பதுக்கி வைச்சாங்க நோட்டு... பத்த வைச்சாச்சு வேட்டு!

Added : நவ 15, 2016
Share
Advertisement
கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர, பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியான மூன்றாம் நாள். சித்ராவும், மித்ராவும் அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன், வரிசையில் காத்துக்கிடந்தனர்.தண்ணீர் பாட்டிலை வாயில் கவிழ்த்து, ஆசுவாசமான சித்ரா, ''செல்லாத 500, 1,000 ரூபா நோட்டுகள வாங்க, பேங்க் வாசல்ல சோறு, தண்ணி இல்லாம நாம வரிசையில் காத்துக்கிடக்கறோம். இந்த போஸ்ட்
பதுக்கி வைச்சாங்க நோட்டு... பத்த வைச்சாச்சு வேட்டு!

கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வர, பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியான மூன்றாம் நாள். சித்ராவும், மித்ராவும் அந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன், வரிசையில் காத்துக்கிடந்தனர்.
தண்ணீர் பாட்டிலை வாயில் கவிழ்த்து, ஆசுவாசமான சித்ரா, ''செல்லாத 500, 1,000 ரூபா நோட்டுகள வாங்க, பேங்க் வாசல்ல சோறு, தண்ணி இல்லாம நாம வரிசையில் காத்துக்கிடக்கறோம். இந்த போஸ்ட் ஆபீஸ் ஸ்டாப்ஸ், என்ன பண்ணாங்க தெரியுமா?'' என்று கேட்டாள்.
''அப்படி என்ன பண்ணிட்டாங்க?''
''எங்களுக்கு மட்டும், தனியா ஒரு தொகை ஒதுக்கிக் குடுத்தா, நாங்க எங்களுக்குள்ளேயே, 500, 1,000 ரூபா நோட்டுகளை மாத்திருவோம். அதுக்கு என்ன பேப்பர்ஸ் தேவையோ, அத்தனையையும் பக்காவா ரெடி பண்ணி தந்துர்றோம்னு, தலைமை அதிகாரிகள்ட்ட போய் நின்னுருக்காங்க,'' என்று பதிலளித்தாள் சித்ரா.
''இதுக்குப் பேருதான், சந்துல சிந்து பாடுறது... சரி, அதுக்கு அதிகாரி என்ன சொன்னாராம்?''
''ஜனங்களுக்கு குடுக்கவே பணம் இல்லை... இதுல நீங்க வேறயா, போங்கம்மா... போய் வேலையப் பாருங்கன்னு அனுப்பியிருக்காரு,'' என்று சிரித்த சித்ரா, ''இன்னொரு மேட்டரையும் கேளு. நம்மூரு தீயணைப்புத் துறையில, 'கோட்டம்' பொறுப்புல இருக்குற ஆபீசரு, இதுநாள் வரைக்கும் லஞ்சமா வாங்கிக் குவித்த 1,000, 500 ரூபா நோட்டுக்கட்டுகள மாத்த பேயா அலைஞ்சிட்டு இருக்காராம். தனக்குத் தெரிந்த வங்கி அதிகாரிங்க, தனியார் பைனான்ஸ்காரங்க கிட்ட, 'எங்கிட்ட இருக்குற நோட்டுகள எப்படியாவது மாத்திக்கொடுங்கன்னு' கெஞ்சிட்டிருக்கிறாராம். ரிடையர் ஆக போர நேரத்துல, இப்படி, பதுக்கி வச்ச நோட்டெல்லாம் வீணாப்போகுதேன்னு' அழுஅழுன்னு அழுறாராம்,'' என, மூச்சுவிடாமல் சொல்லி முடித்தாள்.
அப்போது கியூவுல, இவர்களுக்கு முன்னால நின்றிருந்த சிலர் கூச்சலிட, 'சந்திரன்' என்ற நேம் பேட்ஜுடன் ஓடிவந்த காவலாளி, 'கொஞ்சம் அமைதியா நில்லுங்க; எல்லொருக்கும் பணம் கிடைக்கும்' என, சமாதானப்படுத்திவிட்டு சென்றார்.
''மோடி காட்டுன இந்த வித்தையால, யார் அழறாங்களோ, இல்லையோ, நம்மூரு போலீஸ்காரங்க பொறியில சிக்குன எலியாட்டம் தவிக்கறாங்களாம்,'' என, மீண்டும் பேச்சை துவக்கினாள் மித்ரா.
''அவங்களுக்கென்னவாம்...கலெக்ஷன் பாதிக்குதாமா?''
''கரெக்டா பாயின்ட பிடிச்சுட்டே. டிராபிக் போலீஸ்காரங்க சிலபேரு, அவங்க பிடிக்கற வண்டிகள்ல, சரியான பேப்பர்ஸ் இருந்தாலும், மாசு கட்டுப்பாடு சர்ட்டிபிகேட் கேட்டு, 500 ரூபா வரைக்கும் பிடுங்கிட்டிருந்தாங்க. இப்ப, 500, 1000 ரூபா நோட்டுகள்லாம், செல்லாதுங்கற அறிவிப்பு வந்ததால, கலெக்ஷன் இல்லாம, காய்ஞ்சு கிடக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''போலீஸ்னு சொன்னவுடனேதான், ஞாபகத்துக்கு வருது மித்து... சமீபகாலமா போலீஸ் கொஞ்சம், 'வீக்கா' இருக்கறதா, ஜனங்ககிட்ட பேச்சு இருக்குது,'' என்றாள் சித்ரா.
''உண்மைதான்... அதுக்கென்ன இப்ப?''
''அந்த கெட்ட பேர சரி பண்றதுக்கு, கொஞ்சம் 'ஹைடெக்' வேலைகள்ல, போலீஸ் இறங்கியிருக்கு. எப்.ஐ.ஆர்., கம்ப்ளைன்ட்களை, 'ஆன்லைன்' உதவியோட தெரிஞ்சுக்கற வசதிய துவங்கி, தெறிக்க விட்டுட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
அதற்கு மித்ரா, ''நானும் ஒரு தெறிக்கற மேட்டர் சொல்றேன்,'' என்று 'சஸ்பென்ஸ்' வைத்தாள்.
''ம்ம்...சொல்லு,''
''தீபாவளியன்னிக்கு, 'லோக்கல்' 'டிவி'யில, ஒரு புதிய படத்தை, திருட்டுத்தனமா ஒளிபரப்பி இருக்காங்க. 'வீடியோ பைரசிக்கு' புகார் போனதும், 'டெலிகாஸ்ட்' செஞ்ச ஊழியர்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அதுக்கு அவரு, 'ஓனர்தான் ஒளிபரப்ப சொன்னாரு'ன்னு, போலீஸ்ல ஸ்டேட்மென்ட் குடுத்துருக்காரு. ஆனா...ஊழியர மட்டும், அரஸ்ட் பண்ணி உள்ள வச்சுட்டாங்க,''
''அடப்பாவமே...''
''மேல கேளு...சேனலோட ஓனர் பெயர, எப்.ஐ.ஆர்.,ல கொண்டு வராம மறைச்ச 'உதவிக்கு', போலீஸ்காரங்களுக்கு நாலு லட்ச ரூபா, கைமாறியிருக்கு. இதை தெரிஞ்சு, அந்த சேனல்ல வேலை செஞ்ச சிலபேரு ராஜினாமா செஞ்சிட்டாங்களாம்,'' என்று முடித்தாள் மித்ரா.
''நேத்து ராத்திரி, 'டி டிவி' பார்த்துட்டிருந்ததுல, தூக்கம் போச்சு. ஒரே 'டயர்டா' இருக்கு,'' என்று நெட்டி முறித்தாள் சித்ரா.
''நம்ம ஜி.எச்.,ல பாதுகாப்பு, சுகாதார சீர்கேடு நாறுது. போன வாரம் பிரசவ வார்டுல, குழந்தை கடத்தப்பட்டதுக்கு, பாதுகாப்பு குளறுபடிதான் காரணம். இவ்வளவு நடந்த பிறகும், ஆஸ்பத்திரி பாதுகாப்பு, சுகாதாரத்தை கவனிச்சுக்கிற லேடிகிட்ட எந்த விளக்கமும் கேட்கலயாம்,'' என்றாள் சித்ரா.
''ஏன்?''
''அந்த லேடிக்கு, மேலிடத்துல இருக்கற செல்வாக்கு தான் காரணம்,'' என்றாள் சித்ரா.
அப்போது போன், செல்லமாக முணுமுணுத்தது. எடுத்துப் பேசிய சித்ரா,''ம்ம்...சொல்லு உமா...
எத்தனை தடவ சொன்னாலும் கேட்க மாட்டியா... போனை வை. நான் உங்கம்மாகிட்ட பேசிக்கிறேன்,'' என்றாள்.
''கலெக்டர் ஆபீசுல, ஆறு லட்ச ரூபா திருட்டுப் போன மேட்டர் ஞாபகமிருக்கா?'' என்று, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
''ம்ம்...அதெப்படி மறக்க முடியும்? அதிகாரியை சந்திக்க, ஆறு லட்ச ரூபாயோட, பொலீரோ ஜீப்புல வந்த ராமசாமி கதைதானே...அதுக்கு என்ன இப்போ?'' என்றாள் சித்ரா.
''அந்த பணம், ராமசாமி வாங்குன நிலத்தோட மதிப்பை, குறைச்சு மதிப்பீடு செஞ்சு குடுத்ததுக்கு, 'கிப்டா' குடுக்க கொண்டு வந்த தொகையாம்,'' என்றாள் மித்ரா.
''ஆகா...இதெல்லாம் வேறயா...அப்புறம்?''
''ஆனா அந்த அதிகாரி, பணம் திருட்டுப் போனாலும், பேசுன தொகையை குடுத்தாதான், கையெழுத்து போடுவேன்னு கறாரா நிற்கிறாராம்,'' என்றாள் மித்ரா.
அப்போது சித்ரா, ''இப்படித்தான் எங்க சொந்தக்காரரு நூர்முகமதுன்னு ஒருத்தரு வீணா சிக்கல்ல மாட்டிக்கிட்டாரு,'' என்றாள்.
''என்கிட்டயும் ஒரு வசூல் அதிகாரி மேட்டர் இருக்கு,'' என்றாள் மித்ரா.
''ம்ம்...சொல்லு மித்து,''
''நம்மூரு வணிகவரித்துறை அமலாக்கப்பிரிவுல வேலை பார்க்கற, கேரளாவை சேர்ந்த ஒரு இளம் அதிகாரி, செம வசூலாம். நம்மூரு பிரபல ஓட்டல்காரங்க, 20 வருஷமா விற்பனை வரி டபாய்ச்சத, இவரு கண்டுபிடிச்சுட்டாரு. சத்தம் போடாம இருக்க லஞ்சமா, 60 கோடி ரூபா கேட்டுருக்காரு,''
''அம்மாடியோவ்...அப்ப ஓட்டல்காரங்க எவ்வளவு சம்பாதிச்சிருப்பாங்க,'' என்று வாயை பிளந்தாள் சித்ரா.
''மேல கேளு...கடைசியா நம்மூரு அரசியல் முக்கியஸ்தர் பேசியிருக்காரு. முக்கியஸ்தருக்கு ஒரு கோடியும், அதிகாரிக்கு ஒரு கோடியையும் அழுது, ஓட்டல்காரங்க பிரச்னையை முடிச்சுக்கிட்டாங்களாம்,'' என்று முடித்தாள் மித்ரா.
வங்கியின் முன், வரிசையில் நின்றிருந்த ஒரு சேச்சி, அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த தனது ஐந்து வயது சிறுவனை, 'அனிஷ் மோனே...இவிட நிக்கு, ஓடல்லே' என்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது வங்கி திறக்க, வரிசை மெல்ல நகரத் துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X