தண்ணி விற்கும் கூட்டணி... சிறுவாணியை பிடிச்ச சனி| Dinamalar

தண்ணி விற்கும் கூட்டணி... சிறுவாணியை பிடிச்ச 'சனி'

Added : நவ 22, 2016
Share
ஆதார் எண்ணை பதிவு செய்ய, ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் அரசு குடியிருப்பு வளாகத்தில் உள்ள, ரேஷன் கடை வாசலில் நின்றிருந்தாள் சித்ரா.முன்னால் நின்றிருந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர், ''என்ன அநியாயமுங்க இது...போனவாரம் நாத்தனாருக்கு கல்யாணம்னு, ஊருக்கு போயிட்டோம். இங்க எந்த பொருளும் வாங்கலை. ஆனா, சர்க்கரை கேட்டா, ஏற்கனவே வாங்கியாச்சுன்னு சொல்றாங்க. இதையெல்லாம் யாரு
தண்ணி விற்கும் கூட்டணி... சிறுவாணியை பிடிச்ச 'சனி'

ஆதார் எண்ணை பதிவு செய்ய, ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் அரசு குடியிருப்பு வளாகத்தில் உள்ள, ரேஷன் கடை வாசலில் நின்றிருந்தாள் சித்ரா.
முன்னால் நின்றிருந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர், ''என்ன அநியாயமுங்க இது...போனவாரம் நாத்தனாருக்கு கல்யாணம்னு, ஊருக்கு போயிட்டோம். இங்க எந்த பொருளும் வாங்கலை. ஆனா, சர்க்கரை கேட்டா, ஏற்கனவே வாங்கியாச்சுன்னு சொல்றாங்க. இதையெல்லாம் யாரு கேக்கறது...மேல எழுதிப் போட்டாதான் வேலைக்காவும்,'' என கோபத்துடன் புலம்பிக் கொண்டிருந்தார்.
அவருடன் நின்றிருந்த மற்றொரு பெண்மணி, ''இதையும் சேர்த்து எழுதிப்போடுங்கக்கா. தேங்காய் எண்ணெய், ஷாம்பூ, தீப்பெட்டி, டீத்துாள், சாம்பார்துாள்னு, நமக்கு வேண்டாததையெல்லாம், தலையில கட்றாங்க. ஆனா பில்லு, சில்லரை தர்றதில்லை,'' என்றார்.
அவர்கள் சென்றபின், ஆதார் எண்ணை பதிவு செய்த சித்ரா, மித்ராவுக்கு போன் போட்டாள். பத்து நிமிடங்கள் கழித்து ஸ்கூட்டரில் அங்கு வந்த மித்ரா, ''சாரிக்கா... வர்ற வழியில ஒருத்தன், செயினை அறுத்துட்டுப் போக டிரை பண்ணி, வசமா மாட்டிக்கிட்டான். பிடிச்சு போலீஸ்ல ஒப்படைச்சுட்டு வர லேட்டாயிருச்சு,'' என்றாள்.
அதற்கு சித்ரா, ''வர, வர ரோட்டுல நடக்கவே பயமாயிருக்கு. நடந்து போனா, கத்திய காட்டி நகை, பணத்தை அடிக்கறாங்க. வீட்டை பூட்டிட்டு ஊருக்கு போனா, கொள்ளையடிக்கறாங்க. போலீசுல சொன்னா, 'நீங்க வீட்டை பூட்டிட்டு போகும் போது, ஏன் எங்ககிட்ட சொல்லலை'ங்கறாங்க என நொந்து போய் சொன்னாள்.
ஸ்கூட்டர் அண்ணா சிலை சந்திப்பை தாண்டி, உப்பிலிபாளையம் ரோட்டில் சென்றது. பள்ளி விட்டு குழந்தைகள் குதூகலமாக சென்று கொண்டிருந்தனர்.
அதை பார்த்த சித்ரா, ''மித்து...சித்தாபுதூர்ல உள்ள, அந்த 'மகாராணி' ஸ்கூல்ல, டாய்லெட்ல தண்ணி கொட்டுனதுக்காக, ஒரு யு.கே.ஜி., பையனை, பெல்ட்டால் கட்டி வச்சிருக்காங்க,'' என்றாள்.
''அடப்பாவமே...ஸ்கூல்காரங்க சிலபேரோட புத்தி ஏன் இப்படி தறிகெட்டு ஓடுதோ... அப்புறம் என்னாச்சு...சி.இ.ஓ.,என்ன ஆக்ஷன் எடுத்தார்?'' என்று ஆர்வமாக கேட்டாள் மித்ரா.
''இது சம்பந்தமா புகார் வரும்போது, ராஜவீதி துணி வணிகர் பள்ளியில நடந்த 'குழந்தைகள் தின விழா' வுல, அவரு ஜாலியா பாட்டுப்பாடி டான்ஸ் ஆடிட்டிருந்தாராம். ஆனா இந்த நிமிஷம் வரைக்கும், ஸ்கூல்காரங்க மேல எந்த ஆக்ஷனும் எடுத்த மாதிரி தெரியலை,'' என்றாள் சித்ரா.
''இதே மாதிரி செஞ்சேரிமலை ஸ்கூல்ல, ஏழாம் வகுப்பு பையன் தற்கொலை பண்ணதுக்கு, அந்த ஸ்கூல் எச்.எம்., வகுப்பாசிரியர் மேல எப்.ஐ.ஆர். பதிவு பண்ணியும், கல்வித்துறை கண்டுக்கலையாம்,'' என்று தன் பங்குக்கு எடுத்து விட்டாள் மித்ரா.
''அதே நேரத்துல, சம்பள பாக்கியை கேட்டதால, சூலூர் ஒன்றியம் ஆரம்பப்பள்ளி டீச்சர்ஸ் ரெண்டு பேரை, எச்.எம்., 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாராம். இதைத்தான் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கத்துக்காரங்க, 'ஏனிந்த ஓரவஞ்சனை'ன்னு கொடி பிடிக்கறாங்க,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''சரி...சரி, நீ வண்டிய பார்த்து ஓட்டு. மழை வர்ற மாதிரி இருக்கு,'' என்றாள்.
''ஹை...ஜாலி! சிறுவாணி நிறைஞ்சுரும். உனக்கு தெரியுமா...சிறுவாணி டேம்ல இருக்கற தண்ணி இன்னும், 30 நாளுக்கு தான் வருமாம். அதை நெனச்சாதான் கவலையா இருக்கு,'' என்றாள் மித்ரா.
அதற்கு சித்ரா, ''தண்ணிக்கு என்ன பண்றதுன்னு நாம கவலைப்படுறோம்.
ஆனா, எதப்பத்தியும் கவலைப்படாம சிறுவாணி தண்ணிய, டேங்கர் லாரிக்கு வித்து சிலபேரு காசு பார்க்கறாங்க,'' என்றாள்.
''நீ சொல்றது சரிதான்க்கா...ஒரே இடத்துல, பல வருஷமா 'பெவிக்கால்' போட்ட மாதிரி ஒட்டியிருக்கற சில அதிகாரிங்க, டேங்கர் லாரிக்காரங்க கூட கூட்டணி சேர்ந்து, தண்ணியை விக்கிறாங்க. இவங்கள அந்த சீட்டை விட்டு தூக்கியடிச்சா சரியாப் போயிரும்,'' என்றாள் மித்ரா.
ஸ்டேட் பேங்க் முன், பணத்துக்காக மக்கள் நீண்ட வரிசையில் நொந்து போய் நின்றனர். அங்கு ஸ்கூட்டரை நிறுத்தினாள் மித்ரா. இருவரும் அருகில் இருந்த பேக்கரியில் நுழைந்தனர்.
''ரூபா நோட்டு நிலைமை சரியாக, இன்னும் ஒரு மாசமாகுமாமே,'' என்றாள் சித்ரா.
''கவர்மென்ட் என்னதான் பண்ணப் போகுதோ...செல்லுற நோட்டுக்காக ஜனங்க ஒருபக்கம் அல்லாடுற நேரத்துல, செல்லாத நோட்டை மாத்த கோவை கிழக்கில் இருக்கிற ஒரு கல்வி நிறுவனத்துக்காரங்க, பண்ணுன 'டிரிக்' பத்தி கேள்விப்பட்டியா,'' என்று 'சஸ்பென்ஸ்' வைத்தாள் மித்ரா.
''அப்படி என்ன டிரிக் பண்ணுனாங்க?''
''அங்க வேலை பார்க்கிற ஸ்டாப்புகளுக்கு, ஒரு வருஷ சம்பளத்தை அட்வான்சா குடுத்து, பேங்க்ல டெபாசிட் செய்ய சொல்லியிருக்காங்க... இப்படி பல பேருகிட்ட கோடிக்கணக்குல, நோட்டை குடுத்து வெள்ளையாக்கிட்டிருக்காங்களாம். ஆனாலும் தீர மாட்டேங்குதாம்,'' என்று போட்டுடைத்தாள் மித்ரா.
''கொள்ளை பணம் அவ்வளவு சீக்கிரம் வெள்ளையாயிருமா...,'' - சொல்லி விட்டு சிரித்தாள் சித்ரா.
'''முண்டாசு கவிஞன்' யுனிவர்சிட்டிலயும், இப்ப இதே பிரச்னைதான் ஓடுதாம்,'' என்றாள் மித்ரா.
''பள்ளித்தலமனைத்தும் கோவில் கட்டுவோம்'னு பாடுனவரோட யுனிவர்சிட்டிலயேவா, அநியாயமா இருக்கே...மேல சொல்லு மித்து,'' என்றாள் சித்ரா.
''அந்த யுனிவர்சிட்டில சமீபத்துல ஆட்தேர்வு நடந்துச்சு. அதுல முறைகேடு நடந்ததா, புகார் இருக்கு. அதனால, அட்வான்சா வாங்குன, பழைய லஞ்சப்பணத்துக்கு பதிலா, புது நோட்டுகளை கேட்டு, குடைச்சல் குடுக்கறாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''மாநகராட்சியில பண மழை கொட்டுதாமே...'' என கேட்டாள் சித்ரா.
''ஆமா... பழைய, 500, 1,000 ரூபாயை கொடுத்து, வரி செலுத்தலாம்னு சொன்னதும், ஏகப்பட்ட பேரு 'க்யூ'ல நின்னு பணத்தைக் கட்டிக்கிட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''அதெல்லாம் சரி... ஏதோ ஒரு அதிகாரி, லஞ்சப்பணத்தை மாத்துறாராமே...'' என, சித்ரா மடக்கினாள்.
''ஒனக்கும் தெரிஞ்சு போச்சா' என 'கமென்ட்' அடித்த மித்ரா, ''சாயாங்காலம் அஞ்சு மணியாச்சுன்னா... வசூல் மையத்துல போயி, அந்த அதிகாரி உக்காந்துக்கிறாராம். அன்னைக்கு வசூலான பணத்துல, 50, 100 ரூபாயை பொறுக்கிட்டு, வீட்டுல பதுக்கி வச்சிருந்த, சலவை தாள்களை கொடுக்கிறாராம். அதை பார்த்து, வடக்கு மண்டலத்துல இருந்து வேலைக்கு வர்ற ஊழியருங்க வாயை பிளக்குறாங்க...,'' என்றாள்.
அப்போது பேக்கரி கல்லாவில் அமர்ந்திருந்தவர், 'ஏய்...சரவணா, 'ஏசி' ஓட்டல்லயெல்லாம் வேலை பார்த்திருக்கேன்னு சொன்னியே, அங்கயும் இப்படிதான் இருந்தியா... டம்ளர்லாம் எடுத்து வை' என்று ஊழியரை விரட்டினார்.
''உனக்கு தெரியுமா மித்து... நம்மூர் முக்கியஸ்தர்தான், இப்ப 'டாக் ஆப் தி சிட்டி,'' என்றாள் சித்ரா.
''ஏன்...அவருக்கென்னாச்சு?''
''அவர் நல்லாதான் இருக்காரு. அவரு கையிலயும், சொந்தக்காரங்க பையிலயும், குவிச்சு வச்சிருக்கிற கோடிக்கணக்கான ரூபா நோட்டுகளைதான் என்ன செய்யப் போறார்னு, ஊரே பேசிட்டிருக்கு,'' என்றாள் சித்ரா.
