உணவில் வண்ணம்; வாழ்வில் தருமே சுகம்!| Dinamalar

உணவில் வண்ணம்; வாழ்வில் தருமே சுகம்!

Added : அக் 25, 2016 | கருத்துகள் (5)
 உணவில் வண்ணம்; வாழ்வில் தருமே சுகம்!

“மம்மிஇ ஸ்கூலுக்கு ஸ்னாக்ஸ் வச்சி விடுங்க”“அம்மா இன்னிக்கு என்ன ஸ்னாக்ஸ் வச்சிருக்க..?”
இக்குரல்கள் எல்லா வீடுகளிலும் ஒலிக்கும், பள்ளி செல்லும் குழந்தையின் குரலாக இருக்கின்றன. பெரும்பாலும் சாக்லேட்களும், ஸ்வீட்களும் நொறுக்கு தீனிகளில் இடம் பிடிக்கின்றன.பல சமயங்களில், பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யும் உணவு பொருட்களையே பிரித்து, குழந்தைகளின் நொறுக்கு தீனி டப்பாக்களில் அடைத்து பள்ளிக்கு பெற்றோர் அனுப்புகின்றனர்.நாம் கொடுக்கும் நொறுக்கு தீனிகள் குழந்தைகள் விரும்பும் வண்ணங்களில் இருக்கின்றன! குழந்தைகளின் எண்ணங்களில் வண்ணங்கள் கெட்டியான இடத்தை பிடித்துள்ளன. உணவில் வண்ணங்கள், எண்ணங்களில் ஏற்படும் வண்ணங்களை போன்றே நன்மையை தருபவை, அவை இயற்கையாக இருக்கும்பட்சத்தில்! ஆனால் குழந்தைகள் சாப்பிடும் உணவுகளில் செயற்கை வண்ணங்கள் அல்லவா கலந்திருக்கின்றன!
குழந்தைகள் ஆரோக்கியம் : உணவுகள் கெடாமல் இருக்க ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளை கவர்வதற்காக செயற்கை சாயங்களும், ருசிக்காக செயற்கை ருசி தரும் பொருட்களையும் கலந்து, பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்கின்றார்கள். இவை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு உகந்தவை அல்ல. குழந்தைகளுக்கு தரும் உணவு இயற்கை வண்ணங்கள் நிரம்பியவையாக இருக்கட்டும்! எவ்வளவுக்கெவ்வளவு உணவில் வண்ணங்களை சேர்க்கின்றோமோ, அந்த அளவிற்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் வராமல் தடுக்கலாம். பல வண்ணங்கள் நிரம்பிய உணவு சரிவித உணவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உணவு உண்பது எதற்காக : உடல் வளர்ச்சிக்காக, உறுப்புகள் சரிவர சுறுசுறுப்பாக இயங்க, உடலை பாதுகாக்க, வலிமைக்காக உணவை உண்கின்றோம். நாம் உண்ணும் உணவில் மாவு சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் உள்ளன. உணவில் உள்ள மாவுப்பொருள் சர்க்கரையாகவும், புரதம் அமினோ அமிலமாகவும், கொழுப்பு கொழுப்பு அமிலமாகவும், கிளிஸராலாகவும் மாற்றப்படுகின்றன. இதற்கு வயிற்றில் உண்டாகும் ஜீரணத்திரவங்கள், கல்லீரல் உண்டாக்கும் பித்த நீர், கணையம் தயாரிக்கும் என்சைம்கள் உதவுகின்றன.இயற்கை வண்ணம் கொண்ட உணவை ஏன் உண்ண வேண்டும்? உடலில் பல்வேறு வளர்சிதை மாற்றங்களின் போது நடைபெறும் வேதிவினைகளின் முடிவில் ப்ரீ ராடிகல்ஸ் எனும் வேதிப்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த செல்கள் உருவாவது இயற்கையான நிகழ்வாகும். ஆனால் இந்த ப்ரீ ராடிகல்ஸ் வெளியேற்றப்படாமல் உடலிலேயே தங்கி விடுமானால், இவை உடல் உறுப்புகளை செல்களின் நிலையில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். நம் உடலில் நோயை எதிர்த்து போராடும் அணுக்கள் இந்த பாதிப்பை சரி செய்யாவிட்டால், பாதிப்படைந்த செல்கள் கேன்சர் செல்களாக உருமாறக்கூடும். இந்த ப்ரீ ராடிக்கல்ஸ் செல்கள், ரத்தக்குழாய்களில் படிந்து அவற்றின் குறுக்களவை குறைப்பதால், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு இதயத்தை பலவீனமாக்கி விடுகின்றன.
சிகரெட் புகை : காற்றில் கலந்திருக்கும் மாசுக்கள், கதிர்வீச்சு, பூச்சிக்கொல்லிகள், உயிர்க்கொல்லிகள், சிகரெட் புகை போன்றவைகளும் ப்ரீராடிக்கல்ஸ் செல்களை உருவாக்கும் புறக்காரணிகள் ஆகும். ஆகவே குழந்தைகளுக்கு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தாத காய்கறி, பழங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகள் அருகில் இருக்கும் போது சிகரெட் புகைப்பதை தவிர்க்க வேண்டும். ப்ரீராடிக்கல்ஸ் செல்கள், உடலின் செல்களுக்கு ஏற்படுத்தும் தீங்கை கட்டுப்படுத்த, சமன்படுத்த உதவியாக இருக்கும் உணவு மூலக்கூறுகள் ஆண்ட்டி-ஆசிடன்ஸ் எனப்படும். இயற்கையாக கிடைக்கும் உணவுப் பொருட்களின் நிறத்திற்கு காரணமான க்ரோட்டினாய்ட் மற்றும் ப்ளேவனாய்ட் என்னும் நிறமிகள் ஆண்ட்டி- ஆக்ஸிடண்ட்களைப் போன்று செயல்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ஆகவே உணவில் வைட்டமின்கள், தாது உப்புகள், உயிர்வேதிப்பொருட்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவதால் கேன்சர் வராமல் தடுக்கலாம்! உணவில் இயற்கை வண்ணங்கள் சேர்ப்பதால் கேன்சர், இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகளை எளிதில் சரி செய்யலாம்.
வண்ணங்களின் பலன்கள் : சிவப்பு: தக்காளி, வெங்காயம், பீட்ரூட், சோயாபீன்ஸ், சிவப்பு பயிறுகள், ஆப்பிள்,ஸ்ட்ராபெரி,செர்ரி, தர்பூசணி, மாதுளை போன்ற சிவப்பு நிற காய்கள் மற்றும் பழங்களில் உள்ள நிறமிகள் கேன்சர் சிறுநீர்ப்பாதைகளில் ஏற்படும் தொற்றுகள் ரத்தக்குழாய்கள் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட வியாதிகளை தடுக்கின்றன. ஆரஞ்சு, மஞ்சள்: கேரட், ஆரஞ்சு, சர்க்கரை வள்ளி கிழங்கு போன்ற ஆரஞ்சு நிறக் காய்கள் மற்றும் பழங்களில் போலட் என்ற சத்து மிகுதியாக உள்ளது. இவை பிறப்பு குறைபாடுகளை தடுக்கின்றன. உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்றும். செரிமானத்தை தூண்டும். ரத்தத்தில் உணவுப் பொருட்கள் கிரகிக்கப்படுவதை அதிகரிக்கும். பப்பாளி, மஞ்சள் பூசணிக்காய்,மாம்பழம் போன்ற மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களின் நிறமிகளில் பீட்டா-கெரோட்டின் என்ற முக்கிய ஆண்டி-ஆக்ஸிடண்டு உள்ளது. பச்சை: முட்டைக்கோஸ் வெண்டைக்காய், அவரைக்காய் பீன்ஸ், கொத்தமல்லி, கறிவேப்பில்லை, கீரை வகைகள் உடலின் அனைத்து செல்களையும் புதுப்பிக்கின்றன. உடலின் அனைத்து வேதி வினைகளையும் சமநிலைப்படுத்துகின்றன.
நீல வண்ணங்கள் : திராட்சை, அத்திப்பழம், உலர்ந்த திராட்சை, ப்ளாக் பெர்ரீஸ் நரம்பு மண்டலத்தின் பணிகளை சீராக்கும். மன அமைதியை ஏற்படுத்தும். தெளிவான சிந்தனையை தரும். வெள்ளை: காலிப்பிளவர், பேரிக்காய், நூக்கல்,பூண்டு, இஞ்சி, வாழைப்பழம், பேரிக்காய் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலின் மரபணுக்களை பாதுகாக்கும் கந்தகச் சத்து நிறைந்தவை. இதில் காணப்படும் ப்ளேவனாய்ட் எனப்படும் ஆண்ட்டி-ஆக்சிடண்ட் உடலின் செல்களைச் சுற்றியிருக்கும் சவ்வை பாதுகாக்கின்றன.
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்கின்றார் திருவள்ளுவர். இதன் பொருள் சாப்பிட்ட சாப்பாடு, ஜீரணமான பிறகு மீண்டும் பசித்த பின்பு உணவு அருந்தினால், எந்த நோய்க்கும் உடலுக்கு மருந்து தேவைப்படாது. இதன் உண்மையான பொருள் பசி எடுத்த பின்பே உணவு உண்ண வேண்டும். பசித்த பின்பு உணவு உண்பதால் நோய்கள் வருவதில்லை. இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் பொருந்தும். இருப்பினும் தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதால், பசித்த பின்பே உண்ண வேண்டும் என்ற பழக்கத்தை குழந்தைகளிடம் இருந்து ஏற்படுத்துவோம்.
நொறுக்குத்தீனி : பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் போது, குழந்தைகளின் நொறுக்கு தீனிகளில் மாற்றங்களை உருவாக்குவோம். அடைத்து வைக்கப்பட்ட பாக்கெட் தீனிகளை தவிர்ப்போம். உடனடி உணவு தயாரிப்புகளை நிறுத்தி, ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தனுப்புவோம்! ஆப்பிள், காரட், கொய்யாப்பழம், வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றை நறுக்கி கொடுத்து அனுப்புவோம். உலர்ந்த பழங்கள், வேகவைத்த பாசிப்பயறு, பட்டாணிப்பயறு போன்றவை நல்லது. மதிய சாப்பாட்டில் காய்கறிகள் அதிகமாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் வேறு வேறு காய்கறிகள், பழங்களை கொடுத்தனுப்புங்கள். மாலை பள்ளி விட்டு வந்தவுடன் காய்கறி அல்லது பழ ஜூஸ் தாருங்கள். இரவு உணவிற்கு முன் சாலட் தயாரித்து தாருங்கள். உணவில் இயற்கை வண்ணங்களை சேர்ப்பதால் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கலாம். நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை மனதில் கொண்டு, எண்ணங்களில் மட்டுமல்ல உணவிலும் வண்ணங்களை சேர்ப்போம்!
-க.சரவணன்தலைமையாசிரியர்

மதுரை, 99441 44263.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X