சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான காலியிடம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு துறையினர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். காந்திகிராமத்தில், திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய நிலையில் 10 ஏக்கர் காலியிடம் உள்ளது. இது சின்னாளபட்டி கீழக்கோட்டையில் உள்ள சில கோயில்களுக்கு சொந்தமானது. கோயில் பூசாரிகள் சிலர் சில ஆண்டுகளுக்கு முன் தனியாருக்கு கிரையம் செய்தனர். காலியிடம் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் இந்துசமய அறநிலைய துறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் வரை சென்ற இந்த வழக்கில் அறநிலைய துறைக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. ஆயினும் சட்டரீதியான சில காரணங்களால் காலியிடத்தை அறநிலைய துறை கையகப்படுத்துவது தாமதமானது. இந்த நிலையில் நேற்று சின்னாளபட்டி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தினர். அறநிலைய துறை அதிகாரிகள், மாவட்ட பதிவாளர், பதிவு துறை அதிகாரிகள், இவ்விஷயத்தில் தொடர்புடைய பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" விசாரணை இன்னும் முழுமையடையவில்லை. மேலும் பலரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE