'ஓசி'யில ஸ்வீட்டு... ஊருக்கே 'ட்ரீட்டு'

Added : நவ 01, 2016
Share
Advertisement
வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. மொபைல் போன் முணுமுணுத்தது. மறுமுனையில் பேசிய சித்ரா, ''மித்து... கிளம்பி ரெடியா இரு. ஸ்வீட் வாங்க போகலாம்,'' என்று பேசி வைத்தாள்.சொன்னது போலவே பத்து நிமிடங்களில், டைட் ஜீன்சும், டாப்சுமாக வந்து நின்றாள். அதற்குள் அவசரம், அவசரமாக இட்லியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த மித்ரா, ''ஓட்டல்ல சாப்பிட்றதுக்கு வர, வர
'ஓசி'யில ஸ்வீட்டு... ஊருக்கே 'ட்ரீட்டு'

வீட்டில் 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா. மொபைல் போன் முணுமுணுத்தது. மறுமுனையில் பேசிய சித்ரா, ''மித்து... கிளம்பி ரெடியா இரு. ஸ்வீட் வாங்க போகலாம்,'' என்று பேசி வைத்தாள்.
சொன்னது போலவே பத்து நிமிடங்களில், டைட் ஜீன்சும், டாப்சுமாக வந்து நின்றாள். அதற்குள் அவசரம், அவசரமாக இட்லியை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த மித்ரா, ''ஓட்டல்ல சாப்பிட்றதுக்கு வர, வர பயமாயிருக்கு. கொஞ்சம் வெயிட் பண்ணுக்கா,'' என்றாள்.
''உண்மைதான் மித்து... அதுக்கு காரணம், நம்மூரு 'புட் செக்யூரிட்டி ஆபீசர்ஸ்'தான். பெயரளவுக்குதான் சோதனை நடத்துறாங்க,'' என்று கூறியபடி சோபாவில் சாய்ந்தாள்.
''ஏகப்பட்ட கடைகள்ல டன் கணக்குல, 'ஓசி' யில தீபாவளி இனிப்பு வாங்கி, ஆளுங்கட்சி ஆளுங்க, அதிகாரிங்களுக்கு சப்ளை பண்ணுனாராம் அந்த ஆபீசர். இப்படி 'ஓசி'ல வாங்குனா, பெயரளவுக்குதானே சோதனை நடத்த முடியும்? சோதனையும், வேதனையும் ஜனங்களுக்குதான்,'' என்று சிரித்தாள் சித்ரா.
- அப்போது 'டிவி' சேனலை, 'விஜய்' டிவிக்கு மாற்றினாள் மித்ரா.
''கூட்டுறவு துறைல வேலை பார்க்கற, 'சிவாஜி மகன்' பேர்க்காரரும் இப்படித்தான்க்கா, மலிவா கலெக்ஷன் செஞ்சு, கவர்மென்ட் ஆளுங்களுக்கு சப்ளை செஞ்சிருக்காரு,'' என்று தன் பங்கு தகவலை கொட்டினாள் மித்ரா.
அப்போது 'டிவி'யில் ஓடிக் கொண்டிருந்த, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தை பார்த்த சித்ரா, ''நம்ம ஜி.எச்.,ல, வேலை பாக்கற ஒரு ஸ்டாப், புது இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரில வேலை வாங்கித் தர்றதா, மூணு லட்சம் ரூபாய் வரை, வசூல போட்டுட்டாராம். அது யார்னு கண்டுபிடிக்க முடியாம, இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி நிர்வாகிங்க முழிச்சிட்டிருக்காங்களாம். அந்தாளு வெள்ளை சட்டை, பேன்ட்ஸ் போட்டவருங்கறது மட்டும்தான் தெரியுமாம்,'' என்றாள்.
''இது என்னக்கா கொடுமையா இருக்கு... திருப்பதியில போயி மொட்ட போட்டவன தேடுற கதையால்ல இருக்கு,'' என்று சிரித்தாள் மித்ரா.
''அவனாவது முகம் தெரியாதவன். நம்மூர்ல எல்லாருக்கும் தெரிஞ்ச ஒருத்தரு, லட்சக்கணக்கா துட்டு அடிச்சும், ஒண்ணும் பண்ண முடியாம கவுன்சிலருங்க, 'முன்னாள் துணை டவுண் டாடி'ல்லாம் தவிக்கறாங்களாம்,'' என்று வேறு மேட்டருக்கு போனாள் சித்ரா.
''இன்ட்ரஸ்ட்டிங்...மேல சொல்லுக்கா,''
''நம்மூர்ல இருக்கற ஆவின் பூத்கள, கட்சிக்காரங்களுக்கு கான்ட்ராக்ட் விட்டு கமிஷன் பார்க்கற ஒருத்தர், கவுன்சிலருங்க, 'மாஜி' துணை மேயர்னு எல்லாருக்கும், பல லட்சம் ரூபா 'பெண்டிங்' வச்சிருக்காராம். 'மாஜி' கால்நட மினிஸ்டரோட, பினாமிதான் இவரு. இதனால அவரை எதிர்க்க முடியலையாம். மிரட்டினா பதிலுக்கு மிரட்டுறாராம்,'' என்று விளக்கினாள் சித்ரா.
