எண்ணிய முடிதல் வேண்டும் | Dinamalar

எண்ணிய முடிதல் வேண்டும்

Added : அக் 24, 2016 | கருத்துகள் (3)
எண்ணிய முடிதல் வேண்டும்

'எண்ணிய முடிதல் வேண்டும்நல்லவே எண்ணல் வேண்டும்திண்ணிய நெஞ்சம் வேண்டும்தெளிந்த நல்லறிவு வேண்டும்'
என்பார் மகாகவி பாரதியார். இந்த உலகத்தில் நாம் நினைக்கும் அனைத்தும் நடைபெற வேண்டும் என்று எல்லோரும் நினைப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் அவர்கள் நினைத்த இலக்குகளை நோக்கி, தினமும் பயிற்சியும் முயற்சியும் செய்பவர்களுக்குத்தான் நினைப்பது எல்லாம் நிறைவேறுகிறது.
பலரும் தங்களுடைய மனதிலே நல்ல எண்ணங்களை விதைப்பதற்குப் பதிலாக எதிர்மறையான எண்ணங்களை குப்பைகள் போல கூட்டி வைத்திருக்கிறார்கள் என்பதே சமுதாயக் கேடாக இருக்கிறது. அதனாலே பெரும்பாலானவர்கள் இங்கே விரக்தி மனப்பான்மை கொண்டு வாழும் நிலையினைப் பார்க்க முடிகிறது. அடுத்தவர்களைப் போல வாழ வேண்டும் என்ற ஆசையில் தனக்கான வாழ்வையும் லட்சியத்தையும் தொலைத்து விடுவதைக் காண முடிகிறது. சாதாரண தோல்வியைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத ஒரு மலட்டுச் சமூகத்தை உருவாக்கி வருகிறோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.
வெற்றியாளர்கள் 'உங்கள் நண்பர்களை விடஎதிரிகளே உங்களை எப்போதும்நினைத்துக் கொண்டிருப்பார்கள்' (யாரோ)இந்த உலகம் தொடங்கியதில் இருந்து, இன்று வரை உலகத்தில் மிகப்பிரபலமான வெற்றியாளர்கள் என்று அறியப்படும் பலரும் அத்தனை எளிதாக அந்த இடத்தை அடைந்துவிடவில்லை. தளராத மனதோடு அவர்கள் செய்த தொடர்ச்சியான முயற்சிகளே, அவர்களை அந்த இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது. உலகம் தட்டையானது என்று மதகுருமார்கள் சொல்வதை எதிர்த்த கலிலியோவின் இறப்பு, நாமெல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனாலும் இறுதிவரை தன்னுடைய நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்பதே அவர் உண்மையின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.
சமீபத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் தோனி வாழ்க்கை வரலாறு பற்றிய திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. உண்மையில் வாழ்க்கையில் எத்தனை பெரிய எதிர்நீச்சல் போட்டு அவர் இன்று உலக அளவில் மிகப்பெரிய இடத்திற்கு வந்திருப்பார்; என்பதை அறிய முடிகிறது. அவருடைய முதல் பேட்டிங் அனுபவங்கள், ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதகராக என்று பலவற்றிலும் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்த போதும் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாத அவருடைய பயணமே அவருடைய வெற்றிக்கும் , இன்றைய அவருடைய புகழ்வெளிச்சத்திற்கும் காரணமாகும்.
இலக்கை அடைய 'எதிர்ப்புகள் இல்லாத பயணம்சுகமானதாக இருக்கும்ஆனால் வலுவானதாக இருக்காது' (சதா பாரதி)நாம் அனைவரும் ஆசைப்படுவது எதிர்ப்புகள் ஏதுமின்றி நம்முடைய இலக்கினை அடைய வேண்டும் என்பதாகவே உள்ளது. ஆனால் எதிர்ப்புகள் இல்லாத பயணத்தில், எப்போதும் நம்முடைய திறமைகள் வெளிப்படுவதில்லை. தேடல்களும், அதனால் வரும் இன்பங்களும் கிடைப்பதில்லை. உப்பு சப்பில்லாத ஒரு வெற்றியை(?) பதிவு செய்வதாகவே இருக்கும். அந்த வெற்றி வரலாற்றில் மிகவும் கேவலமான ஒரு வடுவாக மாறிவிடும். உங்கள் இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகையில் மிகவும் கடினமான பாதையினைத் தேர்ந்தெடுத்து பயணம் செய்யுங்கள். அந்த பாதை உங்களுக்குள் இருக்கும் உண்மையான உங்களை அறிமுகம் செய்யும். ஓவ்வொரு பயணமும், ஒவ்வொரு அனுபவமும் எதையாவது நமக்கு கற்றுக் கொடுக்கும் என்றே வாழ்வை எதிர்கொள்ளுங்கள்அதிகமான இழப்புகளைச் சந்தித்தவர்களே, இந்த உலகிலே வலிமையான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். ஹெலன் கெல்லர் வாழ்க்கையைப் படிக்கும்போதெல்லாம் நம்மை அறியாமல் நாம் சாதித்தவைகள் ஒன்றுமில்லை என்பதாகவே தோன்றும்.
ஆபிரஹாம் லிங்கன், சுவாமி விவேகானந்தர், பாரதி என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். ஒற்றைக்காலில் தாண்டி உலகத்தை நம் தமிழகம் பக்கமாக திரும்ப வைத்து, ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற சகோதரன் மாரியப்பன் தங்கவேலு போன்றோர் நமக்கு நிகழ்கால நிதர்சனம். சாதாரண காய்கறி வியாபாரத்தை செய்து வந்தவர் அவனுடைய தாயார். அந்த ஊரிலே அவர்களுக்கு நிலையாக தங்குவதற்கு வீடின்றி கஷ்டப்பட்டதாக பேட்டி தந்த போது கண்களிலே கண்ணீர் எட்டிப்பார்த்தது. தாயாருடைய துயர் மட்டுமின்றி தாய்நாட்டின் துயரையும் துடைத்த அந்த மாரியப்பனைப் பார்க்கையிலே, நமக்கு வரும் துயரமெல்லாம் அவர்கள் பட்டதிலே ஒரு எள்முனையளவு கூட இல்லை என்றே தெரிய வருகிறது.
ஒவ்வொரு முறையும், நமக்கான முயற்சிகள் தொடங்கும்போதே நாம் இலக்கினை அடைந்துவிட்டோம் என்ற எண்ணத்தோடு நெருங்க வேண்டும். அவ்வாறு நாம் நெருங்கும்போதுதான் வெற்றி எனும் இலக்கு நம்மை நோக்கி வரும்.
எண்ணங்கள் 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப'என்பது வள்ளுவர் வாக்கு.நம்முடைய மனதிலே நாம் எண்ணும் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்குள் விதைத்துச் சென்றவர். நம்முடைய மனம் நமக்கு மிகப்பெரிய வரம். ஆயிரம் கணினிகளால் செய்ய முடியாத பல ஆச்சர்யங்களை அடுத்த நிமிடத்தில் நிகழ்த்திக்காட்டும் வல்லமை பெற்றது. ஆனால் நாம் எப்போதும் எதிர்மறையாக நினைத்து நம்முடைய மனதையும் அதற்கு பழக்கப்படுத்திவிட்டோம். உண்மையில் நாம் நம்முடைய இலக்கினை எவ்வித தடையும் இன்றி அடைய வேண்டும் என்றால் முதலில் அந்த இலக்கினை நம்முடைய மனம் நினைக்க வேண்டும். வரும் தடைகளை தடைகளாக நினைக்காமல் அனுபவங்களாக எண்ண வேண்டும். அந்த அனுபவங்கள்தான் நம்மைச் சரியான திசையை நோக்கி அழைத்துச் செல்லும்.
கடைசி நிமிடத்தில்தோல்வி கிடைத்ததா?வாழ்த்துக்கள்நீங்கள் வெற்றிக்கு அருகில் இருக்கிறீர்கள்என்பதை மனதிலே நிறுத்திக் கொள்ளுங்கள்.மாற்றங்கள் மாற்றங்களை எல்லாம் முதலில் நம்மிடம் இருந்தே தொடங்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் நல்ல எண்ணங்களை தனக்குள் விதைக்க ஆரம்பிக்கும்போதுதான், இந்த சமூகம் நல்ல மாற்றங்களை நோக்கி நடைபோடும். வருடந்தோறும் கடல் கடந்து, கண்டங்கள் கடந்து நமது வேடந்தாங்கலை நோக்கி வரும் பறவைகளைப் பாருங்கள். எத்தனை நம்பிக்கையோடு இலக்குகளை நிர்ணயித்து லட்சியத்தை அடைகிறது. அந்த லட்சியமும் மனோதிடமும் உள்ளவர்கள் ஒரு போதும் சாதாரண தடைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். தனது இலக்கினை மனதிலே பதியவைத்து விட்டு அதை அடையும் வரை, தான் பார்க்கும் அத்தனையிலும் அந்த லட்சியத்தை அடைவதற்கான வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
பலமுறை தோல்விகளைச் சந்தித்து, கால்களை இழந்து விடுேவாம் என்ற தருணத்திலே கூட, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தே தீருவோம் என்று அடைந்து கொடி நாட்டிய எட்மண் ஹிலரி, டென்சிங் சாதனை சாதாரணமல்ல. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால போராட்டம். தேர்தல்கள் பலவற்றிலும் தோல்விகளைச் சந்தித்த பின்னர், அமெரிக்காவின் அதிபராக வந்து சாதித்த ஆபிரஹாம் லிங்கன், உலகத்திற்கு நல்வழிகாட்டிய அப்துல் கலாம் ஆகியோர் கடந்து வந்த பாதை சாதரணமானதல்ல. அத்தனை தடைகளையும் தான் கொண்ட உறுதியினாலும் நம்பிக்கையாலும் தகர்த்தெறிந்தவர்கள்.
'கனவு மெய்ப்பட வேண்டும்'என்பார் பாரதி. கனவு காணுங்கள் என்று அதை இன்னும் மெருகேற்றி அனைவருடைய மனதிற்கும் கொண்டு சேர்த்தவர் அப்துல்கலாம். மனம் முழுவதும் நாம் அடைய வேண்டிய உயரங்கள் குறித்த சிந்தனையோடு, அடுத்தவர்களுடைய வாய்ப்புகளைத் தட்டிப்பறிக்காமல் தொடர்ச்சியான முயற்சியோடு இயங்குதல் அவசியமாகிறது. இந்த உலகிலே நம்மால் எட்டிப்பிடிக்க இயலாத உயரம் என்பது ஏதுமில்லை. சிரமங்கள் பாராமல் போராடினால் சிகரங்களும் நமக்கு வழிவிடும்.-முனைவர் என்.சங்கரராமன்பேராசிரியர்குமாரபாளையம், 99941 71074.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X