''ஒண்ணும் ஆகாது...டாஸ்மாக்குலயும் டிரான்ஸ்போர்ட்டுலயும், 'பிளாக் அண்டு ஒயிட்டா' மாறி போயிட்டேயிருக்காம்,'' என்று கண்ணடித்தாள் மித்ரா.
அடுத்த மேட்டருக்கு தாவிய சித்ரா, ''அந்த கடவுளுக்கே தெரியாம, நோட்டு மாத்துனவங்க, இப்ப கலெக்டர் விசாரணைல சிக்கிட்டாங்க,'' என்றாள்.
''அது எங்கே...?''
''கோவைப்புதூர் மேற்கு வட்டார போக்குவரத்து ஆபீஸ்ல, வேலை பார்க்கற மூணு பேரு தினமும் வசூலாகுற அம்பது, நூறு ரூபா நோட்டுகளை, எடுத்து வச்சிக்கிட்டு, அதுக்கு பதிலா ஐந்நூறு, ஆயிரம் ரூபா நோட்டுகளா பேங்க்ல செலுத்திட்டாங்களாம்,''
''செம ஐடியாவா இருக்கே...''
''இது தெரிஞ்ச மத்தவங்க, கலெக்டர், டிரான்ஸ்போர்ட் செகரட்டரி, கமிஷனர்னு, புகாரை தட்டி விட்டுட்டாங்களாம். மேட்டர் இப்ப கலெக்டர் விசாரணைல இருக்கு,'' என்று முடித்தாள் சித்ரா.
அப்போது அவளது மொபைல் போன் ஒலித்தது. அதை எடுத்து 'ஆன்' செய்த சித்ரா, ''என்னால இப்ப வர முடியாது. நீங்க மட்டும் போயிட்டு வாங்க. மணி, சிவசங்கரி, செல்வி எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க,'' என்று பேசி வைத்தாள்.
''சில்லரை தட்டுப்பாடு பிரச்னையை பயன்படுத்தி, பல பஸ்கள்ல இப்ப சில்லரை தர்றதே இல்லை தெரியுமா,'' என்றாள் மித்ரா.
''கடைகள்லதான் இப்படி மிளகாய் அரைக்கறாங்க...பஸ்சுலயுமா?''
''ஆமா...சில்லரை கொண்டு வர வேண்டிய கடமை இருந்தும், பெரும்பாலானோர் செய்றது இல்லை. பயணிகள்கிட்ட வாக்குவாதம் பண்ணி முடிக்கறதுக்குள்ளே ஸ்டாப் வந்துரும். மேட்டரும் முடிஞ்சுரும். பை நிறைய லாபத்தோட தினமும் வீட்டுக்கு போறாங்க,'' என்றாள் மித்ரா.
''போஸ்ட் ஆபீஸ்ல நடந்த காமெடி தெரியுமா மித்து?
''சொல்லேன்... நானும் சிரிக்கறேன்,''
அதற்கு சித்ரா, ''செல்லாத நோட்டுகள மாத்த, 'மை சிஸ்டம்' வந்துருக்குல்ல... ஆனா, தேவையான 'மை', பேங்க், போஸ்ட் ஆபீஸ்கள்ல முதல்ல இல்லை. பொறுமை இல்லாத, நம்ம ஹெட் போஸ்ட் ஆபீஸ்காரங்க, போஸ்ட்மேன் பயன்படுத்தற, 'மெஜன்ட்டா - பேட் ஸ்டாம்ப்' மையை, ஜனங்க கையில அப்பியிருக்காங்க,'' என்றாள்.
''அட கடவுளே... அப்புறம்?''
''அப்புறம் என்ன? மை வெச்சதும் கை அரிக்க ஆரம்பிக்க, போஸ்ட் ஆபீஸ்ல ஒரே கூச்சல், குழப்பம். உடனே அந்த திட்டத்தை கைவிட்டுட்டாங்க,'' என்று கூறி சிரித்தாள் சித்ரா.
மித்ராவுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இருவரும் சிரித்தபடியே, பேக்கரியில் இருந்து வெளியே வந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X