"வேலை'யை காட்டிய போலீசார் வேண்டாத "வேலை'யில் எம்.எல்.ஏ.,

Added : நவ 01, 2016
Advertisement
""இந்த வருஷம் தீபாவளி முடிஞ்சிருச்சு. பண்டிகை நேரத்துல, போலீஸ்காரங்க பம்பரமா வேலை செஞ்சாங்க போல'' என்றாள் சித்ரா.""ஆமா, வேலையும் செஞ்சாங்க; சில இடங்களில், தங்களோட "வேலையையும்' காட்டீட்டாங்களாம்,'' என்று, மித்ரா பொடி வைத்து பேசினாள்.""பண்டிகை நேரத்துல, இதெல்லாம் சகஜம் தானே,'' என்றாள் சித்ரா.""அரிசி லோடு ஏத்தி வந்த லாரியை மடக்கி, ஒரு டிராபிக் எஸ்.ஐ., அரிசி
"வேலை'யை காட்டிய போலீசார் வேண்டாத "வேலை'யில் எம்.எல்.ஏ.,

""இந்த வருஷம் தீபாவளி முடிஞ்சிருச்சு. பண்டிகை நேரத்துல, போலீஸ்காரங்க பம்பரமா வேலை செஞ்சாங்க போல'' என்றாள் சித்ரா.
""ஆமா, வேலையும் செஞ்சாங்க; சில இடங்களில், தங்களோட "வேலையையும்' காட்டீட்டாங்களாம்,'' என்று, மித்ரா பொடி வைத்து பேசினாள்.
""பண்டிகை நேரத்துல, இதெல்லாம் சகஜம் தானே,'' என்றாள் சித்ரா.
""அரிசி லோடு ஏத்தி வந்த லாரியை மடக்கி, ஒரு டிராபிக் எஸ்.ஐ., அரிசி மூட்டை கேட்ட விவகாரம், வாட்ஸ் ஆப்ல, ஆடியோ வந்து பரபரப்பாச்சு தெரியுமா,''
""ஆமா. அந்த விவகாரத்தில், அவரை ஆயுதப்படைக்கு மாத்தீட்டாங்ளே, அப்புறமென்ன,'' என்றாள் சித்ரா.
""அந்த பிரச்னைக்கு அப்புறம், அந்த பகுதி லாரிகள் மேல, போலீசார் ஒரு கண் வெச்சுட்டாங்களாம். இப்போதெல்லாம் சோதனை, வழக்குன்னு ரொம்ப கடுமையா நடந்துக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""அரிசி லோடு லாரிங்க மேல இருக்கிற அக்கறை, கொஞ்சம் மணல் லாரிங்க மேலையும் காட்டினா பரவாயில்ல. திருப்பூர்ல, வேகமாக பல வேலைகள் நடக்குதே,'' என்று சித்ரா கூறினாள்.
""அப்படி யார், எங்கே, என்ன வேலை செஞ்சுட்டாங்க?'' என்று, ஆர்வத்தோடு மித்ரா கேட்டாள்.
""பழைய பஸ் ஸ்டாண்ட் பாலம் வேலைக்கு, போக்குவரத்து மாத்தறது பத்தின ஆலோசனை கூட்டம் நடத்தினாங்க.போலீஸ்காரங்க பேச்சை கேட்டு, போக்குவரத்து மாத்தினதால, டீசல், நேரம், டிராபிக் நெருக்கடி இருக்குன்னு பேசியிருக்காங்க. மாத்து வழி பத்தி ஆலோசனை சொன்ன ரெண்டு பேருக்கு, ஆப்பு வெச்சிட்டாங்க. அந்த ரெண்டு பேருக்கு சொந்தமான பஸ் மேல, டிராபிக் ரூல்ஸ் மீறினதா சார்ஜ் போட்டு, அபராதம் வசூல் பண்ணிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""போலீசுக்கு ஏதாவது ஆலோசனை சொல்லப்போனா, இப்படியா, பதம் பார்ப்பாங்க,'' என்றாள் மித்ரா.
""பஸ் பிரச்னையில முரண்டு பிடிக்கிற போலீஸ், செத்துப்போன பாடியை வைச்சும், படாத பாடு படுத்தியிருக்காங்க,'' என்று, அடுத்த குண்டை போட்டாள் சித்ரா.
""என்ன சொல்ற நீ. டெட்பாடியை வெச்சு என்ன பண்ணாங்க'' என்றாள் மித்ரா.
""சிட்டி போலீஸ் லிமிட்டில, விபத்தில் ஒரு பெண் இறந்துட்டாங்க. போஸ்ட் மார்ட்டம் பண்றதுக்குள்ள, அந்தம்மாவோட மகன் பட்ட பாடு, அம்மாவோட பிரிவை விட மோசம இருந்துச்சு, கோவை ஜி.எச்.,சுக்கு போக "ஏசி' கார் வேணும். ஹைகிளாஸ் ஓட்டல்ல காபி, சாப்பாடுன்னு, அவரை பிழிஞ்செடுத்து அழ வெச்சுட்டாங்க,. சிக்கிக்கொண்ட நபரோ, "பழனி'யில இருக்கிற "சாமி'க்கே வெளிச்சமுன்னு முடிவு செஞ்சு, பொறுமையாக செஞ்சு தந்தாராம்,''என்றாள் சித்ரா.
""கூட்டுறவுக்கு வேட்டு வைக்கிற மாதிரி வேலை நடக்குது தெரியுமா,'' என்று, புது விஷயத்து மாறினாள் மித்ரா.
""யாரு, என்ன செய்யறாங்க'' என்று, சித்ரா ஆர்வத்தோடு கேட்டாள்.
""பாத்திர உற்பத்தி சங்கத்துல தான் இந்த கூத்து. விற்பனையில தனக்கு குறிப்பிட்ட கமிஷன் வேணுமுன்னு, "தல' கேட்குதாம். இதனால, விற்பனை விலையை அதிகமாக்க வேண்டியிருக்காம். விலையை பார்த்து, வாங்க வர்றவங்க ஓட்டம் பிடிக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
""சரி, சேல்ஸ் இல்லைனா, கமிஷன் கொறையுமே,'' என்றாள் சித்ரா.
""பொருளை "பல்க்'கா வாங்கறவங்களை தனக்கு சாதகமான கடையில் வாங்க வெச்சு, நேரடியாக கமிஷன் வாங்கறாராம்,'' என்றாள் மித்ரா.
"விற்பனையை அதிகரிக்க "அய்யா' வாங்க; "சாமி' வாங்கன்னு, சங்கங்கள் கெஞ்சிக் கொண்டிருக்க, "தல'யோ, தன்னை வளப்படுத்துவதோடு, சங்க வளர்ச்சியிலும் கொஞ்சம் அக்கறை காட்டலாம்,'' என்றாள் சித்ரா.
""எங்கேயும் நடக்காத கேவலம், திருப்பூர்ல நடந்திருக்கு'' என்று, அடுத்த விஷயத்தை ஆரம்பித்தாள் மித்ரா.
""வாக்காளர் பெயரை நீக்கின, ஆளுங்கட்சிக்காரங்க வேலையை சொல்லறீங்களா?'' என்று கேட்டாள் சித்ரா.
""ஆமா. வேட்புமனு தாக்கல் வரை பேசாம இருந்துட்டு, அதன்பின், துணை பட்டியலில் இருந்து பேரை நீக்கியிருக்காங்க. வேட்பாளரா வர்ற வாய்ப்பிருக்கிறவங்க பேரை, தந்திரமா நீக்கியிருக்காங்க. அமுக்கமா நடந்த விஷயம், வண்ண வாக்காளர் அட்டை வாங்க போன பிறகு தான் வெளிச்சத்துக்கு வந்துச்சு. மத்த வார்டுகளிலும் இதே வேலையை செஞ்சிருப்பாங்களோனு, மத்த கட்சிக்காரங்க சந்தேகப்படுறாங்க,'' என்றாள் மித்ரா.
""கலெக்டர் ஆபீசுக்கு போகாதீங்க; எங்க வேலை போயிடும். நீக்குன பெயரை எல்லாம் சேர்த்திடுறோம்; பல தடவ போன் போட்டு, அதிகாரிங்க கெஞ்சியிருக்காங்க. ஆனா, கட்சிக்காரங்க அசைஞ்சு கொடுக்காம, கலெக்டர்கிட்டே புகார் கொடுத்திருக்காங்க. இது எப்படி நடந்துச்சுன்னே தெரியல,'' என்றாள் சித்ரா.
""கடைசி நாளில், படிவம்" 8ஏ'வை, "ஆன்லைன்' மூலமாக தாக்கல் செஞ்சு, பெயரை மொத்தமாக நீக்காமல், சம்பந்தமில்லாத பாகத்துக்கு, மாத்தி போட்டிருக்காங்க. தேர்தல் கமிஷனும், அவகாசம் கொடுக்காம அவசரப்படுத்தியதால், இதை வாய்ப்பா பயன்படுத்திட்டாங்கனு பேசிக்கறாங்க. மண்டல தலைவர் "சீட்' கொடுக்காவிட்டாலும் கவுன்சிலராகிடுவார்னு தெரிஞ்சு, அவங்க பெயரையும் தூக்கினது தான், பெரிய மேட்டர். "மாஜி' நெருக்கடி கொடுத்தும், கோழிப்பண்ணை தொகுதிக்காரர் அழுத்தம் தந்ததும் இதை செஞ்சிருக்காங்கனு, பல்லடம் தாலுகா ஆபீஸ்ல பேசிக்கிட்டாங்க,'' என்று கூறவும், மொபைல் போனில் ரிங் வரவும் சரியாக இருந்து. ""ஹலோ, யாரு நடராஜ் மாமாவா, வீட்டுக்கு போனதும், அம்மாவ பேச சொல்றேன்,'' என்று இணைப்பை துண்டித்தாள், மித்ரா.
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு, தி.மு.க.,வுல யாரும் வரலையே?'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""52வது வார்டுல வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செஞ்சதால பிரச்னை வெடிச்சுதுல. அதுதொடர்பா, மா.கம்யூ., அலுவலகத்தில, அனைத்துக்கட்சி கூட்டம் நடந்துச்சு. முந்தைய நாள் எகிறி குதிச்ச தி.மு.க., மறுநாள் ஆளை காணோம்' என்றாள் மித்ரா.
""கரெக்ட்டா சொன்ன. சென்னையில நடந்த காவிரி தண்ணீர் விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்துல, மக்கள் நலக்கூட்டணி, தே.மு.தி.க., கலந்துக்கல; அதனால, அவங்க நடத்துன அனைத்துக்கட்சி கூட்டத்துல தி.மு.க., கலந்துக்கல; அவ்வளவுதான். இருந்தாலும், ஆளும்கட்சிக்கு எதிரான போராட்டம்னா சேர்ந்துக்குவோம்னு சொல்லியிருக்காங்களாம்,'' என்று கூறி முடித்த சித்ரா, ""ஆபிசுக்கு போறதுக்கே சடவா, இருக்கு, நாளைக்கு கண்டிப்பா போகோணும்,'' என சொல்லி வண்டியை முறுக்கினாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X