ஒரே கல்லில் மோடி வீழ்த்திய மூன்று மாங்காய்கள்!| Dinamalar

ஒரே கல்லில் மோடி வீழ்த்திய மூன்று மாங்காய்கள்!

Added : நவ 09, 2016 | கருத்துகள் (33)
ஒரே கல்லில் மோடி வீழ்த்திய மூன்று மாங்காய்கள்!

''முனியா, இன்னிக்கு மட்டும் நீ ஆடு மேய்க்கப் போய்ட்டு வாப்பா''''ஏம்மா அண்ணனுக்கு என்னாச்சு''''அண்ணனுக்கு மேலுக்குச் சுகமில்லப்பா''''சரிம்மா''''ஆடு மேய்க்க போகும் போது பக்கத்து வயலில் முத்தழகுன்னு ஒரு பொண்ணு ஆடு மேய்ச்சிக்கிட்டு இருக்கும். அந்தப் பொண்ணு அண்ணனுக்குச் சரிப்பட்டு வருவாளான்னு பாரு. அவங்க வீட்டுல நாளைக்குச் சம்பந்தம் பேச வாராங்க''''சரிம்மா'' ''அப்புறம் இன்னொரு விஷயம். பக்கத்து காட்டுலருந்து ஒரு நரி வந்து ஆடுகளத் திருடிக்கிட்டுப் போகுதாம். எப்படியாவது அந்த நரியப் பிடிச்சுப் போட்டுத் தள்ளிருப்பா. இல்லாங்காட்டி நம்ம ஆடு நமக்கு மிஞ்சாதுப்பா''''சரிம்மா''ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை வீழ்த்திய அந்த புத்திசாலித் தாய் தான் நம் பிரதமர் நரேந்திரமோடி. ஒரே அறிவிப்பின் மூலம் ஆடு மேய்த்தாயிற்று; அண்ணனுக்குப் பெண் பார்த்தாயிற்று; ஆடுகளை கொல்ல வரும் நரியையும் அழித்தாயிற்று.ராமாயணத்தில் ஒரு காட்சி. சுக்ரீவனுக்கு ராமனின் திறமையின் மேல் அவ்வளவாக நம்பிக்கை ஏற்படவில்லை. இவனால் வலிமை மிகுந்த வாலியை எதிர்க்க முடியுமா? 'நரேந்திரமோடியால் நாட்டை ஆள முடியுமா' என்று நம்மில் இருக்கும் பல மேதாவி கள் சந்தேகப்பட்டார்களே. அது போலத் தான் சுக்ரீவனின் நிலையும். சுக்ரீவன் ஐயத்தைப் போக்க ராமன் ஒரே அம்பில் ஏழு மரங்களை வீழ்த்துகிறான். மோடியை சந்தேகப்பட்டவர்களின் மூக்கை உடைக்க அவர் ஏவிய ராமபாணம் தான் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு. மோடி விட்ட ராமபாணம் துளைத்தெடுத்த மரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா?
கறுப்புப்பணம் : இது ஆயிரம் ஆண்டுகளாக ஏழைகளின் வியர்வையையும் ரத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டிருந்த விஷ மரம். அந்த மரத்தின் பலவீனமான இடத்தில் பலமாக ஆப்பு வைத்து விட்டார் மோடி. ஊழல் என்று இன்னொரு விஷ மரம். நேர்மையாக வாழ்பவர்களை கோமாளிகள் ஆக்கிய மோசமான மரம். கோவையில் ஒரு சாதாரண அரசு அதிகாரியின் வீட்டில் சிக்கிய பணத்தின் மதிப்பு 69 கோடி ரூபாய் என்றால், ஊழல் எந்தளவுக்கு நம் பொருளாதாரத்தில் ஊடுருவியிருக்கிறது என புரிந்து கொள்ளுங்கள்.நம் பொருளாதார அமைப்பிற்கு வெளியே மிக அதிகளவில் பணம் புழங்கிக் கொண்டிருக்கிறது. இது எந்த கணக்கெடுப்பிலும் வராது. எந்த கண்காணிப்பிலும் வராது. அதற்கு வரி விதிப்பு முதலிய கட்டுப்பாடுகள் கிடையாது. மான்கள் ஒழுங்காக வரிசையாக மேய்ந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில், மூர்க்கமான ஓநாய்களை அவிழ்த்து விட்டால் என்ன ஆகும். ஒரு கட்டத்தில் கறுப்புப் பணம் என்ற ஓநாய், வெள்ளைப்பணம் என்ற மான்களை கொன்று விடும் அபாயம் இருக்கிறது. இந்த அபாயம் ஒரு பயங்கரமான விஷ மரம். இதையும் மோடியின் அம்பு துளைத்து விட்டது. இந்த இரண்டையும் விட மோசமான நச்சு மரம் ஹவாலா. இந்த முறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறிக் கொண்டிருக்கிறது. இவை நம் பொருளாதார அமைப்பிற்குள் வராமலேயே போய்விடுகின்றன.
தீவிரவாதிகள் கள்ள நோட்டு : இவை அனைத்தையும் விட, கொடிய விஷ மரம் அண்டை நாட்டுத் தீவிரவாதிகள் அடிக்கும் கள்ள நோட்டு. இப்போது புழக்கத்தில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுகளில், பத்து சதவீதம் கள்ள நோட்டுகள் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். கள்ள நோட்டு அடிப்பவர்கள், நம் சட்டை பையிலிருந்து பணத்தை திருடுகிறார்கள். பின் அதை வைத்து கொண்டு துப்பாக்கிகளையும், குண்டு களையும் தயாரித்து அதை வைத்து கொண்டே நம்மைக் கொல்கிறார்கள். நம் சொத்துக்களையும் கொள்ளையடிக்கிறார்கள். நம் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள்.
என்ன கொடுமை சரவணா? ஒவ்வொரு நோட்டாக எடுத்து பார்த்து, இது கள்ள நோட்டா இல்லையா என்று கண்டுபிடிப்பது, நடைமுறையில் சாத்தியமில்லை. ஒட்டுமொத்தமாக பழைய நோட்டுகளை செல்லாதவையாக்கி விட்டால், கள்ள நோட்டு அடிக்க முடியாதபடி புதிய நோட்டுகளை கொண்டு வந்து விட்டால், ஆடு மேய்த்தலும், அண்ணனுக்கு பொண்ணு பார்த்தலும், ஒரே சமயத்தில் நிகழ்வது என்பது இது தான்.
அறியாமை : யாரோ ஊழல் செய்கிறார்கள். எவனோ கருப்புப்பணம் வைத்திருக்கிறான். எங்கோ ஹவாலா நடக்கிறது. எங்கோ நாட்டின் எல்லையில் தீவிரவாதிகள் கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுகிறார்கள் என்று சொல்வது அறியாமையின் உச்சகட்டம். இந்த விஷ மரங்கள் விஷத்தை எப்படி நம்முள் செலுத்துகின்றன தெரியுமா? விலைவாசி ஏறுகிறது; கடினமாக உழைப்பவர்களின் உழைப்பு திருடப்படுகிறது. நேர்மையானவர்கள் கையில் வைத்திருக்கும் பணத்திற்கு மதிப்பில்லாமல் போய் விடுகிறது. ஒழுங்காக வாழ்பவர்கள் சொத்து வாங்கவே முடியாது என்ற நிலைமை வருகிறது. பார்த்தார் மோடி; எடுத்தார் வில்லை; விட்டார் அம்பை! பெருமதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால், விஷ மரங்கள் வீழ்ந்தன என்று சொல்ல முடியாது. ஆனாலும் விஷத்தின் வீரியம் பெரும் அளவு குறைந்து விட்டது. பல இடங்களில் விஷத்தன்மை முறியடிக்கப்பட்டு விட்டது. இப்படி ஒரேயடியாக செய்யாமல், தவறு செய்தவர்கள் மேல் படிப்படியாகத் தக்க நடவடிக்கைகள் எடுத்திருக்கலாமே என்று, சிலர் குறை சொல்கிறார்கள். கருப்புப் பணம் வைத்திருப்பவர்களை 'ரெய்டு' செய்வதை விட்டு விட்டு, அடித்தட்டு மக்களை அவதிக்கு உள்ளாக்குகிறீர்களே என்று நேற்று தொலைக்காட்சியில் ஒருவர் அழுதார். ஊழல் பெருச்சாளிகளைச் சிறையில் அடைப்பதை விட்டு விட்டு, எங்களை இப்படி கொடுமைப்படுத்துகிறீர்களே என்று ஒரு குடும்பத் தலைவி அங்கலாய்த்தார்.
