மதிப்பு + மரியாதை = மகிழ்ச்சி | Dinamalar

மதிப்பு + மரியாதை = மகிழ்ச்சி

Added : நவ 21, 2016 | கருத்துகள் (1)
மதிப்பு + மரியாதை = மகிழ்ச்சி

மனிதகுலம் மகிழ்ச்சியாக வாழ ஒருவருக்கொருவர் மதித்து பழக வேண்டும். மரியாதை தர வேண்டும். மதிப்பு என்பது வார்த்தைகள், செயல்கள், நன்மை பயக்கும்பட்சத்தில் அதை எந்த எதிர்ப்புமின்றி முழு மனதோடு ஏற்றுக்கொள்வதுதான். ஒருவரை ஒருவர் மதிப்பதும் மரியாதை செலுத்துவதும் தொடர்ந்தால் மனிதர் உள்ளங்களில் சூதுவாது இருக்காது. போட்டி, பொறாமை உருவாகாது. வன்மம் வளராது. பழிவாங்கும் எண்ணம் எழாது. ஒருவரை மற்றவர் அழிக்கும் நிலை வராது. ஒரு ஊருக்கும் மற்றொரு ஊருக்கும் பகை மூளாது. ஒரு மாநிலம் மற்ற மாநிலத்தின் உரிமையை பறிக்காது. தற்போது கர்நாடகா மாநிலம் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து உரிமையை பறிக்கப்பார்க்கிறது. மேடான இடத்தில் இருந்து பள்ளத்தை நோக்கி ஒரு சிற்றோடை பாய்கிறது. மேட்டில் நின்று கொண்டு ஒரு ஓநாய் நீரை பருகுகிறது. அதே வேளையில், ஆடு ஒன்று மேலே இருந்து கீழே ஓடும் தண்ணீரை பருகி கொண்டிருக்கிறது. அப்போது ஓநாய், ஆட்டை பார்த்து, 'நான் குடித்த பிறகு கீழே வரும் உபரி நீரை குடிக்கக்கூடாது' என சண்டை போட்டது. 'உபரி நீரை குடிக்க எந்த உரிமையும் கிடையாது' என பயமுறுத்தியது. இந்த இரு விலங்குகளின் கதைதான் இரு மாநிலங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கிறது. இதேபோல்தான் ஒரு தேசத்திற்கும், இன்னொரு தேசத்திற்கும் மோதல்கள் உருவாகி யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் பிரச்னை இதற்கு உதாரணம். இது எதை காட்டுகிறது? ஒரு நாடு மற்றொரு நாட்டை மதிக்காததும் மரியாதை தராததையும் காட்டுகிறது.இன்று சில நாடுகள், மற்ற நாடுகள் மீது பொறாமைப்பட்டு போர் தொடுக்கின்றன. பல நாடுகள் நல்ல எண்ணங்களால், நல்லிணக்கத்தால் மற்ற நாட்டு தலைவர்களை மதித்து இருகரம் நீட்டி தங்கள் நாட்டிற்கு வரவழைக்கின்றன. அவர்களும் நல்லெண்ண துாதுவர்களாக செல்கின்றனர். நம் பிரதமர் மோடி, மற்ற நாட்டு தலைவர்களை உயர்வாக நினைத்து மரியாதை தந்து அந்நாடுகளுக்கு சென்று வருகிறார். அதனால் இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் வேண்டிய எல்லா நன்மைகளும் கிடைக்கின்றன.
மதித்தால் சொர்க்கம் : குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நாம் மதித்து நடக்க வேண்டும். மரியாதை தரவேண்டும். கணவன், மனைவி இருவரும் ஒருவரை மற்றவர் 'மட்டம்' தட்டி பேசி நடந்து கொண்டால், இல்லறம் நகரமாகிவிடும். மதித்து மரியாதை தந்தால் இல்லறம் சொர்க்கமாக பிரகாசிக்கும்.அரசு அலுவலகம், தனியார் நிறுவனங்களில் அதிகாரிகள் சிலர் தனக்கு கீழ் பணிபுரிபவர்களை மதிக்காமல் பேசி வேலை ஏவுகிறார்கள். அப்போது அவர்களுக்கும், பணியாளர்களுக்கும் சச்சரவு ஏற்படுகிறது. உயர் அதிகாரி அவர்களை மதித்து பேசினால் அவருக்கு மரியாதை கிடைக்கும்.
பிச்சைக்கும் உண்டு மரியாதை : மனிதர்களில் உருவ வேற்றுமை, நிற வேற்றுமை, பொருளாதார பாகுபாடு, வெவ்வேறு பழக்க வழக்கங்கள், மாறுபட்ட கலாசாரம், வேறுபட்ட மனநிலை இருந்தபோதிலும் ஒவ்வொரு மனிதனும் தன்னை மற்றவர்கள் மதிக்க வேண்டும்; மரியாதை தர வேண்டுமென்று ஆசைப்படுகிறான். இது மனித இயல்பு. தெருவில் பிச்சை எடுப்பவர் பிச்சை கேட்கும்போது, தன்னிடம் சில்லரை இல்லை என்று சொன்னால் வேறு ஒருவரை பார்க்க சென்று விடுவார். அவரை திட்டினால் பதிலுக்கு அவர் நம்மை திட்டுவார். ஆக பிச்சை எடுப்பவராக இருந்தாலும் அவரும் மதிப்பு, மரியாதையை எதிர்பார்க்கிறார். உயர் பதவியில் இருக்கும் ஒருவர், நம்மைவிட வயதில் சிறியவராக இருக்கலாம். அழகில் குறைந்தவராக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். அதற்காக அவரை தாழ்வாக நினைத்து, மரியாதை தராமல் நடந்து கொண்டால் அவர் நம்மை மதிக்க மாட்டார். நமது கோரிக்கைகள் நிறைவேறுவது கடினமாகிவிடும். அவர் வகிக்கும் பதவிக்கு மரியாதை கொடுப்பது என்பது நாம் செலுத்தும் அன்பாகும். சிறுவனாக இருந்தாலும் அவனும் அன்பு, மரியாதையை எதிர்பார்க்கிறான். அவன் மீது அன்பு செலுத்தாமல் வம்பு பண்ணினால் வீம்பு பண்ணுவான்.
மதிப்புமிக்க தலைவர்கள் : பெரிய அந்தஸ்தில் உள்ள ஒருவர் கீழ்நிலையில் உள்ள ஒருவரை மதிக்கும்போது, 'நாம் கீழ்நிலையில் இருந்தாலும் நம்மை மதிக்கிறாரே' என்று நினைத்து, மேல்நிலையில் உள்ளவருக்கு மரியாதை கொடுக்க ஆசைப்படுவார். தனியொரு மனிதராய் இந்தியாவை விட்டு வெளியேறி, அயல்நாடுகளில் இருந்து கொண்டு வீரர்களை திரட்டி, பெரும்படை நடத்தி ஆங்கிலேயரை விரட்ட போர் நடத்தி இந்திய மண்ணில் உள்ள இந்துார், மணிப்பால், அரக்கான் மலைத்தொடர், அந்தமான் ஆகிய பகுதிகளில் நமது தேசிய கொடியை பறக்கவிட்டவர் சுபாஷ் சந்திரபோஸ், இந்திய மக்கள் மீது அளவற்ற அன்பு செலுத்தி வந்தார். அவர்களுக்காகவே வாழ்நாளை அர்ப்பணித்தார்.வியட்நாம் மக்கள் மீது அதீத நம்பிக்கை வைத்த கோசிமின், அவர்களை மதித்தார். பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் வியட்நாம் விடுதலை பெற்றது. அந்நாட்டு மக்கள் அவருக்கு மரியாதை செலுத்தி கொண்டிருக்கிறார்கள். அடிமைப்பட்டு அவதிக்குள்ளான கருப்பின அடிமைகளை கண்டு, ஆபிரகாம் லிங்கன், 'அவர்களும் மனிதர்கள் தானே' என்று நினைத்து மதிப்பளித்து அடிமை விலங்கை உடைத்து எறிந்தார். அந்த மக்கள் அவரை இன்றும் மனதில் வைத்து பூஜிக்கின்றனர்.
உயர் பண்புகள் : உலகின் சர்க்கரை கிண்ணம் என்றழைக்கப்படும் கியூபாவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, பிடல் காஸ்ட்ரோவும், சேகுவாராவும் இணைந்து போராடி வெற்றி கண்டனர். அந்த இரு தலைவர்களையும் கியூபா மக்கள், 'தெய்வங்களாக' மதித்து மரியாதை செலுத்துகின்றனர். சமீபகாலமாக அமெரிக்காவும், கியூபாவும் நல்லுறவுடன் இருக்கின்றன.மதிப்பு, மரியாதை ஒன்றையொன்று பிரித்து பார்க்க முடியாத உயர் பண்பாகும். இரண்டும் ஏறத்தாழ ஒரே அர்த்தம் கொண்டவை. ஒரு இயக்கத்தை ஆரம்பித்து, ஆட்சி மாற்றம் நிகழ காரணமாக இருந்தவர் அண்ணாதுரை. தன்னை பின்பற்றியவர்களை இன்சொல் பேசி, அனைவரும் மீதும் அன்பு செலுத்தி அரசியல் நடத்தினார். எல்லோரையும், 'தம்பி' என்றழைத்தார். கட்சி தொண்டர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி பாடுபட்டதால் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். விஞ்ஞானி அப்துல்கலாம், இந்தியாவின் ஜனாதிபதியாகி மக்களுக்காக வாழ்ந்தார். மாணவர்களை பாராட்டினார். சிறுவர்களுக்கு மதிப்பளித்தார். இதனால் இந்தியர் அனைவரும் அவருக்கு மரியாதை கொடுத்து மகிழ்ந்தனர்.
தன்னை மதித்து வாழ்ந்த தமிழ் பாட்டி அவ்வைக்கு, நுாற்றாண்டுகளுக்கு மேல் வாழவைக்கும் அதிசய நெல்லிக்கனியை, தான் உண்ணாமல் கொடுத்து, மரியாதை செலுத்தினான் மன்னர் அதியமான்.மனிதன் ஓடி ஆடி அரும்பாடுபட்டு உழைப்பதன் நோக்கமே சந்தோஷத்தோடும், மன நிம்மதியோடும் ஆத்ம திருப்தியோடும் வாழ்வதற்காகதான். அதற்கு சமூகம் தரும் அங்கீகாரம்தான் மதிப்பும், மரியாதையும்!
- பொறியாளர் எஸ். பாண்டியன்

மதுரை. 98653 98967

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X