அனைவருக்கும் அவசியமாகும் தண்ணீர் மேலாண்மை!| Dinamalar

அனைவருக்கும் அவசியமாகும் தண்ணீர் மேலாண்மை!

Added : அக் 22, 2016 | கருத்துகள் (5)
அனைவருக்கும் அவசியமாகும் தண்ணீர் மேலாண்மை!

தண்ணீர்...! முந்தைய நாளில் தாராளத்துக்கு உதாரணமாக இருந்ததையும், நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கிய உண்மை நிலையையும் கூறினால், இன்றைய தலைமுறையினர் ஏற்க மறுக்கலாம் அல்லது 'அப்படியா!' என, ஆச்சரியப்படலாம். ஏனெனில், தண்ணீரின் நிலை இன்று அப்படி தான் இருக்கிறது. அன்று, தாராளத்துக்கு உதாரணம் காட்டப்பட்ட தண்ணீர், இன்று பற்றாக்குறைக்கு உதாரணமாகி விட்டது. தண்ணீருக்காக குழாயடியில் துவங்கிய சண்டை, இன்று மாவட்ட எல்லைகளை கடந்து, அண்டை மாநிலங்கள் வரை சென்று விட்டது. இந்நிலை தொடர்ந்தால், எதிர் வரும் காலங்களில், தண்ணீருக்காக, உலக யுத்தமே நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.முதல் இரண்டு உலகப் போர்களுக்கான காரணம், காலனி ஆதிக்கம் என்றால், மூன்றாவது உலகப் போர், தண்ணீருக்காகவே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள். தண்ணீர் பற்றாக்குறை தான், தண்ணீர்
சச்சரவிற்கான காரணம். : அதிகரித்து வரும் மக்கள்தொகை, பொய்த்து போகும் பருவ மழை மட்டுமே தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமன்று. தண்ணீர் பயன்பாட்டில் நாம் பின்பற்றும் முறையும், நீராதாரங்களாக விளங்கிய நீர் நிலைகளின் மீது நாம் காட்டி வரும் அலட்சியமுமே முக்கிய காரணங்கள். ஆழ்துளை கிணறுகள், புழக்கத்திற்கு வருவதற்கு முன், கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களுக்கும் ஏரிகள், குளங்கள் போன்றவை தான் நீராதாரங்களாக விளங்கின. காலப்போக்கில், ஆழ்துளை கிணறுகள் பரவலாக வர துவங்கியதும், நீர் நிலைகளின் மீதான அக்கறையும், அவற்றை பராமரிக்கும் ஆர்வமும் குறையத் துவங்கின. இதனால், இன்று கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும் நீர் நிலைகள் பராமரிப்பின்றி, வறண்டு, குப்பை கொட்டும் இடங்களாக மாறி விட்டன. இதனால், தண்ணீரை தேங்கி நிற்கும் திறனை இழந்த நீர் நிலைகள், பல வகையான ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி விட்டன. 30 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிட்டு பார்த்தால், அதிகப்படியான நீர் நிலைகள், இன்று பரப்பில் சுருங்கி விட்டதுடன், காணாமல் போயிருப்பதும் தெரிய வரும். இந்நிலை தொடர்ந்தால், எதிர் வரும் காலங்களில், தண்ணீர் தொடர்பாக நாடு மிகப் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டி வரும்.இந்தியாவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதால், தனி நபர் தண்ணீர் இருப்பு, தண்ணீரின் தரம் குறைந்து வருகிறது. நிலத்தடி நீர், அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால், பல இடங்களில், நீர் மட்டம் குறைந்துள்ளது. 1951ல், தனி நபர் தண்ணீர் இருப்பு, 5,177 கன மீட்டராக இருந்தது. மக்கள் தொகை பெருக்கம், நகர மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் போன்றவற்றால், தற்போது, 1,650 கன மீட்டராக குறைந்துள்ளது. உலக மக்கள் தொகையில், 17 சதவீதத்தை பகிர்ந்து கொள்ளும் நம் நாடு, உலக நீராதாரத்தில், 4 சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில் மயமாதல், தண்ணீர் மேலாண்மை குளறுபடிகளால், தனி நபருக்கு கிடைக்கும் நீரின் அளவு குறைந்துள்ளது. போதுமான தண்ணீர் வழங்கும் முறைகள் இல்லாததால், 50 சதவீதம் நல்ல தண்ணீர் கழிவாகிறது. ஆறுகள், குளங்கள், ஏரிகளில் உள்ள நீரை சரியாக நிர்வகிக்காததால், அவற்றிலுள்ள, 70 சதவீத நீர் பயன்படுத்த முடியாமல் போகிறது என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, திட்டமிடப்படாத வளர்ச்சி, நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை ஒழுங்குபடுத்தாதது போன்ற காரணங்களால், நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இந்தியாவில் அதிகப்படியான அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் பகுதிகளில், 20 சதவீத தாலுகாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த, 2011ல் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விபரங்களின் படி, தமிழகத்தில், 48 தாலுகாக்களில், நிலத்தடி நீர் கிடைப்பது அரிதான நிலையை எட்டியுள்ளது; 235 தாலுகாக்களில் நிலைமை சொல்லிக் கொள்ளும் படி இல்லை; 374 தாலுகாக்களில், மிக அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. தண்ணீர் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமே, தற்போதைய பிரச்னைக்கு காரணமாக கருதப்படுகிறது. நம் நாட்டில், விவசாய துறையில், 85 -- 90 சதவீதம் நீரும், தொழில், மின்சாரம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு, 10 - 15 சதவீதம் நீரும் பயன்படுத்தப்படுகிறது.ஆனால், 2050ல் தொழில் துறைக்கான தண்ணீர் பயன்பாடு, தற்போதைய அளவை போல, 30 மடங்கும், மின் உற்பத்திக்கான பயன்பாடு, 65 மடங்கும், வீட்டு உபயோகத்துக்கான அளவு, இரண்டு மடங்கும் அதிகரிக்கும் என, நீர் வள அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.அப்போது, தண்ணீர் பற்றாக்குறையும், தண்ணீர் தொடர்பான பிரச்னைகளும், நாட்டிற்கு மிகப் பெரும் சவாலாக மாறக் கூடும். அதிகரித்து வரும் மக்கள்தொகை, தொழில் மயமாதல் நடவடிக்கைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, தண்ணீர் மேலாண்மை விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துவது தான், இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும். ஆனால், தண்ணீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பொதுமக்களிடம் பரவலாக இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், வீணாகும் தண்ணீரின் அளவு குறைவாகவும், பற்றாக்குறை இல்லாத இடங்களில் அதிகமாகவும், வீணாகிறது; குக்கிராமங்கள் துவங்கி, பெருநகரங்கள் வரை, இதே நிலை தான். உதாரணமாக, கிராமங்களில், தெரு குழாய்களில் நீர் கசிவை காட்டிலும், தண்ணீர் நிரம்பி வழியும் காட்சிகளை காண முடிகிறது. தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைப்பதால், தண்ணீர் நிரம்பி வழிவதை கூட, அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இதற்கு, அலட்சியமே காரணம் என்றாலும், தண்ணீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் முக்கிய காரணமாகும். விவசாயிகளிடமும் தண்ணீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை. கடந்த காலங்களில், அதிகமான தண்ணீர் தேவையுள்ள நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்தனர். அப்போது, போதுமான அளவில் தண்ணீர் கிடைத்ததுடன், தட்ப வெப்ப சூழலும், வேளாண் தொழிலுக்கு சாதகமாக இருந்தது. ஆனால், தற்போது பருவ மழை பொய்த்துப் போவதாலும், தட்ப வெப்ப சூழல் மாறி விட்டதாலும், கடந்த காலங்களை போல தண்ணீர் போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஆயினும், வழக்கமான பயிர்களிலிருந்து, குறைவான தண்ணீர் தேவையுள்ள பயிர்களுக்கு மாறுவதில் விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர். அதனால், இருக்கும் நீர் வளத்தை பயன்படுத்தி, சாகுபடி செய்யும் முறைக்கு விவசாயிகளிடையே விழிப்புணர்வையும், மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் தண்ணீரை தெய்வமாகவும், நதிகளை அன்னையாகவும் போற்றி புகழும் அதே வேளையில், மனித குலத்துக்கும், உயிர்களுக்கும் வரப்பிரசாதமாக கருதப்படும் நீரை போற்றி நிர்வகிப்பதில், தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறோம். இனியும், அலட்சியம் தொடர்ந்தால், எதிர் வரும் காலங்களில், மிகப் பெரும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தண்ணீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது சவால் நிறைந்தது; இதற்கான பணிகளில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும். மேலும், பொதுமக்கள், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும் தன்மையை அதிகரிக்க, சிறப்பான மேலாண்மை நடவடிக்கைகள், முறையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள், தண்ணீர் பயன்பாட்டிற்கு திட்டமிடுதல், தண்ணீர் பயன்பாட்டை தணிக்கை செய்தல் போன்றவற்றை அரசு மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, பள்ளி பாட திட்டத்தில் சேர்த்து, பள்ளிக் குழந்தைகளிடமிருந்தே துவங்க வேண்டும். அப்போது தான், வரும் காலங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மாறாக, தண்ணீர் மேலாண்மையில் தொடர்ந்து அலட்சியம் நிலவினால், மிகப்பெரும் சவாலை, நாடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை!
- பெ.சுப்ரமணியன் -சிந்தனையாளர்

இமெயில்: psmanian71@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X