அஜித், பிரபு, கார்த்திக், சத்யராஜ், முரளி உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களை வைத்து தொடர்ந்து 'மெகா ஹிட்' படங்கள் கொடுத்ததால், 90களில் வெற்றிப்பட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ராஜ்கபூர். பிரபு, கவுண்டமணி, செந்தில் 'காம்பினேஷனில்' இவர் இயக்கிய முதல் படமான தாலாட்டு கேட்குதம்மா, 1991ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இவரது இயக்கத்தில் அஜித்திற்கு 'பிரேக்' கொடுத்த அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்கள் வெள்ளிவிழா கண்டன. வெற்றிப்படங்களின் இயக்குனராக இருந்த ராஜ்கபூர் மிரட்டும் வில்லன், பாங்கான குணசித்திர வேடம், கலக்கல் காமெடி என்ற பன்முக கலைஞராக தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக கடந்த 25 ஆண்டுகளாக வலம் வருகிறார். இவரது பூர்வீகம் தேனி மாவட்டத்தில் உள்ள கோம்பை. திரைத்துறையின் மீது இவரது 'சின்சியாரிட்டி' காரணமாக இரண்டு தலைமுறை நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். 'கோம்பை டூ கோடம்பாக்கம்' வரையிலான வாழ்க்கை அனுபவங்கள் குறித்து அவர் கூறியதாவது:சிறுவயதில் சினிமாவின் மீது ஏற்பட்ட அதீத ஆர்வம் மற்றும் ஈர்ப்பு காரணமாக குடும்பத்தினர் எதிர்த்த நிலையிலும் கோடம்பாக்கம் நோக்கி அடி எடுத்து வைத்தேன். திரையுலக கடலில் எனது பயணத்தை துவக்குவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பத்து ஆண்டு போராட்டத்திற்கு பின் நடிகர் பிரபுவை வைத்து தாலாட்டு கேட்குதம்மா படத்தை இயக்கினேன். முதல் படமே சூப்பர், டூப்பர் ஹிட்டாக அமைந்ததால், எனது திரையுலக வாழ்க்கையில் அழுத்தமான துவக்கமாக அது இருந்தது.சினிமா வாய்ப்புக்காக போராடிய காலங்கள் நண்பர்களின் தயவால் நகர்ந்தன. உடுத்தும் உடை, உணவு, தங்குமிடம் என அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திய நட்பு வட்டாரத்தை என் வாழ்நாளில் மறக்க முடியாது. எங்கள் கிராமத்தில் பார்த்த, பழகிய நபர்களை 'கேரக்டர்'களாக மாற்றி இயக்கியவை வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. இருபது படங்கள் இயக்கிய பின் நண்பர் அதியமான் துாண்டுதலால் நடிகர் ஆனேன். காமெடி ஆர்டிஸ்ட்டுகளுடன் இணைந்து சூழ்நிலைக்கு ஏற்ப'பாடி லாங்குவேஜ்'வுடன் பேசுவதால் சிரிப்பு ஏற்படுகிறது. தனியாக 'காமெடி' செய்வது கடினம். குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்கள் என் உடல் அமைப்பிற்கு பொருத்தமாக இருக்கும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE