மும்பை: அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பெண் அட்டார்னி ஜெனரல் கமலா ஹாரிஸ், அடுத்த தேர்தலில், அந்நாட்டின் அதிபர் பதவியை பிடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், 51, அமெரிக்காவில், அட்டார்னி ஜெனரலாக உள்ளார். இவர் தாய் சென்னையைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். கலிபோர்னியாவில் நடந்த செனட் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா, வெற்றி பெற்றார்.
அமெரிக்க வரலாற்றில் முதல்முறை
அமெரிக்க வரலாற்றில், ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், செனட் உறுப்பினராக வெற்றி பெறுவது, இதுவே முதன்முறை. அமெரிக்காவில் குடியேறியோருக்கு எதிராக, டிரம்ப் கொண்டிருக்கும் கொள்கைகளை கண்டித்து, கமலா ஹாரிஸ், அந்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்று, பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், கமலா ஹாரிஸ், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக, 'தி ஹபிங்டன் போஸ்ட்' பத்திரிகை கட்டுரை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க செனட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், கமலா, ஏற்கனவே சரித்திரம் படைத்து விட்டார். கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரலாக உள்ள அவர், அப்பழுக்கற்றவர்; சாமர்த்தியசாலி என, மக்களிடையே புகழ் பெற்றவர். கமலாவுக்கு, தற்போதைய அதிபர் பராக் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடேன் போன்றோரின் ஆதரவு உள்ளது.
வரும், 2020ல் நடக்கும் அதிபர் தேர்தலில், கமலா போட்டியிட விரும்பினால், அமெரிக்கா முழுவதும் அவருக்கு ஆதரவு பெருகும் வாய்ப்பு உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில், இதுவரை, பெண் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
'இந்த நிலை விரைவில் மாறும். ஒரு பெண் அமெரிக்க அதிபராவார்' என, சமீபத்திய தேர்தலில் தோல்வியை தழுவிய, ஹிலாரி கிளிண்டன் கருத்து கூறியுள்ளார். அதிபராக உருவெடுப்பதற்கான தகுதிகள், கமலா ஹாரிசிடம் உள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் உறுதியாக கூறுகின்றன.