளப்படுத்தி, உலக அரங்கில் பெரும் மரியாதையையும், சேவைத் துறை மூலம் கணிசமான வருவாயையும் ஈட்டி தருகிறது. முதல் தர நகரங்களை மையப்படுத்தி, இத்துறை வளர்ந்தாலும் இத்துறையின் கீழ் பணிபுரியும் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்பாலும், சிறு நகரங்களில் பிறந்து, வளர்ந்து வந்தவர்கள் தான். படித்து முடித்தவுடன் வாய்ப்புகள் தேடி இவர்கள், பெரு நகரங்களை நோக்கி சென்று, பின் உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது.
தென் மாவட்டத்தினரின் பங்கு : ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான ஐ.டி., பணியாளர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதில் முதலிடத்தில் இருப்பவர்கள் தென் மாவட்டத்தினர். இரண்டாவதாக கொங்கு மண்டலம், மூன்றாவதாக மத்திய மாவட்டங்கள், நான்காவதாக வட மாவட்டங்கள் உள்ளன. சென்னையில் பெருமளவு பொறியாளர்கள் பணிபுரிந்தாலும், அவர்கள் தென் பகுதியில் இருந்து சென்றவர்களே. இந்திய ஐ.டி., துறையின் விதைகளும், விருட்சங்களும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருப்பினும், குறிப்பாக மதுரை, நெல்லை நகரங்களில் விரல் விட்டு எண்ணத்தகுந்த அளவிலேயே ஐ.டி., நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தன. இந்த நிலை வேகமாக மாறி வருகிறது. சென்றாண்டு தமிழக அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தென் மாவட்ட வளர்ச்சிக்கான அரசின் உத்தரவாதமும், தென் பகுதியிலிருந்து சென்று வளர்ச்சி பெற்ற சிவநாடாரின் எச்.சி.எல்., நிறுவனமும், கட்டுமான பணிகளை முடித்து இயங்குவது, மற்றவர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களில்... : கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலமாக மதுரையில் இயங்கி வரும் (அமெரிக்காவின் தலைசிறந்த 100 நிறுவனங்களில் 75வது இடத்தை பிடித்துள்ள) ஹனிவெல், மதுரையில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. தற்போது பெருமளவில் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வரும் இந்நிறுவனம், பல பன்னாட்டு நிறுவனங்கள், இங்கே காலுான்ற துாண்டுகோலாக அமைந்துள்ளது.இவர்களை போல, பல பன்னாட்டு நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த நிபுணர்கள், தங்கள் சொந்த மண்ணில் இத்துறை வளர வேண்டும் என்பதில் அக்கறையும், முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.'எல்காட்' நிறுவனம், மதுரை இலந்தைகுளம் மற்றும் வடபழஞ்சியில் கட்டுமான பணிகளை முடித்து, ஐ.டி., பூங்காக்களை தயார் நிலையில் வைத்திருந்தாலும், பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களும், சென்னை போன்ற பெருநகரங்களிலேயே நிறுவனங்கள் தங்களை வலுவாக்கி வந்ததாலும், எதிர்பார்த்த அளவு வளர்ச்சி பெறவில்லை.
வன்முறை நகரமா மதுரை : இத்துடன் மதுரை குறித்த பொய்த் தோற்றங்கள், இத்துறை வளர்ச்சி பெற தடையாக உள்ளன. 'மதுரையில் ஐ.டி., துறைக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை' என காட்டிட வன்முறை நகரமாக சினிமாக்களில் காட்டுகின்றனர். ஆனால், டி.வி.எஸ்., கோட்ஸ், பென்னர் போன்ற தொழில் நிறுவனங்கள் நீண்ட காலமாக சிறந்த முறையில் செயல்படுகின்றன. சுற்றுலா, சில்லறை வணிகத்தில் மதுரை முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் 2வது பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. 'மதுரையில் ஐ.டி., துறைக்கு தகுந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை' என பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், தென் மாவட்டங்களில் தேவையான தரத்திலும், நல்ல தொழில்நுட்ப திறனிலும் படித்த இளைஞர்கள் உள்ளனர். சென்னை, பெங்களூருவில் பணிபுரியும் பெரும்பாலான இளைஞர்கள் தென் மாவட்டத்தினர் தான்.
தொழிற்துறை ஒருங்கிணைப்பு : 'அரசு மற்றும் தொழில் துறை சார்ந்த ஒருங்கிணைப்பு இல்லை' என சிலர் கூறுகின்றனர். ஆனால், மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகின்றன. மதுரை 'ஸ்மார்ட் சிட்டி' ஆக அறிவிக்கப்பட்டது, இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது.எச்.சி.எல்., ஹனிவெல் போன்ற நிறுவனங்கள், நாஸ்காம், இந்திய தொழிற் கூட்டமைப்பு, இவற்றுடன் மென்பொருள் தொழில் துறை மேம்பாட்டு சங்கம் (சிடா) ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. தொழில்நுட்பம் சார்ந்த அறிவு, வளைந்து கொடுக்கும் தன்மை, புத்தாக்கத் திறன், கற்பனைத் திறன், வேலை சார்ந்த சூழலுக்கு தம்மை மாற்றி கொள்ளுதல், விசுவாசம் ஆகியவை தென் மாவட்ட படித்த இளைஞர்களின் சிறப்பு அம்சமாக இருப்பதாக ஐ.டி., துறை மனித வள மேம்பாட்டு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். வணிக நகரான மதுரை மக்கள், இயல்பாகவே வியாபார அறிவுடன் விளங்குகின்றனர்.
தேவையானது மாற்றம் : பொதுவாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கான இலக்குகளை தேர்வு செய்து, பின் அதற்கான ஊழியர்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டால், அந்த ஊழியர்கள் இரவு பகல் பாராமல் செயல்படுவர். அப்படி செயல்படுவது, கலாசாரச் செறிவு கொண்ட மதுரை பணியாளர்களுக்கு சற்று சிரமமாக இருக்கிறது. இருப்பினும் அவ்வாறு பணி செய்து, வெற்றி பெறுபவர்கள் மிக விரைவில் தங்கள் நிறுவனத்தின் சொத்தாகவும், இளம் தலைவர்களாகவும் கருதப்பட்டு பதவி, சம்பள உயர்வு மற்றும் நல்ல வாய்ப்புகள் பெறுவது அனைவரும் ஒப்பு கொள்ளும் விஷயம். தென் மாவட்ட இளைஞர்கள் இதை முதலில் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்ள வேண்டும்.
ஆங்கிலப் புலமை அவசியம் : உலகளாவிய தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆங்கிலப் புலமை கொண்டவர்கள் வெற்றிகரமாக உள்ளனர். எல்லோரும் பேசும் பொது வழக்கத்திற்கு ஏற்ப, தமது ஆங்கில உச்சரிப்பை மாற்றி கொள்ள வேண்டியது அவசியம். பணியாளர் குழு மனப்பாங்கு, அனைவருடனும் கலந்து பழுகும் பண்பு போன்ற பணி சார்ந்த நற்பண்புகள் கொள்ள வேண்டும். காலந்தவறாமை என்பது ஐ.டி., துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தகுதி. பணியை துவங்குவதில் மட்டுமின்றி, முடிப்பதிலும் குறித்த நேரத்தை பின்பற்றிய ஆக வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் கப்பல் போக்குவரத்தை துவக்கியவர்கள் தென் மாவட்டத்தினர். துாத்துக்குடி, குளச்சல் துறைமுகங்கள் வலுப்பெற்று வருவது, அதானி மற்றும் கூடங்குளம் சார்ந்த பெரிய மின் திட்டங்கள், ரோடு மற்றும் குடிநீர் கட்டமைப்புகள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஐ.டி., துறை வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
-ஆர்.கே.ஜெயபாலன்,தலைவர்,மென்பொருள் தொழில் துறை முன்னேற்ற சங்கம்மதுரை. 99400 92145We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X