பெண்களும் சர்க்கரை நோயும்!| Dinamalar

பெண்களும் சர்க்கரை நோயும்!

Updated : அக் 31, 2016 | Added : அக் 31, 2016 | கருத்துகள் (3)
பெண்களும் சர்க்கரை நோயும்!

இயந்திரமயமான உலகமே பல்வேறு வகையான வியாதிகள் வருவதற்கு காரணமாகிறது. அதில் முக்கியமானது சர்க்கரை வியாதி. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள், நடுத்தர வயதினர் என்று எல்லா வயதினருமே சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய்கள்தான் அதிக பாதிப்பு ஏற்படுத்தும். ஏனெனில், இந்நோய் தாயை மட்டுமின்றி, பிறக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. கர்ப்பகால சர்க்கரை நோய், உலக அளவில் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் மக்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பகால சர்க்கரை நோய் பாதிப்பு அதிகமாக தாக்கும் வாய்ப்புள்ளவர்கள் யார் தெரியுமா?1. 30 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பவர்கள்2. குழந்தை எடை அதிகமாக இருத்தல்3. இதற்கு முன்னால் பிறந்த குழந்தையின் எடை 4.1 கிலோ கிராமை விட அதிகமாக இருத்தல்4. தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுதல்5. கர்ப்பம் தரிக்கும் முன் தாயின் எடை அதிகமாக இருத்தல்6. தாய், தந்தை மற்றும் சகோதர, சகோதரிகளுக்கு சர்க்கரை நோய் இருத்தல்7. மருத்துவரின் முதல் சந்திப்பிலே, சிறுநீரில் சர்க்கரை இருத்தல்8. சினைப்பையில் நீர் கட்டி மற்றும் வளர்சிதை பரும வியாதி ரத்தகொதிப்பு நோய் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுதல்9. அதிக முறை கர்ப்பம் தரித்தல்மேலே சொல்லப்பட்ட பிரிவில் எந்த வகையில் நீங்கள் இருந்தாலும், மருத்துவரை அணுகி, அதற்குரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தடுக்க என்ன செய்ய வேண்டும்
பொதுவாக திருமணம் ஆனவுடன் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. காரணம், உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை. எனவே திருமணத்திற்கு முன்பு உடல் பருமன் இல்லாத பெண்கள், திருமணத்திற்கு பிறகும் உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.திருமணத்திற்கு பின்னும் உடல் எடை அதிகரித்து விட்டால், உடல் எடையை குறைத்துவிட்டு கர்ப்பம் தரிக்க வழிவகுக்க வேண்டும். திருமணத்திற்கு பின் பெண்கள் பாத்திரம் கழுவுதல், வீடு கூட்டுதல், சின்ன சின்ன வீட்டு வேலைகளை யாருடைய உதவியும் இல்லாமல் செய்ய வேண்டும். தாமாகவே வீட்டு வேலை பார்த்தால் நிச்சயமாக உடல் பருமனை குறைக்க முடியும்.
அதேபோல், திருமணத்திற்கு முன்னும், பின்னும் மற்றும் கர்ப்பம் தரிக்கும் முன்னும், பின்னும், உடற்பயிற்சி செய்வதன் மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். எனவே நம் நாட்டு பெண்கள் கவனிக்க வேண்டியது தகுந்த உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு, கர்ப்ப கால சர்க்கரை நோய் வருவதை தடுப்பது மட்டுமின்றி, நீங்கள் அரும்பாடுபட்டு பெற்றெடுக்கும் உங்கள் குழந்தைக்கும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம். பெருகி வரும் கர்ப்பக்கால சர்க்கரை நோய், கர்ப்ப காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்துகிறது.
விளைவுகள் என்ன
கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டால், கர்ப்பிணிகளுக்கு ரத்தகொதிப்பு, கருச்சிதைவு, மூச்சு முட்டல், கால் வீக்கம், தலைவலி போன்ற பிரச்னைகளும் வரும் வாய்ப்புகள் அதிகம். சில நேரங்களில் சிறுநீரக தொற்று மற்றும் பிறப்புறுப்பில் கிருமிகள், வெள்ளைப்படுதல், அரிப்பு ஏற்படும். கர்ப்ப காலத்தில் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தைக்கு பிறவி நோய்களும், தண்டுவடம் மற்றும் சில வகை இருதய மற்றும் நரம்பு கோளாறுகளும் ஏற் படும் வாய்ப்பு உண்டு. கர்ப்ப கால சர்க்கரை நோய் உள்ள தாய்மார்கள் அதிக எடையுள்ள குழந்தைகளை சுமப்பதால் பிரசவ கோளாறுகள் பிரசவத்தின்போது ஏற்பட வாய்ப்பு உண்டு. சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்புகள் மிகக்குறைவு. பெரும்பாலும் அறுவை சிகிச்சை முறைகள் குழந்தையை வெளிக் கொணர வேண்டிய கட்டாயம் ஏற்படும். சர்க்கரை நோயை அறியலாம் மிகச்சிறிய ரத்த பரிசோதனை மூலம் கர்ப்ப கால சர்க்கரை நோயை அறியலாம்.* 50 கிராம் குளுக்கோஸை நீரில் கலந்து அருந்திவிட்டு, ஒருமணி நேரத்தில் ரத்த சர்க்கரை அளவை கணக்கிட வேண்டும்.* 130 மி.கி., மேல் இருந்தால், கர்ப்ப கால ரத்தசர்க்கரை அளவு சர்க்கரை நோய் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.* 'ஓரல் ஜி.டி.டி.' குளுக்கோஸ் தாங்கும் பரிசோதனை செய்வதன் மூலமும் கர்ப்ப கால சர்க்கரை நோயை அறியலாம்.பாதிக்கப்பட்ட தாய்மார்கள் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்புச்சத்து குறைவாகவும் உள்ள உணவையும் உட்கொள்ள வேண்டும். காய்கறிகள், கீரைகள் அதிகமாக எடுத்துக்கொண்டால் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வராது. பால், பாதாம் பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு மிகச்சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது வயிற்று பிரச்னை வராமல் பாதுகாக்கும். முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் வாந்தியால் தகுந்த உணவுகள் எடுக்க முடியாமல் போகலாம். அப்போது சர்க்கரை குறை நிலை ஏற்படாமல் இருக்க பழச்சாறு, கஞ்சி போன்ற உணவு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.எப்படி சாப்பிட வேண்டும் 1. வயிறு நிறைய சாப்பிடாமல் மூன்று வேளை சாப்பிடுவதற்கு பதிலாக அளவு குறைவாக 5 வேளை அல்லது 6 வேளை சாப்பிடலாம்.2. பட்டினியாக கர்ப்ப கால சர்க்கரை நோயாளிகள் இருந்தால் சர்க்கரை அளவு குறையும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக இரவு உணவு எடுக்காமல் இருக்கக்கூடாது.3. இனிப்பு சுவைக்காக செயற்கை சர்க்கரையை பயன்படுத்தக்கூடாது. அதில் உள்ள வேதிப்பொருள் குழந்தையை பாதிக்கலாம்.- டாக்டர் சுஜாதா சங்குமணிமகப்பேறு நிபுணர்மதுரை, 0452- 267 5411

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X