நல்ல ம(ன)ரம் வாழ்க...
அது ஒரு வேப்பமரம்
பதினைந்து ஆண்டு காலம் கிடைத்த
தண்ணீரை வாங்கிக்கொண்டு நிழலும் நல்ல காற்றும் தந்து திருப்பூரின் ஒரு இடத்தில்
வளர்ந்து கொண்டு இருந்தது.
அந்த இடத்தில் ஒரு கட்டிடம்
கட்டவேண்டிய தேவை ஏற்பட்டது, கட்டிடம் கட்டுவதற்கு இருந்த ஒரே இடையூறு இந்த
வேப்பமரம்தான்.உண்மையைச் சொல்வதானால் அது இடையூறு இல்லை வைத்த இடத்தில் அது
பாட்டுக்கு வளர்ந்து தன் கடமையை செய்து வந்தது அந்த இடத்தைவிட்டு
அப்புறப்படுத்தவேண்டிய தவிர்க்கமுடியாத சூழ்நிலை.
யாரையாவது கூப்பிட்டு 'வெட்டி
எடுத்துட்டு போ' என்று சொன்னால் இரண்டு மணி நேரத்தில் இப்படி ஒரு மரம் இங்கு
இருந்தது என்பதற்கான சுவடே இல்லாமல் செதில் செதிலாய், விறகு விறகாக வெட்டி
எடுத்துக்கொண்டு போக நுாறு பேர் காத்திருந்தனர்.அதுதான் வழக்கமான நடைமுறை என்று பலரும் ஆலோசனை தந்தனர்.
ஆனால் இடத்தின் மரத்தின் உரிமையாளர்
நிர்மலாவிற்கு ஏனோ மனம் அதற்கு உடன்படவில்லை.திருப்பூரை வனமாக மாற்றிவரும்
வனத்துக்குள் திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவராமை தொடர்புகொண்ட போது பலருடன் கலந்துகொண்டு ஒரு ஆலோசனை
சொன்னார்.
அந்த ஆலோசனை, மரத்தை அப்படியே வேருடன்
பிடுங்கிக் கொண்டு போய் வேறு இடத்தில் நட்டு வளர்ப்பது என்பதாகும்.இந்த
முயற்சியில் ஐம்பது சதவீதம் மரம் பிழைக்கவும் வழி இருக்கிறது ஐம்பது சதவீதம் மரம்
பிழைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.
பிழைக்க ஐம்பது சதவீதம் வாய்ப்பு
இருக்கிறது அல்லவா அப்படியானால் முயற்சித்துவிடுவோம் என்று நிர்மலா முடிவு
எடுத்தார்.
இது போன்ற முயற்சி இதற்கு முன்
திருப்பூரில் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை, இருந்தாலும் மரம் வெட்டக்கூடாது
என்பதில் நிர்மலா உறுதியாக இருந்ததால் ஒரு குழந்தையை காப்பாற்றும் முனைப்போடு அனைவரும்
களமிறங்கினர்.
இதற்காக வனத்திற்குள் திருப்பூர்
மகேந்திரன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.மரத்தை சுற்றி பத்து அடிக்கு குழி
வெட்டவேண்டும், ஆனி வேர் அடிபட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், மரம் காயப்பட்டுவிடாமல்
சாக்கு சுற்றி அதன் மீது இரும்பு சங்கிலி போட்டு கிரேன் மூலம்
துாக்கவேண்டும்,துாக்கிய பிறகு அங்கு இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில்
உள்ள நிர்மலாவிற்கு சொந்தமான பல்லடம் மகாஆர்கானிக் பண்ணையில் கொண்டுபோய்
நடவேண்டும், பொறுமையாகவும் செய்யவேண்டும் அதே நேரம் வேகமாகவும் செய்யவேண்டும்.
இவ்வளவையும் திட்டம் போட்டபிறகு
வேப்பமரத்திடம் குனிந்து 'தாயே தவிர்க்கமுடியாமல் உன்னை இடமாற்றம் செய்கிறோம், நீ
போகிற இடம் உன் சகாக்கள் நிறைந்த அருமையான இடம் ஆகவே சந்தோஷமாக சம்மதம்
கொடுக்கணும்' என்று மானசீகமாக சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டு வேளையை ஆரம்பித்தனர்.
