""பழைய ரூபாய் நோட்டுக்கு பதிலா, புது நோட்டுகளை வாங்கியாச்சா,'' என்றபடி, வீட்டுக்குள், அவசர அவசரமாக நுழைந்தாள் சித்ரா.
""அதை ஏன் கேட்கிற. கையில் காசு இருந்தும், செலவுக்கு வழியில்லாம, திண்டாடி போயிட்டேன், ''என்று மித்ரா கூற, ""ரொம்ப சிரமமா இருந்தாலும், நல்ல திட்டங்கிறதால, மிஸ்டர் பொது ஜனம் இதை ஏத்துக்கிட்டாங்க,'' என்றாள் சித்ரா.
""கையில, 5 ஆயிரம் ரூபாய் வரை வெச்சிருக்கிற, மாச சம்பளக்காரர்களே, ரொம்ப திண்டாடும் நிலைக்கு வந்துட்டாங்க. பாவம், பல கோடிகளை பதுக்கி வெச்சிருக்கறவங்க பாடு, பெரும்பாடா இருக்கப் போகுது,'' என்று, மித்ரா கூறினாள்.
""மோடி கொளுத்திய வெடி, அவங்களைத்தான், ரொம்பவே ஆட்டம் காண வெச்சுடுச்சு. வெச்சிருக்கிற பணத்தை மாத்தறதுக்கு, என்னனென்னவோ முயற்சி செஞ்சும், திண்டாடிட்டாங்க,'' என்று தொடர்ந்த சித்ரா,
""இதுல ஆளுங்கட்சிக்காரங்களுக்கும், பல துறையை சேர்ந்த பிரமுகர்களுக்கும் விழி பிதுங்கிருச்சு தெரியுமா? பல வகையிலும் "ரூட்டு' போட்டு, பணத்தை மாத்தற முயற்சியில் இறங்கினாங்க. அறிவிப்பு வந்த முதல் நாள் ராத்திரியே, கூட்டுறவு சங்க வங்கிகளில் இருந்த ஏராளமான ரூபாய் நோட்டுகள் மாத்தீட்டாங்களாம். டாஸ்மாக், ரேஷன் கடை வசூல் தொகையில் இருந்த பணம், முக்கிய பிரமுகர்கள் பலரும், தங்களுக்கு தெரிஞ்ச ஆட்கள் மூலமாக, முடிஞ்ச வரை தங்களோட பணமா மாத்தீட்டாங்களாம்'' என்றாள்.
""அடடா, எவ்வளவு சம்பாதித்து சேர்த்து வெச்சிருந்தாலும், இந்த பிரச்னையில, கொஞ்சம் கூட அலட்டிக்காம இருக்கறதுக்கு, அதுதான் காரணமா,'' என்று, மித்ராவின் பேச்சில் ஆச்சரியம் வெளிப்பட்டது.
""இதே விஷயத்தில், சிறு வியாபாரிகள் நல்லாவே லாபம் பார்த்துட்டுங்க தெரியுமா? சேர்த்து வெச்சிருந்த, நூறு ரூபாய் நோட்டுகளை, வைச்சுகிட்டு, 500 ரூபாய் நோட்டுக்கு 300, 400 ரூபாய் மட்டும் கொடுத்து, கொள்ளை லாபம் பார்த்தாங்கன்னா பாரேன்,'' என்றாள் சித்ரா.
""ஸ்பாட் பைன் போடறதுக்கு, வாகனங்களை பிடிச்ச போலீஸ்காரங்க தான், பண பிரச்னையை எப்படி கையாளறதுன்னு தெரியாம, சில்லறை நோட்டு இருக்கான்னு கேட்டு, அப்புறம் ரசீது போட்டாங்களாம். ஆயிரம், ஐநூறு வெச்சிருந்த சிலர், அபராதத்தில் இருந்து சில இடங்களிலே தப்பிச்சாங்களாம்,'' என்று, மித்ரா, போலீஸ் சங்கதிக்கு தாவினாள்.
""காதி சங்கத்துல விற்பனை செய்யும் சில பொருட்களுக்கு, விலைச்சீட்டே தர்றதில்லையாமே என்றாள் சித்ரா, அது உண்மையா?' என்று மித்ரா கேட்டதும், ""அது பத்தி கேட்டா, யார்கிட்ட வேணுமின்னாலும் புகார் சொல்லுங்கன்னு, அங்குள்ள ஊழியர்களே சொல்றாங்களாம்,'' என்ற சித்ரா, காதி சங்க விஷயத்தை சொன்னதும்,""இந்த கம்ப்யூட்டர் யுகத்திலும், இன்னும் கையால் பில் போட்டு கொடுக்கறாங்க பாருங்க. முதலில், அதை மாத்தினா, எல்லாம் தானாக சரியாயிடும்,'' என்று ஆதங்கப்பட்டாள்.
""இடைத்தேர்தலில் பண பட்டுவாடா எப்படி நடக்குது?'' என்று, தேர்தல் மேட்டர் பேசியவாறு, சந்தையில் வாங்கிய நிலக்கடலையை கொறித்த, மித்ரா சந்தேகத்தை கிளப்பினாள்.
""அரவக்குறிச்சியில பிரச்னை இல்லையாம். அறிவிப்பு வந்ததுமே, விடியறதுக்குள்ள போக்குவரத்து கழகம், கூட்டுறவு சங்கத்துல இருந்த, 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை, ஆளுங்கட்சிக்காரங்க மாத்தீட்டாங்களாம். திருப்பூர் அ.தி.மு.க.,காரங்க, தஞ்சாவூர்ல இருந்துட்டு பணம் இல்லாம, பெரும் பாடுபட்டாங்களாம். இதை கேள்விப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தில இருக்கற சொசைட்டியில இருந்து கொஞ்சம் மாத்தியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""வாரம் பூராவும் சைவம் சாப்பிட முடியாதுனு சொன்னதால, வாரத்தில் ரெண்டு நாள் "அசைவம்' ஏற்பாடு செஞ்சிட்டாங்களாம்,'' என்று, "ருசியான' விஷயத்தை, மித்ரா கூற, ""அசைவம் இல்லாம தேர்தலா?'' என்று சித்ரா கேட்டாள்.
""திருப்பூர்ல இருந்து போனவங்க, வாரம் பூராவும் எப்படி சைவத்தை மட்டும் சாப்பிடறதுனு, நொந்து போய் கேட்டிருக்காங்க. இதனால, ஒரு ஆளுக்கு தினமும், 200 ரூபாய்னு பேசி, ஒரு "ஹாஸ்டலில்' சாப்பாடு ஏற்பாடு செஞ்சிட்டாங்க. சிக்கன், மட்டன் வாங்கி கொடுத்தாலும், சுவையா சமைச்சு தர்றாங்க. 100 ஓட்டுக்கு ஒருத்தர்னு இருக்காங்க; அதனால, சாப்பாடு செலவே பல லட்சத்தை தாண்டும். இருந்தாலும், தேர்தல் நேரத்துல இதுக்கெல்லாம் கணக்கு பார்க்க முடியுமான்னு சமாதானம் ஆகி, வேலை பார்த்திட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
""வெள்ளை தாடிக்காரருக்கு, வேலை வாங்கறது எப்படின்னு தெரியாதா என்ன?'' என்று, பொடி வைத்து பேசவும், ""சரி, நான் கிளம்புறேன். குணசேகரன் சித்தப்பா மகனுக்கு கல்யாணம் பேச பொண்ணு வீட்டிலிருந்து வர்றாங்க,'' என்று கூறியபடியே, வண்டியில் சிட்டாய் பறந்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE