புதுடில்லி ; ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு நடந்த பணபரிவர்த்தனை குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி செய்தியாளர்களிடம் விளக்கினார்.
டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நாடு முழுவதும் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் பணி நடந்து வருகிறது. இந்த அறிவிப்பிற்கு ஆதரவு அளித்து வரும் மக்கள் அனைவருக்கும் நன்றி. மக்கள் பொறுமை காப்பதற்கும் நன்றி.
வங்கிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச் செல்கின்றனர். மக்கள் இதனை ஆதரிக்கின்றனர். வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் காலை முதல் நள்ளிரவு வரை பணியாற்றி வருகின்றனர். அனைத்து சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். பண பரிமாற்றங்களை நிதித்துறை அமைச்சகம் கண்காணித்து வருகிறது. சில நாட்கள் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். கூட்டம் குவிவது இயற்கையானது.
மிகப் பெரிய ஆப்பரேஷன் இப்போது தான் துவங்கப்பட்டுள்ளது. எவ்வளவு பணம் எடுக்கப்படுகிறது, டெபாசிப் செய்யப்படுகிறது என்ற புள்ளிவிபரங்களை வங்கிகளிடம் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை கேட்டறிந்து வருகிறோம். நவம்பர் 12 (இன்று) பகல் 12.15 மணி வரை எஸ்பிஐ.,யில் மட்டும் ரூ.2 கோடியே 28 லட்சம் பணபரிவர்த்தனை நடந்துள்ளது. எஸ்பிஐ.,யில் ரூ.47,868 கோடி டிபாசிப் செய்யப்பட்டுள்ளது. 58 லட்சம் பேர் இதுவரை தங்களின் பழைய நோட்டுக்களை மாற்றிச் சென்றுள்ளனர்.
இந்த நடவடிக்கை ஒரே இரவில் எடுக்கப்பட்டது கிடையாது. இந்த அறிவிப்பு வெளியிட்டதும் மக்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு செல்வார்கள் என்பது அரசு எதிர்பார்த்தது தான். புதிய நோட்டுக்களின் வடிவத்திற்கு ஏற்ப ஏடிஎம்., இயந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருவதால் பணம் எடுப்பதில் சிரமம் ஏற்படத்தான் செய்யும். மக்களிடம் ஏற்படும் பதற்றத்தை தணிப்பதற்காகவே ரகசியம் காக்கப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சில பொறுப்பற்றதனமாகவே உள்ளன. மக்களின் சிரமங்களை குறைத்து, அனைத்தையும் சரியாக செய்ய வேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது. அரசு அதனை பொறுப்புடன் செய்தும் வருகிறது.
கறுப்பு பணத்தை சுத்தப்படுத்துவது வருவாய் துறைக்கு பெரிய சவாலாக இருந்து வந்தது. உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்தும் கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வருவது சிரமமாகவே இருந்தது. இந்த முடிவை முன்கூட்டியே அறிவிப்பது சாத்தியம் இல்லாமல் போனது அதனாலேயே ரகசியமாக வைக்க வேண்டியதாக இருந்தது. ஏடிஎம்.,களில் இதுவரை ரூ.2000 நோட்டுக்கள் வைக்கவில்லை. அதனால் உங்களால் ரூ.2000 நோட்டுக்களை எடுக்க முடியாது. சட்டவிரோத பணபரிவர்த்தனைகள் பணம் மூலமாகவோ அல்லது தங்கத்திலோ நடக்காது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ரூ.2000 நோட்டில் சிப் இருப்பதாக முதல் நாளில் இருந்தே வதந்தி பரவி வருகிறது. இதில் எந்த உண்மையும் இல்லை. உண்மையில்லை பிரச்னை மக்களிடம் இல்லை. கள்ளநோட்டுக்களையும் அரசு கண்காணித்து வருகிறது. எல்லா இடங்களிலும் நீண்ட வரிசை இருந்தாலும் அனைத்து இடத்திலும் அமைதியான சூழலே உள்ளது. ஒவ்வொருவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என்பது கறுப்பு பணம் மீண்டும் உருவாக வழிவகுக்கும். அனைவரும் வங்கிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.