திட்டமிட்டபடி எல்லாம் நடந்து
மண்ணைவிட்டு அலேக்காக துாக்கும் போதும், அதை அடிபடாமல் கிரேனில் இருந்து லாரிக்கு
மாற்றம் செய்யும் போதும், ஒரு பெரிய கூட்டமே சுற்றி நின்று கொண்டு சமுதாயத்திற்கு
உழைத்த ஒரு பெரிய மனிதரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதைப் போல 'பார்த்து பார்த்து'
என்றெல்லாம் குரல் கொடுத்தனர்.
லாரி மூலம் வேப்பமரம் பண்ணைக்கு
கொண்டு செல்லப்பட்டதும் அங்கே திட்டமிட்டபடி தோண்டி வைக்கப்பட்டிருந்த அகலமான
குழியில் மரம் நடப்பட்டது, உரம் கலந்த மண் போட்டு மூடப்பட்டது.மரங்களின்
பட்டைகளில் ஈரம் போகாதிருக்க அரிசி சாக்குகள் சுற்றப்பட்டது,வெட்டும் போது
தவிர்க்கமுடியாமல் காயம்பட்ட மரத்தின் அனைத்து இடங்களிலும் மருந்து போல பசுஞ்சாணம் வைக்கப்பட்டது,'பிழைச்சு வரணும் தாயி' என்று
கும்பிட்டபடி தண்ணீர் விடப்பட்டது.
இந்த மரத்தை இருந்த இடத்திலேயே வெட்டி
விற்று இருந்தால் இரண்டாயிரம் ரூபாயோ மூன்றாம் ரூபாயோ கிடைத்திருக்கும் ஆனால்
இப்படி மாற்று இடத்தில் நடுவதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிக்கு முப்பதாயிரம் ரூபாயாகும், 'அவ்வளவு ரூபாய்க்கு மரம் மதிப்பு
இல்லையேம்மா'? என்ற போது முப்பதாயிரம் அல்ல அறுபது ஆயிரம் ரூபாய் ஆனாலும் அதை
காப்பாற்றியே தீருவேன் என்று
சொல்லி பணத்தையும் நேரத்தையும் மட்டுமின்றி யாரும் கொடுக்கமுடியாத மதிப்பையும்
மரத்திற்கு கொடுத்த நிர்மலாதான் முதல் சொம்பு தண்ணீரை விட்டார்.
முதல் நாள் இரண்டாம் நாள் மூன்றாம்
நாள் எதுவும் தெரியவில்லை, தண்ணீர் விடுவதும் சாணியை மாற்றி அப்புவதும் மட்டும்
தொடர்ந்தது.ஐசியுவில் இருக்கும் குழந்தையை பார்ப்பது போல பலரும் மரத்தை சுற்றி
சுற்றி வந்து பார்த்து ஏதாவது மாற்றம் தெரிகிறதா என
பார்வையிட்டனர்.
நான்காம் நாளும் போய் ஐந்தாம் நாளும்
வந்துவிட்டது மாற்றம் தெரியவில்லை பலருக்கும் கண்ணீரே வந்துவிட்டது.சாப்பிடக்கூட
பிடிக்கவில்லை.இவ்வளவு பேரின் பாசத்திற்காகவாவது மரம் பிழைத்துவிடவேண்டும் என்று
பார்த்தவர்கள் வேண்டிக்கொண்டனர்.
வேண்டுதல் வீண் போகவில்லை தீவிர
சிகிச்சைக்கு பின் பிழைத்த குழந்தை கண்ணைத்திறந்து கையை அசைத்தால் எவ்வளவு
மகிழ்ச்சி ஏற்படுமோ அவ்வளவு மகிழ்ச்சி ஏழாம் நாளில் ஏற்ப்பட்டது காரணம் அப்பிய சாணத்தை மீறிக்கொண்டு சில வேப்பிலை கொளுந்துகள்
மலர்ந்து வளர்ந்து சிரித்தபடி எங்களைப்பாரேன் என்றபடி எட்டிப்பார்த்தன.
கொஞ்ச நேரத்தில் மரம்
பிழைத்துவிட்டதற்கு அடையாளமாக ஆங்காங்கே மேலும்
சில கொளுந்துகள் துளிர்த்திட பார்த்தவர்கள் அனைவரது கண்களிலும் ஆனந்த
கண்ணீர்,நிர்மலாவின் கண்களில் கொஞ்சம் கூடுதலாக...
இது தொடர்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கவும்,கூடுதல் தகவல் பெறவும் தொடர்புகொள்ளவும்,திரு.மகேந்திரன்-9047486666.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE