புதுடில்லி: ''கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது,'' என, பிரதமர் நரேந்திர மோடி , அதிரடியாக அறிவித்தார்.
கறுப்புப் பணத்தை மீட்பதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமடைந்து வரும் நிலையில், இந்தியாவில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புழக்கத்தில் விட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'டிவி' மூலம், நாட்டு மக்களிடையே, பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.
கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிராக புதிய போரை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, தன், 40 நிமிட உரையில் மோடி குறிப்பிட்டார். இதற்காக எடுக்கப்பட்டுள்ள பல அதிரடி முடிவுகள் குறித்து, அவர் அறிவித்தார். அதன் படி, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் இனி செல்லுபடியாகாது என, அதிரடியாக அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளால், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள மோடி, ''துாய்மை இந்தியா திட்டத்துக்கு அளித்த ஆதரவை போல, பொருளாதாரத்தை துாய்மைப்படுத்தும் இந்த திட்டத்துக்கும் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என, உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.பிரதமர் நரேந்திர மோடி
வெளியிட்ட அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
* நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
* இனி, இந்த நோட்டுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது; அவை வெறும், வண்ண காகிதங்களே
* 100, 50, 20, 10, 5, 2 மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, 1 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் வழக்கம் போல் செல்லுபடியாகும்
* கையில் உள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றிக் கொள்ள, 50 நாட்கள்
அவகாசம் அளிக்கப்படுகிறது. அதாவது, டிசம்பர், 30 வரை மாற்றி கொள்ளலாம்
* நவம்பர், 10 முதல், டிசம்பர், 30ம் தேதி வரை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம்
* புதிய டிசைனில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உடைய புதிய, 2,000 மற்றும், 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி நேற்று அறிமுகம் செய்தது; இவை, 10ம் தேதி முதல் புழக்கத்துக்கு வருகிறது
* ஏ.டி.எம்.,களில் இனி, அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து, நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக, 10 ஆயிரம் ரூபாயும்,
ஒரு வாரத்தில், அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்
* இன்று அனைத்து வங்கிகளும், கருவூலங்களும் மூடப்பட்டிருக்கும். இன்றும், நாளையும், ஏ.டி.எம்.,கள் செயல்படாது
* 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செலுத்தி கொள்ளலாம் அல்லது அதன் மதிப்புக்கு மற்ற நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்
* இவ்வாறு மாற்றிக் கொள்வதற்கு, அரசு கொடுத்துள்ள, வருமான வரி நிரந்தர கணக்கு எனப்படும், 'பான்' அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது தேர்தல் அட்டையை பயன்படுத்தலாம்
* நவம்பர், 10 முதல், நவம்பர், 24ம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு, அதிகபட்சமாக, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்
* இந்த காலகட்டத்தில், கையில் உள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில்
முதலீடு செய்வதற்கு எந்த உச்சவரம்பும் இல்லை
* டிசம்பர், 30ம் தேதிக்குள் மாற்ற முடியாத, 1,000, 500 ரூபாய் நோட்டுகளை, அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி அறிவிக்கும் இடங்களில், கால தாமதத்துக்கான காரணத்தை தெரிவித்து மாற்றிக் கொள்ள முடியும்
* நவம்பர், 11, 12ம் தேதி வரை, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, விமானம், ரயில்வே டிக்கெட், அரசு பஸ்கள், மருந்தகங்களில் பயன்படுத்த முடியும்.
யாருக்கு, என்ன பாதிப்பு
பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத சரிவு ஏற்படலாம்
ரேஷன் பொருட்கள், பால், மளிகைப் பொருட்கள், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்வோர், பெரும்பாலும், 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வர். இதனால், பொதுமக்கள் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்படலாம்
அலுவல் பணி, சுற்றுலா காரணங்களுக்காக, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றிருப்போர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக செலவழிப்பதில் சிக்கல் ஏற்படும்.திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக, தங்கம், வெள்ளி நகைகள் வாங்குவோருக்கு பாதிப்பு ஏற்படலாம்
ரியாக்ஷன்
அனைத்து வங்கி, ஏ.டி.எம்.,களில் வைக்கப்
பட்டிருந்த, 'கேஷ் டெபாசிட்' மிஷின்களிலும்,
நேற்று இரவு கூட்டம் அலை
மோதியது. ஏ.டி.எம்., இயந்திரங்களில், நேற்று பணம் எடுக்க குவிந்தோர், 400
ரூபாய் என
பதிவு செய்து, 100 ரூபாய்நோட்டுகளை எடுத்துச் சென்றனர்.
இதனால், அனைத்து,
ஏ.டி.எம்., களிலும் கூட்டம் அலைமோதி யது. இதனால், ஏ.டி.எம்., மிஷின் களில்
பணம் காலியானது; வாடிக்கையாளர்கள் பணமின்றித் தவித்தனர்
ஒரே
நேரத்தில், கோடிக்கணக்கா னோர் இந்த தகவலை போனில் பகிர்ந்து கொண்டதால்,
மொபைல் போன் சிக்னல்களில் பாதிப்பு ஏற்பட்டது; பிறரை தொடர்பு கொள்வதில்
சிக்கல் ஏற்பட்டது.
பெட்ரோல்
பங்குகளில் நேற்று, 500, 1,000 ரூபாய் நோட்டுகளைவாங்க மறுத்ததால்,
பெட்ரோல், டீசல் நிரப்ப முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
நடவடிக்கை ஏன்: ரிசர்வ் வங்கி
புதுடில்லி:'போலி
ரூபாய் நோட்டுகளை கட்டுப்படுத்தவும், ரூபாய் நோட்டுகள் பயங்கரவாதத்திற்கு
துணை போவதை தடுக்கவும், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய்க்கு
தடைவிதிக்கப்பட்டு உள்ளது' என, ரிசர்வ் வங்கி தரப்பில் விளக்கம்
அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான செயலர்
சக்தி காந்த தாஸ் மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல்,
செய்தியாளர் களிடம் கூறியதாவது:
* அனைத்து வங்கிகளுக்கும் தேவையான அளவு, 100 ரூபாய் நோட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
*
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கும் தகவல், சமூக
வலைதளங்களில் முன் கூட்டியே வெளி வந்ததாக கூறப்படுகிறது; அதுபற்றி விசாரணை
நடக்கும்
* மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் கறுப்பு பணம் ஒழிக்கப்படும்; பொருளாதாரம் வளர்ச்சி அடையும்
* புதிதாக, 500 ரூபாய் மற்றும் 2,000 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப் படுத்தப்படும்
* பண பரிமாற்றத்தின் போது வங்கிகள் வீடியோ கேமராவை பயன்படுத்த வேண்டும்; மக்களும், இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும்
* கண்காணிப்பிற்காக, மும்பை ரிசர்வ் வங்கியில் கட்டுப்பாட்டு அறை செயல்படும்; அதன் தொலைபேசி எண்: 022 - 2260 2201,
2260 2944
*
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு, 500 ரூபாய் மற்றும், 1,000 ரூபாய் பணம்
பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது; மத்திய அரசின் நடவடிக்கைக்கு இதுவும்
ஒரு காரணம்
* போலியான ரூபாய் நோட்டுகளின் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும்
* 2011 முதல் 2016 வரை, 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம், 76 சதவீதமும், 1,000
ரூபாய்
நோட்டுகளின் புழக்கம், 109 சதவீதமாகவும் இருந்துள்ளது. ஆனால், பொருளாதார
வளர்ச்சி விகிதம், வெறும், 30 சதவீதம் மட்டுமே இருந்துள்ளது
உங்கள் பணம் உங்களிடமே: மோடி உருக்கம்
மத்திய
அமைச்சரவை கூட்டத்துக்கு பின், நாட்டு மக்களுக்கு, 'டிவி' மூலம்
உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''உங்கள் பணம் உங்களுக்கு சொந்தமானது;
அதைப் பற்றி நீங்கள் சிறிதும் கவலைப்படத் தேவை யில்லை,'' என, திட்டவட்டமாக
கூறினார்.
கறுப்புப் பணத்தை ஒழிப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர
மோடி, மத்திய அமைச்ச ரவை கூட்டத்தை கூட்டி, நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.
இதன்பின், 'டிவி' மற்றும் ரேடியோவில், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஊழல் மற்றும் கறுப்புப் பண விவகாரத்தால்,
நம் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது; இவை, நம் வெற்றிக்கு
மிகப்பெரிய தடைக்கற் களாக உள்ளன.பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இந்தியா
முதலிடத்தில் உள்ளது.
ஆனால், உலக ஊழல் நாடுகளின் பட்டியலில் நம்
நாடு, 76வது இடத்தில் உள்ளது. கறுப்புப் பணத்தை முடக்க, மத்திய அரசு
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது; 1.26 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப்
பணம் கணக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கறுப்புப் பணப் பிரச்னை,
நாடு முழுவதும் புரையோடிக் காணப்படுகிறது; ஊழல், மோசமான நோயாக
உருவெடுத்துள்ளது. இதை ஒழிக்க, அதிரடி நடவடிக்கைகளை கட்டாயம் எடுத்தே தீர
வேண்டும். கறுப்புப் பணம், பயங்கரவாதம், ஊழல் போன்ற கொடூரங்களுக்கு எதிராக,
தீர்க்கமான போர் தொடுத்தாக வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
நாட்டில்
நடக்கும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள், பொருளாதார
வளர்ச்சிக்கு பெரியளவில் முட்டுக்கட்டையாக உள்ளன. இரண்டரை ஆண்டுகால
ஆட்சியில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள் ளது. இருப்பினும், இந்த
நடவடிக்கைகளுக்கு, கறுப்புப் பண பிரச்னையால் பலனில்லாமல் போய்விட்டது.
பயங்கரவாதிகள், நம் நாட்டு பொருளாதாரத்தை சீர்குலைக்க, கறுப்புப் பணத்தையும், போலி கரன்சிகளையும் ஆயுதமாக பயன்படுத்து கின்றனர்.
ஊழல் கரையான்கள் போன்ற இப்பிரச்னை
களுக்கு,
சிறந்த தீர்வு காணப்பட வேண்டும். எனவே, 500 ரூபாய் மற்றும்1,000 ரூபாய்
நோட்டுகள் செல்லாது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.இந்த நோட்டுகளை, நவ., 10ம் தேதி முதல், டிச., 30ம் தேதி வரை, வங்கி, தபால்
நிலையங் களில் டெபாசிட் செய்யலாம் அல்லது புதிதாக புழக்கத்தில் விடப்படும்,
500 அல்லது, 2,000 ரூபாய் கரன்சி நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.
முதற்கட்டமாக, வங்கிகளுக்கு புதிய கரன்சி நோட்டுகள் குறைந்தளவே சப்ளை செய்யப் படும். அதன் பின், அதிகளவு சப்ளை செய்யப் படும். உங்கள் பணம் உங்களுக்கு சொந்த மானது; அதைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை.
புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் தற்காலிக கஷ்டங்களை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். கறுப்புப் பணத்தால், இந்திய பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படுவதால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வங்கி, தபால் நிலையங்களின் ஊழியர்கள், இந்த இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து, அதற்கேற்ப கடமையாற்றுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசியல் கட்சிகள், தொண்டர்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் உள்ளிட்டவை, கறுப்புப் பணத்துக்கு எதிராக அரசு எடுக்கும் இந்த நடவடிக்கை பெரியளவில் வெற்றிபெற உதவ வேண்டும்.
வங்கிகள்,இன்று( 09.11.2016) செயல்படாது; ஏ.டி.எம்.,கள் இரண்டு நாட்கள் செயல்படாது. இதனால் ஏற்படும் கஷ்டங்களை, பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். ஒரு சிறந்த நாட்டை கட்டமைப்பதற்காக மேற் கொள்ளப்படும் நடவடிக்கையில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கசப்பு மருந்து தான்
இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழிக்க, பயங்கரவாதிகள் வழியாக கள்ள நோட்டுகளை புழக்கத்தை விட, பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியது. இதை தகர்த்து எறியும் வகையில், மத்திய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
இப்படியொரு முடிவை எடுக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகி விட்டது; இது சாதாரண மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்ததை காப்பாற்ற மக்கள் பொறுத்து கொள்ள வேண்டும்.
'தினமலர்' வாசகர்கள் கருத்து '
கறுப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இனி
செல்லாது' என, நேற்றிரவு பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து, தினமலர் வாசகர்கள், இணையதளத்தில் செய்த கருத்துப்பதிவுகள்:
Gnanam, Nagercoil, இந்தியா
கள்ள நோட்டுகளை ஒழிக்க இதுவே தகுந்த நடவடிக்கை. ஓரிரு நாட்கள் சிறு, சிறு தொல்லைகள் இருக்கலாம். நாட்டு நலத்திற்காக சகித்துக்கொள்வோம்; நல்லதே நடக்கும். -
Pandiyan, Chennai, இந்தியா
அருமையான, துணிச்சலான நடவடிக்கை. சாதாரண மக்கள் பாதிக்காத வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளுவது அவசியம்; பாராட்டுக்கள்...
முக்கண் மைந்தன் - Seoul, தென் கொரியா
'கே டி'ப் பய்யங்கதான் முழி பிதுங்கி நிக்கப்போறாய்ங்க...
sriram, chennai, இந்தியா
மோடி அவர்களுக்கு, பாராட்டுக்கள். தைரியமான முடிவு. 500, 2,000 புது நோட்டு கூட அவசியம் இல்லாதது.
aravind - chennai, இந்தியா
சூப்பர் பிளான், மோடினா தாடி வெச்சுகிட்டு, கண்ணாடி போட்டுக்கிட்டு, குர்தா போட்டுக்கிட்டு, பிளைட் ஏறி, நாடு நாடா சுத்துறவர்னு நினைச்சிங்களா? மோடி டா... மோடி...
தமிழர்நீதி, சென்னை, இந்தியா
கன்டெய்னரில் சேர்த்த பணம் இனி, பழைய பேப்பர் கடைக்கு தானா?
Sundar, Dubai, ஐக்கிய அரபு நாடுகள்
ரொம்ப பெரிய ஆப்பு. இது தான் நல்ல முடிவு. என் நாடு முன்னேற்ற பாதையில் போகிறது. அருமையானா திட்டம். மோடி போல் துணிச்சல் யாருக்கும் வராது.
உன்னை போல் ஒருவன் Chennai, இந்தியா
இது போன்ற திட்டம் வரும் என்று நினைத்து பார்த்ததே இல்லை... தலை வணங்குகிறேன்...!
சூத்திரன், Madurai, இந்தியா
என்கிட்ட, இரண்டு, 500 ரூபாய் நோட்டும், நான்கு, 10 ரூபாய் நோட்டும் தான் இருக்கு. நாளைக்கு சோத்துக்கு என்னயா பண்றது?
Gopal - Pudukkottai, இந்தியா
தல, உங்க ஆட்சியிலையாவது, இது மாதிரி ஒரு அதிரடி எடுத்தீங்களே, சூப்பர். பாராட்டுக் கள், வாழ்த்துக்கள்.
Bala - Chennai, இந்தியா
மக்கள் நன்றாக சிந்திக்கட்டும். அவர்களுக்கே விளங்கும், இதனால் யார் பாதிப்படைவார்கள் என்று.
Natrayan M - Dindigul, இந்தியா
இந்தியாவின் பொருளாதாரத்தை முடக்க சில வெளிநாடுகள் செய்யும் சதியை மோடி அரசு கண்டுபிடித்து சரிசெய்துள்ளது. தற்போது இது ஒரு பெரிய பிரச்னையாக தெரியலாம். காலப்போக்கில் இது சரியாகிவிடும்.
Siva - Chennai, இந்தியா
சிவாஜி படம், 'லாஸ்ட் சீன்' மாதிரி இருக்கு. தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மக்கள் பாவம்; வட போச்சே...
Bala - Chennai, இந்தியா
சும்மா அதிருதுல... இந்த அதிரடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
Visu Iyer - chennai, இந்தியா
இந்த பணத்தை மாற்றிக் கொடுக்க, கமிஷன் வாங்கியே சில கோடி சம்பாதிக்கலாம் போலிருக்கே...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (309)
Reply
Reply
Reply