தஞ்சை, கண்டிதம்பட்டு, பொட்டச்சாவடி புது ஆற்றங்கரையோரம் சில நாட்களுக்கு முன், ஒரு மாலை வேளை. பிளாஸ்டிக் கழிவுகள் சூழ்ந்து கிடக்க, நடுவில் ஒரு பிணம் மிதந்து கொண்டிருந்தது. தகவலறிந்த போலீசார் பிணத்தை மீட்டனர்.
'காவிரி ஆற்றில் குதித்து, தற்கொலைசெய்து கொண்ட, 20 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிணம்' என்ற கோணத்தில் போலீசார்விசாரணை சென்ற போது, இறந்தவர் ஜவகர் என்பதும், தஞ்சை கருணாவதி நகரில் வசிக்கும் குமரன் என்பவர் மகன் என்பதும் தெரிய வந்தது.உடல் ஒப்படைக்கப்பட்டது; 'வாழ வேண்டிய வயதில் உனக்கு அப்படி என்னப்பா பிரச்னை...' என, பெற்றோரும், உற்றாரும் கதறி அழுது, பின் அடக்கம் செய்து விட்டனர்.இரண்டு நாட்களுக்கு பிறகு ஜவகர் தொடர்பான பொருட்களை பத்திரப்படுத்திய போது அவர் பயன்படுத்திய மொபைல் போன் வீட்டில் இருந்தவர்களிடம் கிடைத்தது. போனை, 'ஆன்' செய்த ஜவகரின் அப்பா, அதிர்ந்து போய் விட்டார். காரணம், அதில் ஜவகரின் பேச்சு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவர் பேசியதாவது:நான், ஜவகர் பேசுகிறேன்... எவ்வளவோ முறை இந்த பிளாஸ்டிக்கின் ஆபத்தை சொல்லிப் பார்த்தும் யாரும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.மெல்ல மெல்ல கொல்லும் பிளாஸ்டிக் அரக்கனிடம் இருந்து இந்த மக்களை காப்பாற்ற அக்கறை இல்லாத இந்த சமூகத்தில் வாழவே பிடிக்கவில்லை, ஆகவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் மரணத்திற்கு வேறு யாரும் காரணம் இல்லை. இயற்கை அன்னையை பகைத்து யாராலும் வாழ முடியாது. என் மரணத்திற்கு பிறகாவது பிளாஸ்டிக் ஆபத்தை உணர்ந்து, அதை ஒழிக்க அனைவரும் முன் வர வேண்டும்.இவ்வாறு ஜவகர் அதில் பேசியிருந்தார்.இதைக் கேட்டதும், குமுறி குமுறி அழுத அவரது தந்தை, 'பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்ற உன்னத கோரிக்கைக்காக என் மகன் உயிரை விட்டுள்ளான்' என சொல்ல, 'யார் இந்த ஜவகர்...' என, பலரும் கேள்வி எழுப்பினர்.
பத்தாவது வரை படித்துள்ள ஜவகர், எலக்ட்ரீஷியனாக தொழில் செய்து வந்தார். எப்போது, எப்படி அவர் மனதில் பிளாஸ்டிக்கிற்குஎதிரான கருத்து விழுந்தது என்பது தெரியவில்லை; ஆனால், அழுத்தமாக, ஆழமாக விழுந்து விட்டது. கடந்த சில வருடங்களாகவே, அவர் வீட்டில் துணிப்பை தான். யாராவது பிளாஸ்டிக் பை உபயோகித்தால், கடுமையாக கோபப்படுவார். 'நம் வீட்டை திருத்தினால் போதாது; அக்கம் பக்கம், தெரு, அடுத்த தெரு, ஊரையே திருத்தவேண்டும்' என, சொல்லிய படி இருப்பார்.
வெறுமனே சொல்லாமல், வேலை இல்லாத நேரத்தில், பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகளை மாலையாக கழுத்தில் போட்டு, 'நான்... பிளாஸ்டிக் அரக்கன்... உங்கள் மண்ணை அழிக்கப் போகிறேன்; உங்களுக்கு உணவு இல்லாமல் செய்யப் போகிறேன்; புற்றுநோய் தரப்போகிறேன்' என, கூறிய படி, பதாகைகளை கையில் பிடித்து, மக்கள் சந்திக்கும் இடங்களில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பார்.'யாரோ பைத்தியக்காரன், வேலை இல்லாமல் உட்கார்ந்திருக்கிறான்' என பலர், கேலி பேசி சென்றனர். சிலர், போகிற போக்கில், போலீசிலும் போட்டுக் கொடுத்து சென்றனர். போலீசாரும் வந்து, 'பொது இடத்தில் இப்படியெல்லாம் உட்காரக் கூடாது' என கண்டித்து, அவ்வப்போது துரத்தி விடுவது வழக்கம்.
பஜாரில் துரத்தினால், கலெக்டர் அலுவலக வாசலில். அங்கேயும் துரத்தினால், பஸ் நிலையம் அருகே. அங்கேயும் துரத்தப்பட்டால், ரயில் நிலையம் என, மக்கள் கூடுமிடங்களாக பார்த்து, பிளாஸ்டிக்கிற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டார்; கிடைத்த பலன், பைத்தியக்காரன் பட்டம். தன் மீதும், தன் பிரசாரத்தின் மீதும், மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக, மொபைல் போன் கோபுரம், கலெக்டர் அலுவலக கட்டடம் மீதெல்லாம் ஏறி, வாய் கிழிய கத்தி பார்த்தார். 'பைத்தியக்காரன்!' என்ற பட்டம் தான் வலுப்பெற்றது.
'பார்தீனியத்தை விட படு பயங்கரமாக விஷமாக பரவும் பிளாஸ்டிக்கின் ஆபத்தை, யாருமே ஏன் உணர மாட்டேன் என்கின்றனர்; ஒரு நல்ல விஷயத்தை காது கொடுத்து கேட்டு, ஒத்துழைக்க மாட்டேன் என்கின்றனரே' என்ற ஆதங்கம், மன உளைச்சலாக மாறியதன் விளைவு, தன் மொபைல் போனில், மரண வாக்குமூலத்தை பதிவு செய்து, தஞ்சை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையெல்லாம் கேள்விப்பட்ட பிறகும் கையில் இருக்கும் பிளாஸ்டிக் பையை துாக்கி எறியாமல், 'என்ன தான் இருந்தாலும் தற்கொலை செய்திருக்கக் கூடாது; பைத்தியக்காரனா இருந்திருக்கானே...' என்று தான் இன்னமும் இந்த சமூகம் சொல்கிறது.
ஜவகரை, 'பைத்தியக்காரன்!' என, இன்னொரு முறை சொல்லும் முன், பிளாஸ்டிக் ஏற்படுத்தும் அபாயத்தில் சிலவற்றை மட்டுமாவது தெரிந்து கொள்வோம்...பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், அது உருகும் போதும் வெளியேறும் வாயுக்கள், நச்சுத் தன்மை உடையவை. அதை சுவாசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர். தோல் நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் பிளாஸ்டிக் காரணமாகிறது. சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண்,செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படும்.
பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் எடுத்து வரப்படும் உணவுப் பொருட்களில், வேதிப் பொருளான, 'பென்சீன் வினைல் குளோரைடு' கலந்து விடுகிறது; இது, புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது. எளிதில் மட்காத, சிதையாத, நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி, துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசுக்கள் அங்கு வளர்ந்து, பல நோய்கள் ஏற்படுகின்றன. கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால், நீர் வழிகள் அடைபட்டு, மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. மனிதர் பயன்படுத்தி, வீசி எறியும் பிளாஸ்டிக் தாள்களை உண்ணும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, அவை இறக்க நேரிடுகிறது.
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி, அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது; பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது. கடற்கரை ஓரம், கடலில் எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் கடல் வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை, வன வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து, அவற்றை அழித்து விடக் கூடியவை. பிளாஸ்டிக்கை எரிப்பதால், 'டையாக்சின்' என்ற நச்சுப் புகை வெளியேறுகிறது. இது, கூடுதல் தீமையை தருகிறது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது. உருவான காலம் முதல் இந்த மண்ணையும், மக்களையும் மெல்ல, மெல்ல கொல்லும்.இன்னும், 10 அல்லது 20 ஆண்டு களில், உலகம், கழிவு பிளாஸ்டிக், அது தந்த நோய்களால் நிரம்பி வழியும்!
இப்போது சொல்லுங்கள்... இவ்வளவு கொடுமையான பிளாஸ்டிக்கை எதிர்த்து, தன் உயிரை மாய்த்த ஜவகர் பைத்தியக்காரனா...
- எல்.முருகராஜ் -
பத்திரிகையாளர்
murugaraj2006@gmail.com