ஆளுநர் பதவி; கொஞ்சம் சட்டம், நிறைய அரசியல்!

Added : நவ 01, 2016 | கருத்துகள் (3)
Advertisement
ஆளுநர் பதவி; கொஞ்சம் சட்டம், நிறைய அரசியல்!

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்கள் கடந்தபோது, கட்சித் தலைவர்களின் கவனம் திடீரென ஆளுநர் பக்கம் திரும்பியது. அவர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க தமிழகத்தின் தாற்காலிக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வந்தார். மருத்துவமனை சென்றார். அறிக்கை வெளியிட்டார். இரண்டாவது முறையாகவும் சென்று பார்த்தார்.மஹாராஷ்டிர ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், தமிழகத்திற்கு அடிக்கடி விசிட் செய்வதைவிட, தமிழகத்துக்கு முழு நேரமாக ஒருவரை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்பது பெரும்பாலானவர்கள் கருத்து. அசாதாரணமானத் தருணத்தில்தான் ஆளுநர் பதவி உற்றுநோக்கப்படுகிறது. இந்த ஆளுநர் பதவி உருவாக்கமும் அது கடந்து வந்த பாதையும் கொஞ்சம் சட்டமும் நிறைய அரசியலும் கலந்தது. கொஞ்சம் பின்னால் போவோம்..
நியமிப்பது எப்படி? : இந்தியா சுதந்திரம் பெறுவதற்குத் தயாரானதும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்துக்காக, அரசியல் நிர்ணயசபையால் அமைக்கப்பட்ட சட்டக்குழுவின் 1947ம் ஆண்டு கூட்டத்தில், "சிறப்புத் தேர்தல் குழு மூலம் ஆளுநரை அந்தந்த மாநில அரசு நியமிக்கவேண்டும்" என முடிவானது. இதனை உள்ளடக்கிய அரசியல் சட்ட வரைவானது, அரசியல் நிர்ணயசபைத் தலைவரிடம் 1948 ல் வழங்கப்பட்டது. அப்போதும், "இது சரியாக இருக்குமா?" என யோசித்ததன் விளைவு, ஆளுநர் தேர்வு குறித்து மீண்டும் விவாதம் நடந்தது. இதையடுத்து, மாநில சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படும் நான்கு பேர் கொண்ட குழுவிலிருந்து ஒருவரை ஆளுநராக, குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. மேலும், மாநில மக்களே நேரடியான தேர்தல் மூலம் ஆளுநரைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற யோசனையும் தெரிவிக்கப்பட்டது. ''இதில் எந்த முறையில் வேண்டுமானாலும் ஆளுநரை நியமித்துக் கொள்ளுங்கள். ஆனால் மூன்றில் இண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கப்பதின் மூலம் ஆளுநரை பதவிநீக்கம் செய்ய முடியும்'' என்று வரைவுச் சட்டம் கூறியது.இதனைப் பரிசீலிக்க சிறப்புக் குழு ஒன்றினை அரசியல் நிர்ணய சபைத் தலைவர் நியமித்தார். இந்தச் சிறப்புக்குழுவானது, ''ஆளுநரை குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம்'' என்று 1948 ஏப்ரல் 10-ம் தேதியன்று கூறியது. இப்படி நீண்ட விவாதம், இழுத்தடிப்புக்குப் பிறகுதான் ஆளுநரை தேர்வு செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
நேருவின் கருத்து : 1949 ல் அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதத்தில் கலந்துகொண்ட பிரதமர் நேரு, "மாநில அரசு ஒப்புக்கொள்ளக்கூடிய பொதுவானவரை ஆளுநராக நியமிப்பது நல்லது. அப்படி இல்லாவிட்டால் அவரால் அங்கு கடமையாற்றுவது சிரமம். அரசியலில் நேரடியாகப் பங்குகொள்ளாத, வெளிமாநிலத்தைச் சேர்ந்த திறமைசாலியை ஆளுநராக நியமிப்பது மிக நல்லது. அரசியல்வாதிகள் ஆளுநராக நியமிக்கப்பட்டால், தங்கள் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டக்கூடும். கல்வித் துறை அல்லது வேறு துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால், அவர்கள் அரசுடன் முழுமையாக ஒத்துழைத்து, அரசின் கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்த எல்லாவகையிலும் உதவிபுரிவதுடன் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருப்பார்கள்' என்று கூறினார். "ஆளுநரை, குடியரசுத் தலைவர் நியமிக்கும் முன்பு மாநில முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறுவது தேவையானது" என்று நேரு, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வலியுறுத்திப் பேசினர். அதெல்லாம் பேச்சோடு போச்சு. மத்தியில் ஆளும் அரசுக்கே ஆளுநரை நியமிக்கும் சர்வ வல்லமை வந்து சேர்ந்தது.
அரசியலில் சிக்கும் பதவி : ''மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே, மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி ஆளுநர்களைத் தொடர்பு கொண்டு பதவியை ராஜினாமா செய்யுங்கள் என வலியுறுத்தி உள்ளார். இதுதான் ஜனநாயகமா?” என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கோபம் காட்டியிருந்தார். தொடர்ந்து, ''ஆளுநர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், அவர்களை குடியரசுதலைவர் அழைத்து கூறட்டும். அரசு அதிகாரிகள் கூறுவது சரியல்ல” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி. சாக்கோவும் சொன்னார். ''அவர் சொல்லட்டும் நாங்கள் போயிடுறோம்'' என இவர் கூறியது வேடிக்கை.இந்தநேரத்தில், ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்தபோது அனைத்து மாநில ஆளுநர்களுக்கும், "நீங்கள் உடனடியாக உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள்'' எனக் கடிதம் எழுதிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது ராஜிவ் அரசு நியமித்த ஆளுநர்களில் பதினைந்து பேர் காங்கிரஸ்காரர்கள். நான்கு பேர் அரசு உயர் அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இரண்டு பேர் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகளாக இருந்தவர்கள். இவர்கள் காங்கிரசின் விருப்பத்துக்கு ஏற்பச் செயல்பட்டார்கள்.1967- தேர்தலுக்குப் பிறகு தான் இந்த ஆளுநர் பதவிக்கான மவுசு கூடியது. 183 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தானில் 1967 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 88 இடங்கள் கிடைத்தன. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து 93 உறுப்பினர்கள் கொண்ட பெரும்பான்மை பலத்தைக் காட்டியது. அங்கு கவர்னராக இருந்த சம்பூர்ணானந்த், காங்கிரஸ் கட்சித் தலைவரான மோகன்லால் சுகாதியாவை ஆட்சி அமைக்க அழைத்தார். காங்கிரசை ஆட்சியில் அமர்த்திய பின்னரே ஆளுநர் நிம்மதியானார்.
இதெல்லாம் சில உதாரணங்கள். : ஒருவரது அரசியல் பயணத்தில் கடைசி கட்டமாக ஆளுநர் பதவி இருக்கவேண்டும். அதற்குப் பிறகு வேண்டுமானால், துணை குடியரசுத்தலைவர், குடியரசுத்தலைவர் என அவர் பயணிக்கலாம். அதுதான் மரியாதைக்குரியதாக இருக்கும். ஆனால் ஆளுநராக இருந்தவர்கள் "பொசு"க்கென அரசியலுக்கு மீண்டும் வந்து விடுகிறார்கள். உ.பி. கவர்னராக இருந்த பிஸ்வநாத்தாஸ் ஒரிசா முதல்வரானார். கேரள கவர்னராக இருந்த ஏ.பி. ஜெயின் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முன்வந்தார். மும்பை ஆளுநராக இருந்த கிருஷ்ண மேதாப், ஒரிசா முதல்வரானார். பீகார் ஆளுநர் டி.கே.பரூவா மத்திய அமைச்சரானார். நீதிபதிகளுக்கும் ஆசை இருக்கிறது.
ஆளுநர் அதிகாரியா? : அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து துறை வாரியாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், சில ஆளுநர்களின் செயல்பாட்டினால் அவர் அரசியல்வாதியா? அல்லது அதிகாரியா? என்ற கேள்வியும் எழுந்தது. இது குறித்து உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்டப்பிரிவு தீர்ப்பினை வழங்கியது. ''ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். அதாவது இந்திய அரசாங்கத்தால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார். என்றாலும் ஆளுநரை அரசு ஊழியராகக் கருதிவிடக்கூடாது. ஆளுநரின் பதவிக்காலத்தை அரசியல் சட்டம்தான் நிர்ணயிக்கிறது. ஆனால் ஆளுநரின் எஜமானனாக இந்திய அரசாங்கத்தை அரசியல்சட்டம் ஆக்கவில்லை'' என்றது அந்தத்தீர்ப்பு.
இந்த பதவி தேவையா : ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது அவர்களின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் செயல்பட்டனர். மக்களின் வரிப்பணத்தில் கணிசமான பங்கு இவர்களுக்காகச் செலவு செய்யப்பட்டது. இப்போதைய நிலை உங்களுக்கே தெரியும்.''ஆளுநர் பதவி தேவையற்றது. முற்றிலும் நீக்கப்படவேண்டும்'' என்று ஜோதிபாசு தலைமையிலான மேற்குவங்க அரசு கூறியது. ''அது சாத்தியமில்லையென்றால் மாநில சட்டப்பேரவைத் தருகின்ற பட்டியலிலிருந்து அனைத்து மாநிலங்களின் பேரவை (இன்டர் ஸ்டேட் கவுன்சில்) ஆலோசனையுடன் ஆளுநரை நியமிக்கவேண்டும்'' என்றது.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றமும், முதலமைச்சரும் அமைச்சரவையும் இருக்கும்போது ஆளுநர் பதவி அவசியம்தானா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அசாதாரணமான சூழலில் ஆளுநர் அவசியம் என்பதனை சொல்லாமல் இருக்கமுடியவில்லை.
ப. திருமலை பத்திரிகையாளர் மதுரை

