போலி மருத்துவத்தை ஒழிக்கவே முடியாது!| Dinamalar

போலி மருத்துவத்தை ஒழிக்கவே முடியாது!

Added : நவ 12, 2016 | கருத்துகள் (3) | |
தமிழகத்தில், 40 ஆயிரம் போலி மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதாக வந்த செய்தி, அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ துளியும் ஏற்படுத்தவில்லை. காரணம், இது பழைய, உளுத்துப் போன விஷயம்.தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் சீசனில், 'டெங்கு' காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதை ஊடகங்கள் சுட்டிக் காட்டும் போது, சுகாதாரத் துறையினர் விழித்துக் கொண்டு, போலி
போலி மருத்துவத்தை ஒழிக்கவே முடியாது!

தமிழகத்தில், 40 ஆயிரம் போலி மருத்துவர்கள், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பதாக வந்த செய்தி, அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ துளியும் ஏற்படுத்தவில்லை. காரணம், இது பழைய, உளுத்துப் போன விஷயம்.
தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் சீசனில், 'டெங்கு' காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதை ஊடகங்கள் சுட்டிக் காட்டும் போது, சுகாதாரத் துறையினர் விழித்துக் கொண்டு, போலி மருத்துவர்களை வேட்டையாடும் முயற்சியில் இறங்குவதும், காய்ச்சல் சீசன் சீரானதும் அதை கிடப்பில் போடுவதும் வாடிக்கையாகி விட்டது. ஓரளவு முன்னேறிய மாநிலமான தமிழகத்திலேயே, 40 ஆயிரம் பேர் என்றால் மிகவும் பின் தங்கிய வட மாநிலங்களில் எத்தனை லட்சம் போலி மருத்துவர்கள், மருத்துவம் என்ற பெயரில், தங்கள் கை வரிசையை காட்டிக் கொண்டிருக்கின்றனரோ தெரியவில்லை. போலி மருத்துவர்களை நிரந்தரமாக களை எடுப்பது சாத்தியமில்லை என்பதை, போலி மருத்துவர்கள் வளர்வதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.
அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைத்தாலும், எளிய மக்கள் கூட, சிறிய உடல் உபாதைகளுக்கு கூட அரசு மருத்துவமனைகளை நாடுவதில்லை. 'அங்கு சென்றால், ஒரு நாள் பொழுதும், வேலையும் வீணாகி விடும்' என, எண்ணுகின்றனர். தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் தடுக்க உகந்த வழி, இது போன்ற மருத்துவர்களை நாடுவது தான் என, பலரும் நினைக்கின்றனர். அவர் என்ன படித்திருக்கிறார் என்பது முக்கியமில்லை; எவ்வளவு சீக்கிரம் குணப்படுத்துகிறார் என்பதே முக்கியம். கிராமத்து மக்களின் இந்த மனநிலை தான், கிராமங்களில் போலி மருத்துவம் வேரூன்ற உறுதுணையாக இருக்கிறது. போலி மருத்துவம் வளர்வதற்கான காரணங்களை பட்டியலிடலாம். ஆனால், அவற்றை முழுமையாக சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்த முடியுமா என்பது தான், மில்லியன் டாலர் கேள்வி. 'மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மருந்துகளை விற்க கூடாது' என, மருந்து வணிகர் சங்கம், மருந்துக் கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், தகுதியில்லாத மருத்துவர்களுக்கு, பெயர் அச்சடிக்கப்படாத, 'லெட்டர் பேடு'களை கொடுத்து, அவர்களை ஊக்குவிக்கும் மருந்துக் கடைக்காரர்களை, மருந்து விற்பனையாளர் சங்கம் இதுவரை கண்டிக்காதது ஏன்?சில மருந்துக் கடைகளில், உள்ளே ஒரு அறையை ஒதுக்கி, மருந்துக் கடைக்காரர்களே கிளினிக் நடத்துவது, மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளின் கண்களில் இதுவரை படவே இல்லையா?அது போல, ரத்தப் பரிசோதனை மையங்களும், தகுதியில்லாத மருத்துவர்களுக்கு லெட்டர் பேடு கொடுத்து, அவர்கள் அனுப்பும் சீட்டுகளுக்கு கமிஷன் கொடுத்து விடுகின்றன. மருத்துவர்கள் சங்கம், இவ்விஷயத்தில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன்? சில போலி மருத்துவர்கள், தங்களால் சிகிச்சையளிக்க முடியாத நோயாளிகளை, பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்து, அதற்குரிய கமிஷனை பெற்றுக் கொள்கின்றனர்.இப்படி, போலி மருத்துவர்களை வளர்த்து விடுவதில் மருத்துவர்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள், ஆய்வகங்கள், பொதுமக்கள் என, அனைத்து தரப்பினருக்கும் கணிசமான பங்கு இருக்கும் போது, போலி மருத்துவம் எப்படி ஒழியும்? இத்தகைய முறைகேடுகளை களைய, நம் நாட்டில் வலுவான சட்டம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. மாநில அரசுகளின் மருத்துவப் பதிவேட்டில், மருத்துவராக பதிவு செய்யாத எவரும், 'அலோபதி' எனும் ஆங்கில மருத்துவம் செய்ய தகுதியுடையவர்கள் அல்ல. இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் சட்டப்படி பட்டம் பெற்றவர்களும், அலோபதி சிகிச்சை அளிக்க தகுதியற்றவர்களே. மேற்குறிப்பட்ட நான்கு பிரிவு மருத்துவர்களையும் இணைத்து, 'ஆயுஷ்' மருத்துவர்கள் என, குறிப்பிடுவது வழக்கம். நாட்டில், 9.32 லட்சம் அலோபதி மருத்துவர்களும், 6.86 லட்சம் ஆயுஷ் மருத்துவர்களும் இருப்பதாக, இந்திய மருத்துவக் கவுன்சில் புள்ளி விபரம் தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் விதிப்படி, 1,000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில், 1,674 நோயாளிகளுக்கு, ஒரு மருத்துவர் என்ற விகிதாச்சாரமே உள்ளது. இந்தியாவில் நிலவும் மருத்துவர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, ஆயுஷ் மருத்துவர்களுக்கு அலோபதி மருத்துவத்தில், ஒன்பது மாத கால பயிற்சியை கொடுத்து, அவர்களையும் அலோபதி மருத்துவத்தில் இணைத்து விடலாம் என்பது அரசின் திட்டம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது போல, மருத்துவர் பற்றாக்குறையை சமாளிப்பதோடு, 'உலக அரங்கில் மருத்துவர்களின் எண்ணிக்கையில், எங்களை மிஞ்ச யாரும் இல்லை' எனவும் காட்டிக் கொள்ளலாம். அரசின் இந்த தவறான கொள்கை, மருத்துவர் சங்கத்தினரை பலத்த அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதை முறியடிக்கும் வகையில், 2014 டிசம்பரில் நடந்த இந்திய மருத்துவ சங்க தேசிய ஆலோசனை கூட்டத்தில், 'ஆயுஷ் மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் செய்ய அனுமதிக்கப்பட்டால், போலி மருத்துவம் ஊக்குவிக்கப்படும்; ஆயுஷ் மருத்துவர்களை, உதவி மருத்துவராகவோ, நிலைய மருத்துவராகவோ, எந்த மருத்துவரும், மருத்துவமனைகளும் நியமிக்கக் கூடாது' என, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தெரிவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'இந்திய மருத்துவ சங்கம்' என்பது, இந்திய அளவில் மருத்துவர்களை உறுப்பினர்களாக கொண்ட ஒரு சங்கம். 'இந்திய மருத்துவக் கவுன்சில்' என்பது, மருத்துவத் துறையின் விதி முறைகளை நிர்ணயிக்கவும், கண்காணிக்கவும் அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 'ஆயுஷ் மருத்துவர்கள், அலோபதி மருத்துவம் பார்த்தால், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்' என, டில்லி மெடிக்கல் கவுன்சில் சட்டம் இயற்றியிருக்கிறது.ஆனால், ஒடிசா மாநில அரசு, ஆயுஷ் மருத்துவர்களுக்கு, அலோபதி மருத்துவத்தில், சில வார கால பயிற்சியளித்து, சில குறிப்பிட்ட மருந்துகளை மட்டும் பரிந்துரைக்கும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்க முடிவு செய்திருக்கிறது.தமிழகத்தில், பல கார்ப்பரேட் மருத்துவமனைகளில், ஆயுஷ் மருத்துவர்கள், உதவி மருத்துவர்களாக பணியமர்த்தப்படுகின்றனர். தமிழக மருத்துவ கவுன்சிலும், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளையும், இதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டம் எத்தனை கடுமையாக இருந்தாலும், மருத்துவர்கள், மருந்துக்கடை உரிமையாளர்கள், மருத்துவ ஆய்வகங்களை நடத்துபவர்கள், மருந்து நிறுவன பிரதிநிதிகள் என, மருத்துவம் சார்ந்த பிறரும், பொதுமக்களும் மனது வைக்காமல், இந்தியாவில் போலி மருத்துவத்தை ஒழிப்பது சாத்தியமே இல்லை.
- டாக்டர் டி.ராஜேந்திரன்சமூக ஆர்வலர் இ - மெயில்: rajt1960@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X