அப்போது 'டிவி'யில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. ''இந்த ஏரியா கேபிள் 'டிவி'காரர் 'தாமோ'வும் சரி, கலெக்ஷன் பாய் காமராஜும் சரி, சுத்த வேஸ்ட். நிம்மதியா 'டிவி' பார்க்க முடியல...'' என்று கோபத்தோடு 'டிவி'யை அணைத்தாள்.
''சரி... அதை விடுக்கா. நம்ம கார்ப்பரேஷன்ல, எல்லா டிபார்ட்மென்ட்லயும், 'கல்லா' கட்டுறதுலதான் குறியா இருக்காங்க; எந்த ஊழியர் மேலயும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கறதில்லயாமே,'' என்று அங்கலாய்த்தாள் மித்ரா.
''தலைமை சரியில்லைன்னா... கீழே இருக்கிற அதிகாரிகளும் அப்படித்தானே இருப்பாங்க...,'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''ஆமாக்கா... நானே நேர்ல பார்த்தேன்... மாநகராட்சி ஒப்பந்தம் எடுக்குற பெரிய, பெரிய கம்பெனிகாரங்க, துணிச்சலா, பரிசு பொட்டலங்களோட, மெயின் ஆபீசுக்கு வந்தாங்க. அதிகாரில இருந்து... தபேதார் வரை எல்லாத்தையும் செமத்தியா 'கவனிச்சிட்டு' போனாங்க,'' என்றாள்.
''பொட்டலத்துக்குள்ளே இனிப்பு மட்டுமில்லை, 'தங்க மழையே' பொழிஞ்சுச்சுன்னு சொல்றாங்க. முக்கிய ஆபீசரே கை நீட்டுனா... கீழ்மட்ட அதிகாரிங்க விட்டு வைப்பாங்களா என்ன,'' என்றாள் சித்ரா.
''இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்... மெயின் ஆபீசுல வேலை பார்க்கற 'ஞான' மான அந்த அதிகாரி, பொண்ணுங்கள கண்டா, 'ஈ...ஈ' ன்னு இளிப்பாராம். கண்ணுக்கு லட்சணமான பொண்ணுங்கள விடறதில்லையாம். இந்த மாதிரி மூத்த 'ஜொள்ளு'களால, சின்ன வயசு பொண்ணுங்கள்லாம் வேலைக்கு போகவே பயப்படுறாங்க,'' என்றாள் மித்ரா.
''கட்சித் தலைமை விட்ட 'டோஸ்' தாங்காம, அலர்றாங்களாம் தி.மு.க.,காரங்க,'' என்று கட்சி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''ஏன்...என்னாச்சு?''
''காவிரி மேட்டர்ல, மத்திய அரசை கண்டிச்சு, சிட்டில தி.மு.க., நடத்துன ரயில் மறியல் போராட்டத்துல, வெறும் 290 பேர்தான் கலந்துக்கிட்டாங்களாம். இதை தெரிஞ்சு, தளபதி, 2 மாவட்ட செயலாளரு, எம்.எல்.ஏ.,க்களை போன்ல கூப்பிட்டு, 'இப்படி இருந்தா கொங்கு மண்டலத்துல கட்சி தோக்கத்தான் செய்யும்'னு, டோஸ் விட்டாராம். டோஸ் வாங்குனவங்க, நாங்க காரணமில்லன்னு கைய விரிக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''இப்படித்தான் நம்மூரு வக்கீல் சங்கத்துலயும் கைய விரிக்கறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''வக்கீல் சங்கத்துலயே வழக்கா?''
''ஆமாக்கா... சங்கத்தோட பழைய நிர்வாகிகள்ல சில பேரு, 10 லட்சம் ரூபா முறைகேடு செஞ்சுட்டதா புகாராம். மீட்டிங் போட்டு கேட்டதுக்கு, 'எனக்கு தெரியாது' ன்னு, எல்லாரும் கை விரிச்சாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ம்ம்... அப்புறம்?''
''என்ன செய்வீங்களோ தெரியாது...பணத்தை கட்டலேன்னா பொதுக்குழுவை கூட்டி, ஆக்ஷன் எடுப்போம்னு, நிர்வாகக்குழு கூட்டத்துல 'வார்ன்' பண்ணியிருக்காங்களாம். வக்கீல்கள்லாம் இப்ப இந்த மேட்டரதான், 'ஹாட் டாப்பிக்கா' விவாதிச்சிட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அவங்கள விடு... நாளைக்கே 'பைசல்' பண்ணிருவாங்க. நம்மூரு ஏர்போர்ட்ட பார்த்து எல்லாரும், சிரிப்பா சிரிக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''சமீபத்துல கூட, 'சிரிப்பு வார விழா' கொண்டாடுனாங்களே...,''
''அதான் மேட்டரே. ஏர்போர்ட் விரிவாக்க திட்டம் முடக்கம், ஷார்ஜா, சிங்கப்பூர் தவிர வேற எந்த நாட்டுக்கும் நேரடி சர்வீஸ் இல்லைன்னு நிறைய பிரச்னை,''
''ஆமா...அதுக்கென்ன இப்போ?''
