மனுவா கொடுத்து மானம் போச்சு... மந்திரியால விமானம் போச்சு!

Added : நவ 08, 2016
Share
Advertisement
பகலிலேயே இருட்டுக் கட்டி இருந்தது கோவை. மழை இப்போதே துவங்குவதைப் போல, மிரட்டிக் கொண்டிருந்தது. நகரத்தில் நடமாட்டம் குறைந்திருந்தாலும், விமான நிலைய வளாகம் படு பரபரப்பாய் இயங்கியபடி இருந்தது. இளம் தொழில் அதிபர்கள் இருவர் பேசிக் கொண்டே நடந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.அவர்களின் பின்னாலேயே நடந்து வந்து கொண்டிருந்த மித்ராவை, திடீரென கையைப் பிடித்து இழுத்த சித்ரா,
மனுவா கொடுத்து மானம் போச்சு... மந்திரியால விமானம் போச்சு!

பகலிலேயே இருட்டுக் கட்டி இருந்தது கோவை. மழை இப்போதே துவங்குவதைப் போல, மிரட்டிக் கொண்டிருந்தது. நகரத்தில் நடமாட்டம் குறைந்திருந்தாலும், விமான நிலைய வளாகம் படு பரபரப்பாய் இயங்கியபடி இருந்தது. இளம் தொழில் அதிபர்கள் இருவர் பேசிக் கொண்டே நடந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அவர்களின் பின்னாலேயே நடந்து வந்து கொண்டிருந்த மித்ராவை, திடீரென கையைப் பிடித்து இழுத்த சித்ரா, 'எங்கடி போற' என்றாள். வாயில் விரலை வைத்து 'உஷ்' காட்டிய மித்ரா, 'சொல்றேன்' என்று திரும்பி வந்தாள். இருவரும் கேன்டீன் நோக்கி நடந்தனர்.
''அவுங்க ரெண்டு பேரும் ஏதோ இண்டஸ்ட்ரி நடத்துறவுங்க மாதிரி தெரியுது. நம்ம 'ஏர்போர்ட்' பத்தி முக்கியமா பேசிட்டு இருந்தாங்க; அதை என்னன்னு சும்மா ஒட்டுக் கேட்டேன்,'' என்றாள் மித்ரா.
''கள்ளி! அப்பிடி என்ன தான்டி பேசிக்கிட்டாங்க?,''
''நம்ம ஊரு இண்டஸ்ட்ரிகாரங்களும் டில்லிக்குப்போயி, டில்லியில இருந்து இங்க வர்ற பிரதமரு, சென்ட்ரல் மினிஸ்டர்களைப் பார்த்து மாறிமாறி மனுவாக் கொடுத்துட்டே இருக்காங்க...''
''இத்தனை கொடுக்குறோமே, எதுவுமே செய்ய மாட்டேங்கிறாங்களேன்னு கூச்சம் இல்லாமன்னு சேர்த்து சொல்லு!''
''கரெக்ட்! அதைத்தான் அவுங்களும் பேசுனாங்க. துபாய்க்கு ஒரு 'டைரக்ட் பிளைட்' வாங்க முடியலை; ஏழு வருஷமா ஏர்போர்ட் எக்ஸ்பேன்ஷன் அப்படியே கிடக்குது. ஒரு சின்ன அசைவைக் கூட பண்ண முடியாம, இந்த ஊருல எதுக்கு இத்தனை அமைப்புன்னு கொதிச்சுப்போயி பேசிட்டுப்போனாங்க!''
''அவுங்க சொல்றது சரி தான். ஆனா, இங்க இருக்குற எம்.பி., எம்.எல்.ஏ., எல்லாம் என்ன பண்ணீட்டாங்க. திருச்சி ஏர்போர்ட்ல மாசத்துக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் பாசஞ்சர் வர்றாங்க. அதுல, பத்தாயிரம் பேரு தான், உள்ளூர் பாசஞ்சர்; மத்தவுங்க எல்லாம் வெளிநாடு போற பயணிங்க. காரணம், அங்க துபாய் முதற்கொண்டு பல வெளிநாடுகளுக்கு 'பிளைட்' இருக்கு. இங்க அப்பிடியே தலைகீழ். ஷார்ஜா, சிங்கப்பூரை விட்டா மத்த நாட்டுக்குப் போறதுக்கு, மெட்ராஸ் அல்லது கொச்சி தான் போக வேண்டியிருக்கு,'' என்றாள் சித்ரா.
''அக்கா! அதுக்கும் அவுங்க ஒரு காரணம் சொன்னாங்க. நம்ம ஊருக்கு பிஜேபிக்கு 'எலக்ஷன் இன்சார்ஜ்'ஜா இருக்கிறவரு, பிரகாஷ் ஜாவடேகராம்; திருச்சிக்கு அசோக் கஜபதி ராஜூவாம். அவரே அந்த மினிஸ்டரா இருக்கிறதால, துபாய் 'பிளைட்'டை அங்க தள்ளிட்டுப் போயிட்டாராம்,'' என்றாள் மித்ரா.
''அப்பிடின்னா, நம்மளை மாத்தி மாத்தி எல்லாரும் ஏமாத்திட்டு தான் இருக்காங்க. இதை விடு மித்து... பெங்களூரு நைட் டிரெயின், மெட்ராஸ்க்கு இன்னொரு நைட் டிரெயின் வாங்க முடிஞ்சதா நம்மால; மானம் கேட்ட பொழப்பு!'' என்று கொதித்தாள் சித்ரா.
''அது தான் நம்ம ஊரு மக்கள், நாகராஜசோழனை ஜெயிக்க வச்சதுக்குக் கிடைச்ச தண்டனை,'' என்றாள் மித்ரா.
காபிக்கு காசைக்கொடுத்து விட்டு, 'கார் பார்க்கிங்'கைக் கடந்து சென்றனர். யாரோ ஒரு நீதிபதியின் வாகனம், அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல, போலீசார், பணியாளர்கள் பலர், விறைப்பாக 'சல்யூட்' அடித்தனர்.
''இந்த வண்டியைப் பார்த்ததும், நம்மூரு லேடீஸ் கோர்ட்டுக்கு வந்த 'விட்னஸ்' ஒருத்தவுங்க, புலம்புனது ஞாபகம் வந்துச்சு,'' என்றாள் மித்ரா.
''அங்க எதுக்குடி நீ போன?,''
''என் வக்கீல் பிரண்ட் ஒருத்தியைப் பார்க்கப்போனேன். அப்ப தான் பார்த்தேன்; அரசு தரப்பு சாட்சியா வந்த ஒரு லேடி, அங்க இருக்குற வக்கீலம்மா கேட்ட பணத்தைத் தரலைன்னு கூண்டுல ஏற விடலை; ஆனா, 'விட்னஸ் வரலை'ன்னு கோர்ட்ல சொல்லீட்டாங்க,''
''அடக்கொடுமையே! அரசு தரப்பு சாட்சிக்கே இந்த நிலைமைன்னா...ரேப் கேஸ், வரதட்சணை இதுக்கெல்லாம் வர்ற எதிரணி 'விட்னஸ்'கள்ட்ட எவ்ளோ கேப்பாங்க?,''
''அதே தான்! கடைசியில வக்கீலுங்க எல்லாம் சேர்ந்து, கோர்ட்லயே வச்சு, இதை புகார் பண்ணீட்டாங்க,''
வழியை அடைத்துக் கொண்டு இருவரும் நடக்க, 'பீபீ' என்று 'ஹாரன்' கொடுத்தார், பின்னால் வந்த வண்டிக்காரர்.
தோழியை வழியனுப்ப வந்த அதே 'கால் டாக்சி'யில் ஏறி, வீட்டுக்குத் திரும்பினர். காமராஜ் சாலை வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, மாநகராட்சி கமிஷனரின் வாகனம் எதிரே சென்றது.
''என்ன மித்து! நம்ம கார்ப்பரேஷன் கமிஷனர், திடீர்னு சுறுசுறுப்பாயிட்டாரு. ரிசர்வ் சைட் மீட்பு, காலையில வார்டு விசிட்டுன்னு கலக்குறாரே. தனி அதிகாரியானதும், தைரியம் வந்துருச்சா?,'' என்றாள் சித்ரா.
''நல்லா மாறுனா, நம்மளை விட சந்தோஷப்படுறது யாரு? சின்ன வயசு; வந்தப்பவே, யாருக்கும், எதுக்கும் அடி பணியாம வேலை பாத்திருந்தார்னா ரெண்டு வருஷத்துல 'எவ்வ்வ்வ்ளவோ' பண்ணீருக்கலாம். இப்பவும் தப்பில்லை. இனிமேலாவது, பேரு சொல்றது மாதிரி, நல்லதா நாலு காரியம் பண்றாரான்னு பார்ப்போம்,'' என்றாள் மித்ரா.
''அவரை எங்க பண்ண விடப்போறாங்க, இந்த ஆளுங்கட்சிக்காரங்க. 44, 45 ரெண்டு வார்டுகள்ல ஏகப்பட்ட திருட்டு கனெக்ஷனை 'கட்' பண்ணி விட்டு, அதுக்குக் காரணமான முரளிங்கிற பிளம்பரையும் 'சஸ்பெண்ட்' பண்ணுனாரு. இப்போ, அந்த பிளம்பரோட கூட்டணி போட்டு, காசு வாங்குன அந்த வார்டு 'மாஜி' கவுன்சிலரு, பிளம்பர் மேல புகார் கொடுத்த மக்களைப் பார்த்து, 'பத்தே நாள்ல திரும்ப கனெக்ஷன் வந்துரும்'னு உத்தரவாதம் கொடுத்து, ஸ்டேஷன் கம்ப்ளைன்டை திரும்ப வாங்க வச்சிருக்காரு,'' என்றாள் சித்ரா.
''அப்பிடின்னா, அதுக்குள்ள அதிகாரிகளை 'கரெக்ட்' பண்ணிட்டு வந்துருவோம்னு அர்த்தமா, இல்லேன்னா மிரட்டி மறுபடியும் கனெக்ஷன் கொடுக்க வப்பாங்களா?,'' என்று கேட்டாள் மித்ரா.
''இதை விடு மித்து! டாக்ஸ் கலெக்ஷன்ல ஏன் இவ்வளவு 'பெண்டிங்' விழுந்துச்சு. சும்மா தண்ணி கனெக்ஷனை 'கட்' பண்ணுவோம், அடுத்து குப்பைத்தொட்டியை வைப்போம்னு பஞ்சாங்க பாணியில மெரட்டுறாங்களே. அதுக்குப் பதிலா, மாநகராட்சிக்கு அதிகமா வரி பாக்கி வச்சிருக்கிறவுங்கள்ள முதல்ல வர்ற நுாறு பேர்களோட பேரை, 'கார்ப்பரேஷன் வெப்சைட்'ல போட்டு விடலாம்ல,'' என்றாள் சித்ரா.
''அதான...முத்து வீரன், அன்சுல் மிஸ்ரா இருக்கிறப்பல்லாம் அதை செஞ்சாங்களே,'' என்றாள் மித்ரா.
''அப்பிடிப்பார்த்தா, லிஸ்ட்ல பெரிய பெரிய ஆஸ்பிடல், காலேஜ், பேக்டரிகள்லாம் வருதாம். வருஷக்கணக்கா, கோடிக்கணக்குல வரி கட்டாம, பேருக்கு ஒரு கேசைப் போட்டுட்டு இழுத்தடிச்சிட்டு இருக்காங்க. அதை ஒழுங்கா நடத்தாம, கார்ப்பரேஷனுக்காக வாதாடுறவங்களும் 'கல்லா' கட்டிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
சிங்காநல்லூர் சிக்னலைத் தாண்டி, இடதுபுறமாக வண்டியைத் திருப்பிய மித்ரா, போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்ததும் ஏதோ நினைவுக்கு வந்தவளாய், ''சரவணம்பட்டியில இருக்குற 'இன்ஸ்'சைப் பத்தி ஏகப்பட்ட புகார் வரும்லக்கா... அவரு இப்போ 'பிரில்லியண்ட்'டா ஒரு மர்டர் கேசுல 'இன்வெஸ்டிகேட்' பண்ணி, பெரிய ஆபீசர்ட்ட பேரைத் தட்டிட்டாராம்,'' என்றாள்.
''யாரு...நம்ம தீயா வேலை செய்யுற குமாரா?,''
''அவரே தான். வுமன் மிஸ்சிங் கேசுல, ஒன்பது மாசமா தேடிட்டு இருந்த ஒரு பொண்ணை, அவளோட ரெண்டாவது புருஷனே தீயை வச்சு எரிச்சு, தடயமே இல்லாமப் போட்டுப் போனதை, எப்பிடியோ கரெக்டா கண்டுபிடிச்சு, ஆளைத் தூக்கிட்டாரு,''
பின்னால் உட்கார்ந்து கொண்டே, கை தட்டி 'சபாஷ்' என்றாள் சித்ரா.
ஒண்டிப்புதூரில் எக்சர்வீஸ்மேன் ஆவின் பார்லர் முன் வண்டியை நிறுத்தி விட்டு, இருவரும் உள்ளே சென்று, சூடாக டீ குடிக்க ஆரம்பித்தனர். ருசித்து உறிஞ்சிக்கொண்டே கேட்டாள் மித்ரா.
''அக்கா! நம்மூரு ஆவின்ல 'உதவி' பொறுப்புல இருக்குற ஒரு ஆபீசரு, அங்க இருக்குற அஞ்சு பொண்ணுங்களுக்கு 'செக்ஸ் டார்ச்சர்' கொடுக்குறாருன்னு சிஎம் செல், டிஜிபி ஆபீஸ்க்கு ஏகப்பட்ட பெட்டிஷன் போயிருக்காம்,'' என்றாள்.
''அது பழைய சேதியாச்சே. ஒரு நடவடிக்கையும் இல்லாததால, வர்ற பத்தாம் தேதியன்னிக்கு, சாய்பாபாகாலனியில இருக்குற அவரோட குவாட்டர்ஸ் முன்னால தர்ணா போராட்டம் நடத்துறதுக்கு பெண்கள் அமைப்பு ஒண்ணு தீவிரமா வேலை பார்த்துட்டு இருக்காம். அநேகமா அதுக்குள்ள அவரு மேல நடவடிக்கை எடுத்திருவாங்கன்னு பாதிக்கப்பட்ட பொண்ணுங்க இன்னமும் நம்பிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
அடுத்த டேபிளில் இருந்த இளைஞன், அருகில் இருப்பவர்களைப் பற்றி கவலையே படாமல், ''சிராஜ்! எங்கடா இருக்க. சீக்கிரம் வாடா. இல்லேன்னா நான் பஸ்ல கெளம்புறேன்,'' என்று கத்திக் கொண்டிருந்தான்.
தங்களின் தேநீர்க் கோப்பையின் கடைசித் துளிகளை உறிஞ்சியபடி, இருவரும் ஒருவருக்கொருவரைப் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X