மும்பை, அக். 22-'ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக, தன் சொத்தில், 80 சதவீதத்தை எழுதி வைத்த நடிகை, பர்வீன் பாபியின் உயில் செல்லும்' என, மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம், 11 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. பிரபல நடிகை பர்வீன் பாபி, 1970 - 80களில், வெளியான வட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்ததின் மூலம், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
80 சதவீத சொத்து : சினிமாவில், தான் சம்பாதித்த பணத்தின் மூலம், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை, குஜராத் மாநிலம், ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமான சொத்துக்களை வாங்கினார். மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வாழ்ந்து வந்த பாபி, சர்க்கரை நோய் பாதிப்பால், 2005ல் இறந்தார். அப்போது அவருக்கு வயது, 56. பாபியின் மறைவை அடுத்து, அவர் சொத்துகள் யாருக்கு என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில், 2002ல், பாபி எழுதிய உயிலை, அவர் தாய் மாமன், முராத் கான் வெளியிட்டார். அதில், பாபியின், 80 சதவீத சொத்துக்களை, நலிவடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காகவும், 20 சதவீத சொத்துக்களை, முராத் கானுக்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு பாபியின் உறவினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கை, மும்பை ஐகோர்ட் விசாரித்தது.
வழக்கு முடிவு : விசாரணையின் முடிவில், 'பாபி எழுதி வைத்த உயில் செல்லும்' என, ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், 11 ஆண்டுகளாக நடந்து வந்த பாபி உயில் குறித்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, பாபியின் விருப்பப்படி, நலிவடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கென, தனியாக அறக்கட்டளை துவக்கப்படவுள்ளது. அறக்கட்டளை தலைவராக, பாபியின் தாய் மாமன், முராத் கான், 82, செயல்படுவார். அவர் நியமிக்கும் மேலும் இருவரும், அந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக செயல்படுவர். பாபியின், 80 சதவீத சொத்துக்கள், அறக்கட்டளை பெயருக்கு மாற்றப்பட்டு, உரிய வகையில் பயன்படுத்தப்படும். மீதமுள்ள, 20 சதவீத சொத்துக்கள், முராத் கான் பெயரில் மாற்றப்படும். இவை அனைத்தையும், டிச., 23க்குள் நிறைவேற்றுமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE