துாத்துக்குடி, திருச்செந்துார் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவில் ஐந்தாம் நாளான இன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரை பகுதியில் முருக பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்துார். இங்கு சூரசம்ஹார விழா
சிறப்பாக நடந்து வருகிறது. இலங்கை, மலேசியா,சிங்கப்பூர், லண்டன் உட்பட வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள்
குவிந்து வருகின்றனர்.
சூரசம்ஹார விழாவில் ஆரம்ப நிகழச்சியான யாகசாலை பூஜை அக்.,31 ல் துவங்கியது.
அதிகாலை நடை திறப்பு: ஐந்தாம் நாளான இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. 1.30 க்கு விஸ்வரூபம்,
2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம், தீபாரதனை நடக்கும். காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி,
தெய்வாணையுடன் யாகசாலையில் எழுந்தருளுவார். பின் யாகசாலை பூஜை தொடரும். மூலவருக்கு காலை 9 மணிக்கு
உச்சிகால அபிேஷகம் நடக்கும். யாகசாலையில் பகல் 12 மணிக்கு மகா தீபாரதனை நடை பெறும்.
ஜெயந்திநாதர் வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன்,மதியம் 1.30 மணிக்கு
சண்முக விலாசமண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அபிஷேகம், தீபாரதனை நடக்கும். பின் மதியம் 2.30 மணிக்கு
சஷ்டி விரத மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, அங்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை
நடக்கும்.
சூரசம்ஹாரம்: இன்று மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முருகபெருமான்
கஜமுகத்துடன் வரும் சூரபத்மனின் தலையை கொய்வார். சிங்கமுகத்துடன் வரும்
சூரனின் தலையை முருகபெருமான் கொய்வார். சூரபத்மன் தன் சுய உருவத்துடன் ஆணவமாக வருபவனின் தலையை
முருக பெருமான் தலையை கொய்வார். சேவல் உருவத்தில் வரும் சூரனை அழித்து முருகபெருமான்
தன்னுள் ஆட்கொள்வார். இந் நிகழ்ச்சியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளுவார்கள்.
மாலை 6.30 மணிக்கு சந்தோஷ மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார்.கோயில் வளாகத்தில் உள்ள 108 மகாதேவர்
சன்னிதி முன்பாக எழுந்தருளும் குமரவிடங்க பெருமானுக்கு சாயா அபிேஷகம் நடக்கும்.
திருக்கல்யாணம்: ஆறாம் நாள் நிகழ்ச்சியில் அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு, மற்ற கால வேளை பூஜைகள் நடக்கும்
அதிகாலை 5 மணிக்கு தெய்வாணை அம்மன் தபசு காட்சிக்கு புறப்படுவார். உச்சிகால அபிேஷகம், பின் முருகா மடத்தில்
அம்மனுக்கு குமர விடங்க பெருமான் காட்சி தருவார். மாலை 6 மணிக்கு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். இரவு திருமண
மணடபத்தில் நள்ளிரவு ஒரு மணிக்கு திருக்கல்யாணம் நடக்கும்.
பக்தர்கள் குவிகின்றனர்: சூர சம்ஹார நிகழ்சியில் பங்கு பெற பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து
சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஏராளமான வாகனங்களிலும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஊருக்கு வெளியில்
பஸ்கள் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பக்தர்களுக்கு கழிப்பறை, குடி நீர், அவசர மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு
வருகின்றன. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பல இடங்களில் போலீசார்
கோபுரங்கள் அமைத்து கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை
இணை கமிஷனர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
---
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE