வாஷிங்டன்:அமெரிக்க பார்லிமென்ட்டுக்கு நடந்த தேர்தலில், ஐந்து இந்தியர்கள் வெற்றி
பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில், அதிபர் தேர்தலுடன் சேர்ந்து, பார்லி மென்ட்டின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் தேர்தல் நடந்தது.இதில், இதுவரை இல்லாத அளவு, அதிக அளவில்
இந்தியர்கள் போட்டியிட்டனர். அதிகம் பேர், ஜனநாயக கட்சியினர் சார்பில் நிறுத்தப்பட்டனர்.
அமெரிக்க பார்லிமென்ட்டின், கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு, சியாட்டில் பகுதியில், இருந்து போட்டியிட்ட, பிரமிளா ஜெயபால், 51 வெற்றி பெற்றார்; இதன் மூலம் அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபை, எம்.பி.,யான முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாக உடைய இவர், சென்னையில் சில காலம் வசித்துள்ளார்.
இதேபோல், தமிழகத்தை பூர்வீகமாக உடைய, ராஜா கிருஷ்ணமூர்த்தி, 42, சிகாகோவில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
பிரதிநிதிகள் சபைக்கு, கலிபோர்னியாவின் சிலிகான் வேலி எம்.பி.,யாக இருந்து வரும், அமி பெரா, 51, மீண்டும் வெற்றி பெற்றார். அவர், குடியரசு கட்சி வேட்பாளர் ஸ்காட் ஜோன்சை தோற்
கடித்தார்.இவர் குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக உடையவர். ஜனநாயக கட்சியில் தீவிரமாக பணியாற்றி வரும், இவர், அதிபர் ஒபாமா, இந்தியா வந்த போது உடன் வந்தார்.
கலிபோர்னியாவின் மற்றொரு பகுதியில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரோஹித் கன்னா, 40 வெற்றி பெற்றார்.
கேரள மாநிலத்தை பூர்வீகமாக உடைய, பீட்டர் ஜேக்கப், 30, மும்பையை பூர்வீகமாக உடைய டாக்டர் அனில்குமார் உள்ளிட்டோர் இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை.
வரலாற்று சாதனை
அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், சென்னையை பூர்வீகமாக உடைய, கமலா ஹாரிஸ், 51,
ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்; அமெரிக்க செனட் சபைக்குள், இந்தியர் ஒருவர் நுழைவது, இது முதன் முறை; இதன் மூலம், கமலா, வரலாற்று வெற்றி
பெற்றுள்ளார். கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ், பல
ஆண்டுகளாகவே, ஜனநாயக கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருபவர். அவரது தாயார்
சியாமளா கோபாலன்; சென்னையில் புற்றுநோய் மருத்துவராக இருந்த அவர், அமெரிக்காவில் குடியேறினார்; கமலாவின் தந்தை அமெரிக்காவை ஒட்டியுள்ள, ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE