தீபாவளி நெருங்கி விட்டதால், இனிப்பு, கார பலகாரம் செய்ய பொருட்கள் வாங்க, சித்ராவும், மித்ராவும், பெரிய கடை வீதிக்கு சென்றனர். அங்கே, மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், அருகே இருந்த பேக்கரியில் டீ சாப்பிட நுழைந்தனர்.
அந்த இடைவெளியில் ""அரசு பள்ளி ஆசிரியர்கள், நிம்மதியிழந்து, பண்டிகை கொண்டாட முடியாம தவிக்கிறாங்க,''என்று, ஆதங்கத்துடன் கூறினாள் சித்ரா.
""அவர்களுக்குத் தான், எப்போதும் போனஸ் இல்லையே; இப்போ என்னாச்சு?' என்றாள் மித்ரா.
""போனஸ் பிரச்னை இல்லை இது; பிரச்னையில்லாம, பணி செஞ்சாலே போதும்கிற நெலைமைக்கு வந்துட்டாங்க. போன வாரம், தொடர்ந்து பல பள்ளிகளில் தொடர்ச்சியா பல பிரச்னை,'' என்று சித்ரா கூறினாள்.
""இப்போது தான் மாணவர்களை அடிக்கக்கூடாது; கண்டிக்கக்கூடாதுன்னு, உத்தரவு இருக்கே. ஒழுங்காக பள்ளிக்கு வராதவங்களை ஆசிரியர்கள் என்னதான் செய்வாங்க. பெற்றோரை வரச்சொல்லி, தகவல் சொல்ல வேண்டியது தானே,'' என்றாள் மித்ரா.
""கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியர்கள் இதைத்தான் செய்யறாங்க. பள்ளியில் ஒழுங்கீன நடவடிக்கை போன்ற புகாரால, பொது தேர்வு எழுத முடியாமல் போகும். பெற்றோரை அழைச்சுட்டுவான்னு அனுப்பினாலும், சில மாணவர்கள் அதை செய்வதில்லை. தாராபுரத்தில் ஒரு மாணவி தற்கொலை; பல்லடத்தில் ரெண்டு மாணவர் தற்கொலை முயற்சி; திருப்பூரில், பள்ளி மாணவர்கள் மது அருந்தி சஸ்பெண்ட் என, ஒரே பிரச்னை மயம்,'' என்றாள் சித்ரா.
""சரி, கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கு,'' என்று, கவலையோடு மித்ரா கேட்க, ""வழக்கம் போல் சி.இ.ஓ., எந்த பிரச்னையை கேட்டாலும், "அப்படியா? எந்த தகவலும் இல்லை. பள்ளி தலைமையாசிரியரை கேட்டுக்கோங்க' என்று நழுவுவார். அதன்பின், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியரை, இந்த தகவலை ஏன் வெளியே சொன்னீங்கன்னு கடிகடின்னு கடிப்பார்,'' என்று, நிலமையை விளக்கினாள் சித்ரா .
""இரு, சூடான அரசியல் விஷயம் சொல்றேன் கேளுங்க,'' என்றாள் பீடிகையுடன், ""தனி அதிகாரி இருந்தாலும், எம்.எல்.ஏ.,க்களுக்கு மறைமுக அதிகாரம் கொடுத்த மாதிரி தான்,'' என்று, தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், சித்ராவை குழப்பினாள் மித்ரா.
""அதை பத்தி தான் நாம முன்னாடியே பேசியிருந்தோமே,'' என்றாள் சித்ரா.
""இன்னைல இருந்து உள்ளாட்சி நிர்வாகம் தனி அதிகாரிங்க கைக்கு போகுது. சொல்லி வச்ச மாதிரியே, கலெக்டர் ஆபீசுல நடந்த கூட்டத்துல, அமைச்சரே திட்டவட்டமா சொல்லிட்டாரு. கவுன்சிலர்கள் இனி இருக்க மாட்டாங்க; பிரச்னைனா, எம்.எல்.ஏ., கிட்ட தான் மக்கள் போவாங்க. அதனால, தொகுதியில பிரச்னைனாலும், வேலைனாலும், எம்.எல்.ஏ.,க்களை கலந்து பேசி செஞ்சுக்கோங்கன்னு, கமிஷனர் கிட்டயே அமைச்சர் சொல்லிட்டார்''.
""மாநகராட்சி விஷயத்துல தலையிடாம இருந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, மினிஸ்டரே அப்படி சொன்னதால, மறைமுக அதிகாரம் கிடைச்ச மாதிரிதான். புது மேயர் வர்ற வரைக்கும், மாநகராட்சி மண்டலங்களை, தங்களோட கட்டுப்பாட்டுல வச்சுக்க போறாங்க,'' என்றாள் மித்ரா.
""ஆய்வு கூட்டத்துல வேற ஏதாவது விஷேசம் இருக்கா?'' என்று சித்ரா கேட்டாள்.
""பெரிசா ஒண்ணுமில்ல. வருவாய்த்துறை கூட்டரங்கு, பூங்கொத்துக்களால "டெக்கரேஷன்' செஞ்சிருந்தாங்க. டேபிள் மேல இந்த பூ ஜாடியை எடுத்து பார்த்த காங்கயம் எம்.எல்.ஏ., நிஜமான பூவா? பிளாஸ்டிக் பூவான்னு முகர்ந்து பார்த்திருக்கார். துர்நாற்றம் மூக்கை துளைத்ததால், தன்னோட இருக்கைக்கு எதிரே இருந்த பூங்கொத்தை எடுத்து, தரையில் வெச்சுட்டாராம்,'' என்றாள் மித்ரா.
""விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்துலே, "மைக்' சரியா வேலை செய்யல. அதனால, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சின்னசாமி, அவசரமா ஒரு மனு எழுதி, "கூட்டத்துக்கு முதல் நாளில், "மைக்'குகள் சரியா வேலை செய்யுதானு சரிபார்த்து தயார்படுத்த வேண்டும் ' என்று, ஒரு மனுவை கொடுத்திருக்காரு. அதை வாங்கின வேளாண்துறை அதிகாரிங்க, போன மாசமே இந்த கோரிக்கை வந்துச்சு. கோவையில இருந்து எலக்ட்ரீஷியனை வரவழைச்சு சரி செய்யறோம்னு பதில் சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""போக்குவரத்து போலீசால, ஒவ்வொரு பஸ்சுக்கும், ஒவ்வொரு "ட்ரிப்'புக்கு, எட்டு லிட்டர் டீசல் வீணாகுது. பாலம் கட்ற வேலைக்காக, போலீஸ் இஷ்டப்படி பஸ்சை மாத்தி விடறாங்க. மக்கள் சிரமத்தை மாவட்ட நிர்வாகம் கொஞ்சமும் கண்டுக்காம இருக்கறதால, போலீசார் இஷ்டத்துக்கு, பஸ் ரூட்டை மாத்துறாங்க.
""தேசிய நெடுஞ்சாலை ரோட்டையே அடைச்சு வச்சிருக்காங்க. போலீச எதிர்த்து போராட முடியாதுனு பொது மக்கள் துன்பத்த அனுபவிச்சுட்டு இருக்காங்க. சாலை பாதுகாப்பு குழுன்னு ஒண்ணு இருக்கு. அதற்காகவாவது கலெக்டர் நேர்ல வந்து பார்த்து, இந்த துன்பத்தை குறைச்சா தேவலை,'' என்று மித்ரா கூறி முடிக்கவும் மழைத்தூறல் விழுந்தது.
""ஏய்... சீக்கிரம் வா, பலகாரம் செய்வதற்கு, பொருட்கள் வாங்கிட்டு கிளம்பலாம்,'' என்றவாறே கடைக்குள் இருவரும் புகுந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE