'கிராம ஊராட்சிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தனி அலவலர்கள், மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம ஊராட்சி தனி அலுவலரின் பொறுப்புகள் குறித்து, அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
* மாதந்தோறும் ஊராட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தேவைப்பட்டால் சிறப்பு மற்றும் அவசர கூட்டங்கள் மற்றும் கிராம சபை கூட்டங்களையும் நடத்தலாம்
* ஊராட்சி வங்கி கணக்குகளை உரிய விதிமுறைகளின் படி பராமரிக்க வேண்டும்; மாதந்தோறும், 10ம் தேதிக்குள், ஊராட்சி கணக்கை, வங்கி கணக்குடன் ஒப்பிட்டு சான்றளிக்க வேண்டும்
* ஊராட்சியின் அனைத்து வரி மற்றும் வரி அல்லாத வருவாய்களில் முழு கவனம் செலுத்தி, 100 சதவீதம் வசூல் செய்து, உரிய கணக்கில் வரவு வைக்க வேண்டும்
* ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் போதிய குடிநீர் வினியோகம், தடையின்றி வழங்குவதை கண்காணிக்க வேண்டும். மின் மோட்டார்கள், இணைப்பு குழாய்கள், கை பம்புகள் நன்கு செயல்படுவதை உறுதி செய்ய, வாரந்தோறும் ஆய்வு செய்து, அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
* ஊராட்சி மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணத்தை, நிலுவையின்றி மாதந்தோறும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
* ஊராட்சிகளில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களை முறையாக பயன்படுத்தி, கிராமப் புறங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்
* திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உரிய முறையில் நிறைவேற்றி, ஊராட்சி பகுதியில் உள்ள குப்பையை தினமும் அகற்றி, கிராமத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்
* பொது சுகாதாரத்திற்கு அபாயம் நேரிடும் காலங்கள் அல்லது டெங்கு போன்ற நோய் அறிகுறி தென்பட்டால், சுகாதாரத் துறையுடன் இணைந்து தீவிர துப்புரவு பணியை மேற்கொள்ள வேண்டும்
* அனைத்து வீடுகளிலும், தனிநபர் கழிப்பறை கட்டி, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத ஊராட்சியாக மாற்ற வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.- நமது நிருபர் -