குப்பை மேலாண்மையே இப்போதைய தேவை!

Added : நவ 19, 2016 | |
Advertisement
சுகாதாரம் என்பது, இந்தியாவில் எப்போதும் பிரச்னையாகவே உள்ளது. குப்பையை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், திறந்த வெளிகளில் துாக்கி எறிவது; கழிவு நீரை முறையான வழிகளில் கொண்டு செல்லாமல், ஆங்காங்கே தேங்கி நிற்க விடுவது; திறந்த வெளிகளில் மலம் கழிப்பது போன்றவை, நம் அன்றாட வாழ்வில், சாதாரண விஷயங்களாகி விட்டன. குப்பைகளும், கழிவு நீரும், தெருக்கள் மற்றும் சாலைகளில்
குப்பை மேலாண்மையே இப்போதைய தேவை!

சுகாதாரம் என்பது, இந்தியாவில் எப்போதும் பிரச்னையாகவே உள்ளது. குப்பையை சரியான முறையில் அப்புறப்படுத்தாமல், திறந்த வெளிகளில் துாக்கி எறிவது; கழிவு நீரை முறையான வழிகளில் கொண்டு செல்லாமல், ஆங்காங்கே தேங்கி நிற்க விடுவது; திறந்த வெளிகளில் மலம் கழிப்பது போன்றவை, நம் அன்றாட வாழ்வில், சாதாரண விஷயங்களாகி விட்டன.

குப்பைகளும், கழிவு நீரும், தெருக்கள் மற்றும் சாலைகளில் நிறைந்திருக்கின்றன என்பது மட்டும் இங்கு பிரச்னை அல்ல. மாறாக, அவற்றால் உருவாகும் நோய்கள், நாட்டிற்கே மிகப் பெரிய சவாலாக உள்ளது. இது போன்ற சுகாதாரக் கேடுகளே, தொற்று நோயால் குழந்தைகள் உயிரிழப்பதற்கு மிக முக்கியக் காரணமாக அமைகிறது. உலக அளவில், நல்ல சுகாதார வசதியை பெற இயலாத, 25 கோடி பேரில், முக்கால் பங்கினர் இந்தியாவில் உள்ளனர். 10 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வீடுகளில், கழிப்பறை இல்லை; திறந்த வெளிகளில் மலம் கழிக்கின்றனர். இத்தகைய காரணங்களால் உருவாகும் வயிற்றுப்போக்கு நோயால், ஆண்டுக்கு, 15 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இது போன்ற உயிரிழப்பில், கால் பங்கு இந்தியாவில் நிகழ்கிறது என, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், இந்திய மக்களுக்கு, குறிப்பாக, கிராம மக்களுக்கு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து புரிதல் இல்லாதது தான். நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 68 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கிராமங்களில் வசிக்கின்றனர். இவர்களில், 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர், திறந்த வெளிகளில் மலம் கழிக்கின்றனர். நகர்ப்புறங்களிலும், மிகக் குறைந்த சதவீத மக்களே, நல்ல சுகாதார வசதியை பெற்றுள்ளனர். இந்தியாவில், கழிப்பறை அற்ற வீடுகளின் எண்ணிக்கையில், உத்தர பிரதேசம் முதலிடத்திலும், பீஹார் இரண்டாமிடத்திலும், மத்திய பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளது. அது போல, தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் முதலிடத்திலும், வேலுார் மற்றும் சேலம் மாவட்டங்கள், முறையே, இரண்டு மற்றும் மூன்றாமிடங்களிலும் உள்ளன.

ஒரு நாடு, சமூக, பொருளாதார மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறும் போது, தொழிற்சாலைகள், நகரங்கள் மற்றும் மக்கள் தொகையும் அதிகமாகும்; அப்போது, குப்பையும் அதிகமாகும். வளர்ந்த நாடுகளில், மக்கள் தொகை குறைவாக இருந்தாலும் உருவாகும் குப்பையின் அளவு, நம் நாட்டை விட மிக அதிகம். ஆனால், அங்கு கழிவு மேலாண்மை திறம்பட உள்ளது.

அது, இந்தியாவில் மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதற்கான முக்கியக் காரணம், குப்பையை நாம் முறையாக அப்புறப்படுத்துவது கிடையாது. ஓர் ஆண்டிற்கு, நம் நாட்டில், கிட்டத்தட்ட, 3.8 கோடி டன் குப்பை உருவாகிறது. இதில், 80 சதவீதத்திற்கும் மேல், திறந்த வெளிகளில் கொட்டி வைக்கப்படுகின்றன. புறநகர் பகுதிகளில், குப்பைக் கிடங்குகள் பெரும்பாலும் எரியுட்டப்பட்டு, புகையை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது மட்டு மின்றி, அருகில் வசிப்பவர்களின் உடல் நலனும் பாதிப்படைகிறது. இந்தியாவில் சுகாதார சீர் கேட்டால் தினமும் குறைந்தது, 1,000 குழந்தைகளாவது வயிற்றுப்போக்கு நோயால் இறந்து விடுகின்றன. சுகாதார சீர் கேட்டால் குடற்புழு நோய்கள், கண் நோய்கள், மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுகிறது. இவற்றால் அதிகம் பாதிப்படைவது குழந்தைகளே. இதனால், இந்தியாவிற்கு கோடிக்கணக்கில் பணமும், மிக அதிக அளவிலான நேரமும் விரயமாகிறது.

'சுதந்திரத்தை விட, சுகாதாரம் மிக முக்கியமானது...' என, காந்திஜி கூறினார். எல்லாருக்குமான முழுமையான சுகாதாரம் என்பதே, அவரின் கனவு. ஆனால், சுதந்திரம் பெற்று, 70வது ஆண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நாம், முழுமையான சுகாதாரத்தை அடையவில்லை.

இந்தியாவை ஒரு முழுமையான, சுத்தமான, இந்தியாவாக மாற்றுவதற்காகவே, பிரதமர் மோடியால், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

காந்திஜியின், 150வது பிறந்த ஆண்டான, 2019க்குள் முழுமையான, சுத்தமான நாடு என்ற இலக்கை அடைய வேண்டும் என்பது, இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம், கழிப்பறை இல்லாத வீடுகள், பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டப்படுகின்றன. 2019ம் ஆண்டிற்குள், முழு இலக்கை அடைய, 62 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ ரீதியாக, இந்தியா நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ள நிலையில், ஒரு சில நோய்களை நம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை; காரணம், சுகாதாரமின்மை.

கழிப்பறை வசதி இருந்தும், திறந்த வெளியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நகர் புறங்களிலும், கிராமங்களிலும் திறந்த வெளிகளில் சிறு நீர் கழிப்பது, இன்றைக்கு சாதாரண விஷயமாகி விட்டது. ஒரு வேளை, கழிப்பறைகளை பயன்படுத்தினாலும், அதை, சரியாக சுத்தம் செய்யாமல், பிறர் பயன்படுத்த இயலாத வகையில் விட்டுச் செல்வது போன்ற பழக்கத்தை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்புவது, மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது. இது போன்ற சுகாதார சீர்கேடுகளால் தான் நோய்க் கிருமிகள் அதிகமாக வளர்ந்து, நோய்களை பரப்புகின்றன; இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.நம் வீட்டில் உருவாகும் குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையாக பிரித்து அவற்றிற்கான குப்பைத் தொட்டிகளில் அப்புறப்படுத்த வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கச் செல்லும் போது, வீட்டில் இருந்து துணி பைகளை மறவாமல் எடுத்துச் செல்ல வேண்டும். அது, வீட்டில் குப்பை உருவாகும் அளவைக் குறைக்கும். குப்பையை ஆங்காங்கே எரிப்பதும் கூடாது.

பெரும்பாலான நோய்கள், குடி நீர் மூலமாகவே பரவுகின்றன. இன்றும், வீடுகளிலும், உணவகங்களிலும் குடி நீர் கோப்பைகளில், விரல்களை விட்டு எடுத்து வரும் தவறான பழக்கம் உள்ளது. விரல் நகங்களின், இடுக்குகளிலும் உள்ள நோய்க்கிருமிகள், குடிநீருக்குள் எளிதாகப் புகுந்து, எண்ணற்ற நோய்கள் பரவுகின்றன. இவை செயல் வடிவம் பெறுவதற்கு, அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். சுத்தம், சுகாதாரம் குறித்து, ஒவ்வொருவரும் தாம் அறிந்த விஷயத்தை பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டும். சுகாதாரச் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணம், விழிப்புணர்வு அற்ற தன்மையே. அரசு எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தாலும், மக்களின் பங்களிப்பு இல்லையெனில், அது முழுமையாகாது. ஆகையால், மக்கள் ஒவ்வொருவரும் தாமாக முன் வந்து, பிறருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம், ஒட்டு மொத்த இந்தியாவும், சுத்தமான இந்தியாவாக மாற வேண்டும். இதற்காக, நாம் செலவிடும் பணம், உழைப்பு, நேரம் போன்றவை நிச்சயமாக தேவையற்ற விரயம் கிடையாது என்பதை அனைவரும் உணர்ந்தால், அது நம் ஆரோக்கியத்திற்கானமூலதனமாகும்.


முனைவர் பி.ராஜ்குமார்

இணை பேராசிரியர்

இ - மெயில்: eswar_rajkumar@yahoo.co.in

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X