பல்ஸ் போலியோ : குழந்தை பிறந்தவுடன் குறிப்பிட்ட காலகட்டத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்று காலம் காலமாக டாக்டர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியா போன்ற பெரிய நாட்டில் மக்கள் அனைவரும் இதனை சரியாக பின்பற்றுகிறார்களா என்ற கண்காணிப்பு நடைமுறையில் சாத்தியம் இல்லை. அதனால் நம்மால் போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. இதே பிரச்னை சீனாவில் இருந்தது. அவர்கள் என்ன செய்தார்கள்? ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இரு நாட்களில், ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வற்புறுத்தி சொட்டு மருந்து கொடுத்து விடுவது என தீர்மானித்தார்கள். 'பல்ஸ் போலியோ' முறை உருவாகியது. இந்தியாவிலும் இப்போது இந்த முறையைதான் பின்பற்றுகிறோம். மோடியின் அறிவிப்பு 'பல்ஸ் போலியோ' முறையில் எல்லோருக்கும் சொட்டு மருந்து கொடுப்பதை போன்றது தான். சொட்டு மருந்து கசக்கத்தான் செய்யும். ஆனால் அதன் பலன் இனிக்கும். போலியோ நோயால் குழந்தைகள் ஊனமாகும் அவல நிலை வராது.எல்லாம் சரிய்யா. கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து விட்டு இதை செஞ்சிருக்கலாமே? டிச., 31 க்கு பிறகு 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்திருக்கலாம்.அப்படி அறிவித்தால் அது அபத்தத்தின் சிகரமாக இருக்கும். பஸ்களில் செக்கிங் இன்ஸ்பெக்டர் முன்னறிவிப்பின்றி திடீரென ஏறினால் தான் செக்கிங்கினால் பலன் இருக்கும். 'பஸ் புறப்படும் போதே இன்று திருப்பரங்குன்றம் அருகே செக்கிங் இன்ஸ்பெக்டர் ஏறப் போகிறார்' என்று அறிவித்தால் பிறவித் திருடன் கூட, ஒன்றுக்கு இரண்டாய் பயணச்சீட்டு வாங்கிவைத்து கொண்டு அதை பெருமையுடன் காண்பிப்பான்.
மோடியும் வாஜ்பாயும் : மோடியின் புரட்சிகரமான அறிவிப்புக்கு நிகராக ஒரே ஒரு நிகழ்வுதான் நினைவில் நிழலாடுகிறது. 1998 ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பொக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தினார். உலக நாடுகள் மேலோட்டமாக அவரை கரித்து கொட்டின; உள்ளூர அவரை பாராட்டின. அதே போல மோடியும் பல மனித மொழிகளில், நாட்டின் பொருளாதார பிரச்னைகளை பற்றி கூறி பார்த்தார். கடைசியில் அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழியில் நச்சென்று கூறிவிட்டார். அதுதான் இந்த அறிவிப்பு. நரேந்திரமோடி போன்ற ஒரு பிரதமரை பெற நாம் தவம் செய்திருக்க வேண்டும். இந்த திடீர் அறிவிப்பால் எத்தனை இடைஞ்சல்? எத்தனை உளைச்சல்? எத்தனை அலைச்சல்? கொஞ்சம் திட்டமிட்டு செய்திருக்கலாம். ஆனால் இது ரகசியமாக இருக்க வேண்டும் என்பதால் சில சிரமங்களை தாங்கி கொள்ள தான் வேண்டும். நல்ல காரியங்கள் நடக்கும் போது இடையே கொஞ்சம் கஷ்டம் வரத்தான் செய்யும்.
ஒரே மகளுக்கு திருமணம் : நிச்சயிக்கிறீர்கள். மாப்பிள்ளை நல்லவர். நல்ல வேலையில் உள்ளார். வரதட்சணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி விட்டார்கள். திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பிலிருந்து உங்களுக்கு மூச்சு விடக்கூட நேரமில்லாமல் வேலை. நேரத்துக்கு சாப்பாடு இல்லை. போதியளவு துாக்கம் இல்லை. திருமணம் நடந்து ஒரு ஆண்டு கழித்து எதனை நினைப்பீர்கள்? அலைச்சலையா? துாக்கமின்மையையா? இல்லை. உங்கள் செல்வ மகளின் கையை பிடித்து, கம்பீரமான உங்களின் மருமகனின் கையில் கொடுத்த போது, உங்கள் கண்களின் ஓரத்தில் துளிர்த்த கண்ணீரையா?
69 ஆண்டுகள் கழித்து சுதந்திரமடைந்து 69 ஆண்டுகள் கழித்து இன்று தான் இந்திய பொருளாதாரம் வயதுக்கு வந்திருக்கிறது. இன்று நடப்பது பூப்புனித நீராட்டு விழா. ஆங்காங்கே சில வலிகளும் வேதனைகளும் இருக்கத்தான் செய்யும். அதை பெரிது படுத்தாதீர்கள். நாடு அடையப் போகும் நல்லதை எண்ணிப் பாருங்கள். உங்கள் மகள் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து பாருங்கள். பதறாதீர்கள். நல்லவர் சொத்துக்கு நாசம் இல்லை. நடப்பது எல்லாம் நன்மைக்கே.
வரலொட்டி ரெங்கசாமிஎழுத்தாளர், மதுரை

varalotti@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X