''உள்ளே இவ்வளவு பிரச்னைகளை வச்சிக்கிட்டு, 'சிரிப்பு வார விழா' நடத்துனத பார்த்துதான், எல்லாரும் சிரிப்பா சிரிக்கறாங்க,'' என்று சிரித்தாள் மித்ரா.
''அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என் புது மொபைல் எப்படியிருக்கு? தீபாவளி ஆபர்ல ஆன்லைன்ல ஆர்டர் பண்ணி வாங்கினேன்,'' என்று போனை காட்டினாள் சித்ரா.
அதற்கு மித்ரா, 'ஆமாக்கா... 'ஆன்லைன்'னு சொன்னதும்தான் ஞாபகம் வருது. போஸ்டல் டிபார்ட்மென்ட்ல இப்ப, ஆன்லைன் ஷாப்பிங் ஆர்டர் குவியுதாம். தீபாவளி அன்னைக்கும் டெலிவரி செய்யணும்னு, மேலிடம் ஆர்டர் போட்டுச்சாம்,'' என்றாள்.
''ம்ம்...அப்புறம்?''
''எதிர்த்து பேசுனவங்ககிட்ட, 'இருபது வருசத்துக்கு முன்னால, பண்டிகை சமயத்துல கடிதங்கள், வாழ்த்து அட்டைகளை, ஸ்பெஷல் டூட்டி போட்டு டெலிவரி செஞ்சாங்க. இப்ப லெட்டர்ஸ் குறைஞ்சாலும், ஆன்லைன் பார்சல் பட்டுவாடா அமோகமா போய்ட்டு இருக்கு. புத்துயிர் கிடைச்சிருக்கற இந்த நேரத்துல, கொஞ்சம் 'கோவாப்பரேட்' பண்ணுங்கன்னு கேட்டுக்கிட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''போன எலெக்ஷன்ல சேலை, வேட்டில்லாம் தன்னோட ஜீப்ல கொண்டு போய் சப்ளை பண்ணுனதா, அந்த 'மதுர' லேடி ஆபீசர்கிட்ட, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்துச்சே, ஞாபகம் இருக்கா...?'' - அடுத்த மேட்டரை துவங்கி, 'சஸ்பென்ஸ்' வைத்தாள் மித்ரா.
''எப்படி மறக்க முடியும்? தொண்டாமுத்துார் தொகுதிக்கு, 'பொறுப்பா' வேலை பார்த்தவராச்சே,''
''கரெக்ட். அவங்களேதான். மெட்ராசுக்கு டிரான்ஸ்பர் பண்ணி, மூணு மாசம் கூட ஆகலை. ஆளுங்கட்சி ஆளுங்கள பிடிச்சு மறுபடியும், பழைய பதவிக்கே வந்துட்டாங்க. லோக்கல் முக்கியஸ்தர் நன்றி விசுவாசத்தை காட்டிட்டாரு,'' என்றாள் மித்ரா.
''ஆனா...'அம்மா' மேல விசுவாசத்தை காண்பிக்கறதுலயும், காசு
பார்க்கலாம்ங்கறத நிரூபிச்சுருக்காரு, நம்மூரு எம்.எல்.ஏ., ஒருத்தரு,'' என்று உள்குத்து வைத்தாள் சித்ரா.
''அது யாரு...?''
''நம்ம சி.எம்., குணமாகணும்னு, கரட்டுமேடு கோவில்ல, பால்குடம் எடுக்க வச்சாரு இவரு. இதுக்காக, இவரோட தொகுதில வர்ற, பத்து வார்டு கவுன்சிலருங்க, பகுதி செயலாளருங்கன்னு, ஒவ்வொருத்தர்கிட்டயும் தலைக்கு, 25 ஆயிரம் ரூபா வசூல போட்டாராம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு சேலை, பால்குட சொம்புன்னு ஐநுாறு ரூபாக்குள்ளே, மேட்டர முடிச்சிட்டு, பாக்கிய 'ஏப்பம்' விட்டுட்டாராம்,'' என்றாள் சித்ரா.
''இவங்கள்லாம் சம்பாதிக்கறதுக்குதானே அரசியலுக்கு வர்றாங்க. அதை விடுக்கா...ஒரு சந்தோஷமான செய்தி. எங்க வீட்டு நாய், ஆறு குட்டி போட்டுருக்கு தெரியுமா,'' என்றாள் மித்ரா.
குட்டிகளை பார்க்க, சித்ரா ஆர்வமாக எழுந்தாள். காய்ந்து போயிருந்த இட்லி தட்டுடன், அவளை அழைத்துச் சென்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X