விழுப்புரம்: ஆவின் பால் கலப்பட வழக்கு விசாரணை, வரும் நவ., 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஊரல் கிராமத்தில், கடந்த 2014ம் ஆண்டு, ஆக., 19ம் தேதி, ஆவின் பாலில் தண்ணீர் கலந்து கலப்படம் செய்ததாக புகார் எழுந்தது.
இதன்பேரில், 8 பேரை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி, சென்னையைச் சேர்ந்த வைத்தியநாதன் உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
இந்த வழக்கு, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உள்பட 20 பேர் ஆஜராகினர்.
அன்பரசன், சென்னியப்பன், தண்டபாணி, துரை, தினகரன், குமார் ஆகிய 6 பேர் ஆஜராகவில்லை. அவர்களது தரப்பில், வழக்கறிஞர்கள் மூலம் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணையை, வரும் நவ., 22ம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் 26 பேரும் கோர்ட்டில் ஆஜராகி, குற்றப்பத்திரிக்கை நகலை பெற வேண்டும் என, நீதிபதி சுபா அன்புமணி உத்தரவிட்டார்.