கனவுகளைக் கைப்பற்றுவோம் - 44| Dinamalar

சிறப்பு பகுதிகள்

நீங்களும் தொழிலதிபராகலாம்

கனவுகளைக் கைப்பற்றுவோம் - 44

Added : நவ 08, 2016
 கனவுகளைக் கைப்பற்றுவோம் - 44

அன்பு தோழமைகளே நலமா? அன்பு தோழமைகளே நாம் ஒரு தொழிலை துவக்கும் முன் தீர்மானிக்க வேண்டிய விஷயங்களில் அது எந்த வகை கட்டமைப்பில் அமைய வேண்டும் என்பதும் ஒன்று. ஒரு நிறுவனம் புரொப்ரைட்டர்ஷிப், பார்ட்னர்ஷிப். டிரஸ்ட், பிரைவேட் லிமிடெட் கம்பெனி என எந்த வகை கட்டமைப்பிலும் துவக்கப்படலாம். ஆனால், நாம் துவக்கப்போகும் தொழிலுக்கு எது உகந்தது, சரியானது என்பதை ஆரம்பக் கட்டத்திலேயே முடிவு செய்துகொள்ள வேண்டும்.மனித வாழ்க்கை முழுவதும் அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தது . மனித அனுபவமோ பலவகைப்பட்டது .புலன்களால் வரும் அனுபவமான காணுதல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் என்ற ஐம்புலன்களை கூறலாம். இவை தவிர மனிதனிடத்தில் அறிவும் உள்ளது. அந்த அறிவு மனிதனுக்கே உரித்தானது இதைப் பகுத்தறிவு என்கின்றோம்.. இந்த பகுத்தறிவு நம் அனுபவம் தான். இந்த பகுத்தறிவையும் தாண்டி நம்மிடையே ஆழ்நிலை அறிவு உண்டு.. இந்த அறிவு தான் நமக்கு வாழ்க்கையின் பொருளை உணர்த்துகின்றது , இன்றைய மனிதனின் ஆழ்நிலை அறிவுக்கு துணையாக இருப்பது ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட அறிவு மட்டுமல்ல . பிற மனிதர்களின் கூட்டு அனுபவமே என்பதை நாம் உணர முடிகின்றது.. இத்தகைய அனுபவத்தை கொண்டு மனிதர்களை எடைபோடவும் சந்தையைப் புரிந்துகொள்ளவும் முடிவுகள் எடுக்கும் ஆற்றல் படைத்தவராக இருக்க வேண்டும்.
இன்று நாம் பார்க்கவிருப்பது பங்குதாரர்கள் இணைந்து செயல் படும் பார்ட்னர்ஷிப் முறைதான் பெரும்பாலான பிஸினஸ்களில் பரவலாக இருக்கும் முறை. இதற்கு, இதில் இருக்கும் பல அனுகூலங்கள் தான் காரணம். ஆரம்பிப்பது சுலபம், தேவைப்படும் மூலதனம் மற்றும் அறிவு கிடைப்பது சுலபம், வளைந்து கொடுக்கும் தன்மையுடைய அமைப்பு (Flexible), ரிஸ்க்கைப் பகிர்ந்து கொள்ளலாம், இரண்டு நபர்களுக்கு மேல் சேர்ந்து முடிவு எடுப்பதால், முடிவு நன்றாக இருக்கும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் லாப நோக்குடன் ஆரம்பிக்கும் ஒரு தொழில் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தை ஆர்.ஓ.சி (ROC - Registrar Of Companies) மூலம் பதிவு செய்து கொள்ளவேண்டும்.நாம் துவக்கப் போகும் தொழிலில் யாரை பார்ட்னராக சேர்க்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். பண உதவி செய்பவர்கள் பங்குதாரராக இருக்க வேண்டுமா அல்லது கடன் கொடுப்பவராக மட்டுமே இருக்க வேண்டுமா என்பது தெளிவாக முடிவு செய்யவேண்டிய ஒரு விஷயம். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து துவக்கலாம். பார்ட்னர்ஷிப்: நாம் தொழில் ஆரம்பிப்பதற்கு மற்றொருவரின் மூலதனமோ அல்லது அறிவோ தேவைப்பட்டால் பார்ட்னர்ஷிப்பாக ஆரம்பிப்பது நல்லது. பார்ட்னர்ஷிப் தொழிலுக்கு அடிப்படை பார்ட்னர்ஷிப் ஒப்பந்தம் (PARTNERSHIP DEED) தான். இந்த ஒப்பந்தத்தை, நாமாகவே எழுதிக்கொள்ளலாம். இல்லையேல் ஒரு ஆடிட்டர் அல்லது கம்பெனி செகரட்டரி உதவியுடன் எழுதிக்கொள்ளலாம். அந்த பத்திரத்தில் எந்த சதவிகிதத்தில் மூலதனம் , மற்றும் ஒவ்வொருவரின் பொறுப்புகள் என்ன போன்ற விபரங்களையெல்லாம் எழுதி அந்த ஒப்பந்தத்தை ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பதிவும் செய்து கொள்ளலாம்.
இந்தப் பதிவுச் சான்றையும் மற்றும் பார்ட்னர்களின் அடையாள அட்டை மற்றும் முகவரிச் சான்றுகளையும் கொண்டு வங்கிக் கணக்கை பார்ட்னர்ஷிப் நிறுவனத்தின் பெயரிலேயே துவக்கிக் கொள்ளலாம். பொதுவாக பார்ட்னர்ஷிப் நிறுவனங்களில் ஒரு பார்ட்னர் மேனேஜிங் பார்ட்னர் ஆக இருப்பார். இவருக்கு வங்கிக் கணக்குகளை இயக்குவது மற்றும் பிற முக்கியச் செயல்களை செய்வதற்கு பிற பார்ட்னர்கள் அனைவரும் சேர்ந்து பவர் கொடுக்கலாம்.
பார்ட்னர்ஷிப் நிறுவனத்தைத் துவக்குவதற்கு குறைந்தபட்சமாக இரு நபர்களும் அதிகபட்சமாக இருபது நபர்களும் இருக்கலாம். தினசரி நிறுவனத்தில் வேலை செய்யும் பார்ட்னர்கள் சம்பளத்தை எடுத்துக்கொள்ளலாம். பார்ட்னர்ஷிப் நிறுவனத்திற்கு என்று பான் கார்டு தனியாக பெற்றுக்கொள்ள வேண்டும். கணவரும் மனைவியும் இணைந்து தொழில் செய்யலாம் என முடிவெடுக்கும் பொழுது தங்களது பலம் அல்லது பலவீனம் இரண்டையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
தொழிலை வழி நடத்திச் செல்லும் திறமை யாருக்கு அதிகம் என்பதை முதலில் கண்டறியவேண்டும். தலைமைப் பண்பு அதிகமுள்ள அந்த நபரை இன்னொருவர் ஏற்று அங்கீகரிக்கவேண்டும். இதில் ஆண், பெண் பேதம் கிடையாது. ஈகோவும் இருக்கக்கூடாது. நட்புணர்வுடனும் ஆழ்ந்த புரிதலுடனும் இருவரும் ஒன்றிணைந்து இயங்கவேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் அங்கே தொழில் வளர்ச்சி பெருகும். தொழில் நிமித்தமாகத் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய சமயங்களில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கவேண்டியது அவசியம்.
பெரும்பாலும் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் தொழில்களில் தொழில் வளர்வதை விட, குடும்பச் சூழலில் நிம்மதி பறிபோவதுதான் அடிக்கடி நடந்துவிடுகிறது. பொதுவாக, பெண்களின் திறமைகளை மனம் திறந்து பாராட்ட முன்வரும் ஆண் வர்க்கம், தன் மனைவி என்று வரும்பொழுது, பெண்களின் புத்திக்கூர்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஆணின் கருத்துக்கு, வீட்டில் பெண் மறுப்பு தெரிவித்தால் அது அவளுடைய ஆணவமாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. வீட்டு வேலைகளில் ஆண்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.பெண்கள் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும்பொழுது உடலளவிலும் மனரீதியிலும் எளிதில் பலமிழந்துவிடுகின்றனர். அதற்குமேல் தொழில், வேலை போன்றவற்றில் சுமையை ஏற்றுக்கொள்ளும்பொழுது அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதற்கு மாறாக குடும்பப் பொறுப்புகளை சரிசமமாகப் பகிர்ந்து கொண்டு, குழந்தை பராமரிப்பதில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, ஆண்கள், பெண்களை முன்னேற்றினால் அதிக அளவு தொழில் மாற்றங்கள் ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை.ஒருவர் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என நினைக்கக் காரணம் இந்த “எண்ணங்களே”தாழ்வான எண்ணங்களை உடையவர்களுக்கு உயர்ந்த இலட்சியங்கள் இருக்காது. எனவே அந்த இலட்சியங்களை அடைவதற்கு அவர் முயற்சிக்கவும் மாட்டார். தாழ்ந்த மனமானது உறுதியானதாகவும், வலிமையானதாகவும் அமையாது. மனதில் வலிமையும் ,உறுதியும் இல்லையெனில் எதையும் சாதிப்பதற்கு தேவையான ஆற்றலும் இருக்காது.எனவே எண்ணங்களை நாமே கட்டியாள வேண்டும் ,எண்ணங்கள் நம்மைக் கட்டியாளாத வகையில் செயற்படப்பழகிக் கொள்ள வேண்டும்.
ரோஜா மலர் மனம் நிறைந்தது . ஆயினும் செடியில் முட்களும் உள்ளன..பார்ட்னர்ஷிப் தொழில்கள் அழகானது , சாதனைப் படைக்க கூடியது ஆனால் முட்களை போல் பல தடைகள் எதிர்ப்படும் , இவற்றையெல்லாம் எதிர்த்து எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் . சாதாரணமாக வாழ்க்கையில் நாம் எதையும் எளிதாக அடைந்து விட முடியாது.எதை பெறுவதற்கும் நாம் அதற்கான விலை கொடுத்தாக வேண்டும், முயற்சி திருவினையாக்கும்” என்பதும் “முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் “என்றார் வள்ளுவப் பெருந்தகை .
முயற்சிப்போம் வெற்றி நிச்சயம்..- ஆ. ரோஸ்லின்aaroseline@gmail.com9842073219

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X