கோழிக்கோடு : அரபு நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியாவைச் சேர்ந்த கொலை குற்றவாளி, தூதரக அதிகாரிகள் தனக்கு உதவவில்லை என்ற ஆதங்கத்தில், இந்திய விமானங்கள் தகர்க்கப்படும் என, தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம், கண்ணூர் அடுத்த பாப்பினசேரி பகுதியைச் சேர்ந்தவர், அரபு நாடுகளில் ஒன்றான பக்ரைனில் பணியாற்றி வந்தார். கொலை வழக்கில் சிக்கி தண்டிக்கப்பட்ட அவர், தற்போது அங்குள்ள அக்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை இந்திய தூதரக அதிகாரிகள் யாரும் சென்று சந்திக்கவோ, உதவவோ இல்லை என புகார் தெரிவித்தார். இந்நிலையில், அவர் 2ம் தேதி தொலைபேசி மூலம் கோழிக்கோடு விமான நிலைய முனைய மேலாளரிடம் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து மேலாளர், உயரதிகாரிகளுக்கு தெரிவித்தார். விமான நிலையம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அனைவரும் கடும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணையில், அவரது தொலைபேசி எண், பக்ரைன் நாட்டு அக்தார் சிறையில் உள்ள தொலைபேசி எண் என்பது தெரிந்தது. இந்நிலையில், அதே நபர் மீண்டும் தொலைபேசியில் அழைத்து, "எனக்கு இந்திய தூதரக அதிகாரிகள் எவ்வித உதவியும் செய்யவில்லை என்பதற்காக தான், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தேன்' என தெரிவித்துள்ளார். அவர் பெயர், முகவரி மற்றும் பணியாற்றிய நிறுவனம், யாரை, எதற்காக கொலை செய்தார் போன்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.