பட்டாசுகள் தரும் படிப்பினை..| Dinamalar

பட்டாசுகள் தரும் படிப்பினை..

Added : அக் 26, 2016 | கருத்துகள் (2)
பட்டாசுகள் தரும் படிப்பினை..

சிவகாசி தொழிலாளர்களின் உழைப்பு முழுவதும் தீபாவளி நன்னாளில் சரவெடியாய், புஸ்வாணமாய், மத்தாப்பாய், சங்குச் சக்கரமாய், அனைவரையும் மகிழ்விக்க போகிறது. சற்று கூர்ந்து ஆராய்ந்தால் பட்டாசுகள் நம்மை மகிழ்விப்பதுடன் வாழ்க்கைக்கும் சில உயர்ந்த தத்துவங்களை தந்து கொண்டு தான் இருக்கின்றன.
சங்குச் சக்கரம் : சங்கம் வளர்த்த தமிழ்நாடு என புகழ்வது உண்டு. அதனால் தான் என்னவோ இன்று தமிழகத்தில் எத்தனையோ ஜாதி சங்கங்கள், மதம், அரசியல் அனைத்திலும் கலந்து நாறிக் கொண்டுள்ளது. வேட்பாளர்கள் தேர்வில் ஜாதி, மாவட்டங்களை பிரிப்பதில் ஜாதி, என ஜாதி அமைப்பின் நச்சு வேர் எல்லா வகையிலும் ஊடுருவி ஊனப்படுத்தி கொண்டிருக்கிறது. உச்சகட்டமாக குண்டு வெடிப்பு, தீ வைப்பு, கொலை, கொள்ளை என ஜாதிப்பேயின் கோரதாண்டவம் நாட்டையே நாசம் செய்து கொண்டுள்ளது. இந்த நேரத்தில் சங்குச் சக்கரம் ஒரு வாழ்க்கை உண்மையை நமக்கு தருகிறது. சங்கு சக்கரமாகிய நான், யார் என்னை பற்ற வைத்தாலும் சுழன்று ஒளிதரத் தயாராக இருக்கிறேன். இந்த இனத்தை சேர்ந்தவர் பற்ற வைத்தால் தான் ஒளி தந்து இருள் நீக்குவேன் என அடம்பிடிப்பதில்லை. அப்படியிருக்க, சுழலும் இப்பூமியில் வாழும் மனிதர்கள் மட்டும் ஏன் இத்தனை ஜாதிகளை அமைத்து, ஆயிரம் பிரிவினைகளை ஏற்படுத்தி சண்டையிட்டு கொள்ள வேண்டும்.
மத்தாப்பு : 'மரங்களை வளர்த்தோம்; மழை கிட்டியது. அடுத்தவர் மதங்களை வெறுத்தோம்; ரத்தம் கொட்டியது' என்ற புதுக்கவிதை மதவெறியின் கொடூரத்தை விளக்குகிறது. கோயில் உடைப்பு, மசூதி இடிப்பு, மாதா சிலை தகர்ப்பு; அதனால் ஏற்படும் கலவரங்கள் என நாட்டில் இன்று நடக்கக்கூடிய விரும்பத்தகாத சம்பவங்கள், மத வெறி எனும் போதை மனிதனை அடிமையாக்கி அவனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. இந்த சூழ்நிலையில் கொளுத்துகின்ற ஒவ்வொரு மத்தாப்பும் ஒளிர்ந்து பிரகாசமாய் ஜொலிக்கையில் ஒரு சிறந்த அறிவுரையை மனிதனுக்கு கூறி அணைந்து விடுகிறது.'பாருங்கள் மத்தாப்பகிய நான் ஒரு சிறு அறிவியல் சாதனை தான். எனக்கு தீ வைக்கிற ஒவ்வொரு முறையும் நான் ஒளிர்கிறேன் என்பதை விட நரகாசுரனை அழித்த தெய்வத்தின் நற்செயலை புகழ்ந்து பாராட்டி, மகிழ்ச்சியாய் சிரிக்கிறேன் என்பதே சரியாகும். ஒரு உயிரற்ற அறிவியல் கண்டு பிடிப்பான நானே கடவுளுடன் ஒத்துபோகையில், உயிருள்ள தெய்வத்தின் நேரடிப் பிரதிநிதிகளான உங்களுக்குள் மட்டும் ஏன் ஆயிரம் மத விரோதங்கள். அதனால் ஏற்படக்கூடிய பிரச்னைகளால் துன்பங்கள், துயரங்கள் எத்தனை,' என, சுட்டிகாட்டுகிறது.
சரவெடி : சரவெடி நமக்கு ஒரு பாடத்தை கற்பிக்கிறது. துவக்கத்தில் ஒவ்வொரு வெடியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒற்றுமையுடன் தான் திகழ்ந்து வந்தோம் என்று எங்கள் திரிகளில் நெருப்பை ஆக்கிரமிக்க அனுமதித்தோமோ அன்றே நாங்கள் துண்டு துண்டாய் சிதறிப்போனோம். மனிதர்களே நீங்களும் எங்களை போல அப்படி துர்போதனைகளுக்கு அடிமையாகி, சுக்கு நுாறாய் சிதறி போகாமல் ஒற்றுமையுடன் வாழ பழகி கொள்ளுங்கள் என்ற பாடத்தை கற்பிக்கிறது.
புஸ்வாணம் : கோபுரத்தில் வாழ்கிற வாழ்க்கை கிடைத்தவுடன், நம்மில் பலர் குடிசையில் வாழ்ந்த வாழ்க்கையை மறந்து விடுகின்றோம். காரில் செல்கின்ற வாய்ப்புக் கிடைத்ததும், முன்பு வழுக்கி விழுந்த போது துாக்கி நிறுத்தியவர்களை துச்சமென எண்ணி துாரத்தில் எறிந்து விடுகின்றோம். மனைவி என்றொரு அந்தஸ்து கிடைத்தவுடன் பெற்றோரை புறக்கணித்து விடுகின்றோம்.அரசியல்வாதிகளை எடுத்து கொள்ளுங்கள். ஓட்டு வாங்கும் வரை, வீடு வீடாய் தேடி வந்தவர்கள் எம்.எல்.ஏ., ஆனவுடன் எட்டி கூட பார்ப்பதில்லை. ஆறுகள், உச்சி மலையில் உற்பத்தியானாலும் இறுதியில், சமுத்திரத்தின் பாதாளத்தில் தான் சங்கமமாக வேண்டியிருக்கிறது என்பதை பலர் சிந்திப்பதில்லை. எட்டடுக்கு மாளிகையில் வாழ்பவனாயிருந்தாலும் முடிவில், எட்டடி நீள பள்ளத்தில் தான் தன்னை ஒடுக்கி கொள்ள வேண்டும் என புரிந்து செயல்பட்டால் மிகவும் நல்லது.
இறுமாப்பும், செருக்கும் : இந்த சமயத்தில் புஸ்வானம் நமக்கு ஒரு அறிவுரையை வழங்குகிறது. என் தலைக்கு தீ வைக்கும் முன்பு வரை, என் நெருப்பு விரல்கள் உயர்ந்து, வானத்தை தொட்டு வளைத்து விடப் போகின்றன என்ற இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தேன். நெருப்பு வைத்த பின் தான் தரையில் கருகி விழும் கரிக்கட்டை ஆகி விட்டேன் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. மனிதர்களே உங்களை நான் ஒன்று கேட்கின்றேன். உங்களுக்குள்ளேயே கொளுந்து விட்டு எரியும் இறுமாப்பும், செருக்கும் உங்கள் வாழ்வின் இறுதி நிலையான இறப்பை தடுத்து நிறுத்தி விட முடியுமா?
அர்த்தமுள்ள தீபாவளி : நரகாசுரனை அழித்து ஒழித்த நிகழ்ச்சியின் நினைவாகத் தான் தீபத் திருநாள் கொண்டாடப்படுகின்றது. நரகாசுரன் மக்களை கொடூரமாய் சித்ரவதை செய்து கொன்றவன். அன்று ஒரு நரகாசுரனை அழித்து விட்டதால் இன்றுள்ள மக்கள் அனைவருமே கவலையில்லாமல் துன்பப்படாமல் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா? இல்லை. மக்கள் பிரச்னைகளை தீர்க்க விரும்பாத ஊழல் நிர்வாகம், பணத்துக்கும், அதிகாரத்துக்கும் வளைந்து கொடுக்கும் அரசியல் சட்டம், மதக்கலவரம், ஜாதி சண்டைகள், வரதட்சணை மரணங்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்பவையெல்லாம் பத்திரிகைகளில் இன்று வாடிக்கை செய்திகள்.இதுபோன்ற மக்களை துன்புறுத்தும் ஒவ்வொரு செயலும், நரகாசுர அசுரனுக்கு இணையானது தான். நம்மை நேரிடையாக பாதிக்கும் இந்த நரகாசுர வடிவங்களை முற்றிலும் ஒழிப்போம்!
எல்.பிரைட், எழுத்தாளர்,தேவகோட்டை.96980 57309.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X