மூணாறு:கொழுக்குமலை வழியாக மீசைபுலி மலைக்கு சட்ட விரோத 'டிரக்கிங்'க்கு தேவிகுளம் சப்- கலெக்டர் ஸ்ரீராம்வெங்கட்ராம் தடை விதித்தார்.மூணாறு அருகே சைலன்ட்வாலி எஸ்டேட் அடுத்துள்ள 'மீசை புலி மலை' முக்கிய சுற்றுலா தலமாகும். இப்பகுதி கேரளா வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இரண்டு சுற்றுலா 'பேக்கேஜ்' திட்டங்கள் மூலம் வனத்துறையினர் சொந்த பொறுப்பில் பயணிகளை அழைத்துச் சென்று வருகின்றனர்.
உணவு, வாகனம் மற்றும் தங்கும் வசதி, டிரக்கிங் ஆகியவற்றுடன் நாள் ஒன்றுக்கு ரூ.7,500,ரூ.3,500 (இருவர்) என இரண்டு பிரிவுகளில் கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கு 'ஆன் லைன்' மூலம் முன் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக வருவோரை அழைத்துச் செல்லுவதில்லை. சில பயணிகள் கட்டணம் அதிகம் என கருதி குறுக்கு வழிகளை கையாளுகின்றனர்.
தடை: இது போன்ற பயணிகளை குறி வைக்கும் 'டூர் ஆப்ரேட்டர்' மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் தேனி மாவட்டம் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொழுக்குமலை வழியாக மீசை புலி மலைக்கு சுற்றுலா பயணிகளை சட்ட விரோதமாக 'டிரக்கிங்' அழைத்துச் செல்கின்றனர்.
தினமும் நுாற்றுக்கணக்கில் செல்லும் சுற்றுலா பயணிகள் பாலிதீன் உள்ளிட்ட கழிவுகளை மீசைபுலி மலையில் வீசிச் செல்வதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.ஆகவே கொழுக்குமலை வழியாக மீசைபுலி மலைக்கு சட்ட விரோதமாக 'டிரக்கிங்' நடத்துவதற்கு தேவிகுளம் சப் கலெக்டர் ஸ்ரீராம்வெங்கட்ராம் தடை விதித்தார்.
கேரளா வனத்துறையினரின் அனுமதியுடன் மீசைபுலி மலைக்குச் செல்லலாம் என்றபோதும், ஒரு நாளைக்கு 36 பேருக்கு மட்டும் அனுமதியுண்டு என்பது குறிப்பிடதக்கது.