84281 15522

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bash - manama,பஹ்ரைன்
01-நவ-201610:45:25 IST Report Abuse
bash அரசியல் சார்பற்ற நேர்மையான தகுதியான மக்களால் தேர்தெடுக்கப்பட்ட திரு சகாயம் போன்ற நபர் ஆளுநராக வரும் போது தான் தமிழ் நாடு முன்னேறும் மற்றும் அரசியல் வாதிகளும் கட்டுப்படுத்தப்படுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jayadev - CHENNAI,இந்தியா
01-நவ-201610:37:29 IST Report Abuse
Jayadev ஆளுநர் தேவை இல்லை என சொல்லாமலும் இருக்க முடியவில்லை ,, அப்படி இருக்க இதனை வ்யாஞானம் தேவையா??? இப்படி பட்ட சமயத்தில் ஆளுனரில்லாமல் எதிர்க்கட்சிகள் இஷ்டம் போல ஆடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
01-நவ-201606:43:31 IST Report Abuse
மதுரை விருமாண்டி சுயசிந்தனையற்ற, சட்டத்தையும், அரசியல்சாசனத்தையும் காக்க முடியாத முதுகெலும்பில்லாத, ரப்பர் ஸ்டாம்ப்புகள் கவர்னர்கள்.. இவர்களுக்கு பீடாதிபதியாக பிரசிடெண்ட்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X