மாற்றியது ஆளுங்கட்சிக்காரங்க மாட்டிக்கிட்டது அதிகாரிங்க...!

Updated : நவ 22, 2016 | Added : நவ 22, 2016
Advertisement
""பழைய ரூபாய் நோட்டு மாத்தறதுக்கு, பேங்க்கில் இருந்த கூட்டம், கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது பார்த்தியா,'' என்றவாறு, வண்டியை நிறுத்தி விட்டு சொன்னாள் சித்ரா.""ஆமா, பரபரப்பு கொஞ்சம் அடங்கினாலும், கையில் இருக்கிற ரூபாயை மாத்தற பதைபதைப்புத்தான் இன்னும் அடங்கல,'' என்று மித்ரா சிரித்தாள்.""அரசியல்வாதிங்க வெச்சிருந்த பணத்தை மாற்றிய கதை தான் உனக்குத்
மாற்றியது ஆளுங்கட்சிக்காரங்க மாட்டிக்கிட்டது அதிகாரிங்க...!

""பழைய ரூபாய் நோட்டு மாத்தறதுக்கு, பேங்க்கில் இருந்த கூட்டம், கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது பார்த்தியா,'' என்றவாறு, வண்டியை நிறுத்தி விட்டு சொன்னாள் சித்ரா.
""ஆமா, பரபரப்பு கொஞ்சம் அடங்கினாலும், கையில் இருக்கிற ரூபாயை மாத்தற பதைபதைப்புத்தான் இன்னும் அடங்கல,'' என்று மித்ரா சிரித்தாள்.
""அரசியல்வாதிங்க வெச்சிருந்த பணத்தை மாற்றிய கதை தான் உனக்குத் தெரியுமே. அதிகாரிகள் ரூபாயை மாற்றுவதற்கு என்னென்ன மாதிரி ரூட் போட்டாங்க தெரியுமா' என்று கேட்டாள் சித்ரா.
""பல துறைகள்ல, பல அதிகாரிங்க இருக்காங்க. அவங்கெல்லாம் எப்படி பணம் மாத்தினாங்களாம்,'' என்று மித்ரா கேட்டாள்.
""எல்லாம், ஒரே குட்டையில ஊறின மட்டைங்க தானே; ஒரே மாதிரி ஐடியா செஞ்சு தான், பணத்தை மாத்தியிருக்காங்க.
பேங்க் ஆபீசருங்க கெடுபிடியா இருக்கறதால, போலீஸ், டாஸ்மாக், வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, மின்வாரியமுன்னு, எல்லா துறையிலயும் பல அதிகாரிங்க கீழ் வேலை செய்யும் ஊழியருங்க கிட்ட கொடுத்து, வாய்மொழியாக அனுமதி தந்து, அலுவலக நேரத்தில், வங்கிக்கு அனுப்பி, செல்லாத நோட்டை மாத்தியிருக்காங்களாம். மாமூல் வாங்கற அதிகாரிங்க தான், ரொம்பவே திணறி போய்ட்டாங்க. மாமூல் வசூல் செஞ்சு தர்ற ஊழியருங்களை அழைச்சு, அவங்ககிட்டவே மாத்தித்தர சொல்லியிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""அதுமட்டுமில்ல, உள்ளாட்சி அமைப்புகள்ல உள்ள அதிகாரிங்க, ஒப்பந்ததாரருங்க மூலம், வங்கி கணக்குல பணத்தை கொடுத்து மாத்தியிருக்காங்களாம். ஒப்பந்ததாரருங்க சிலர், தங்களோட ஊழியர் வங்கி கணக்கிலும், நூறு நாள் திட்ட பயனாளிகள் வங்கி கணக்குகளிலும் பணத்தை போட்டு, மாத்தறாங்களாம். அரசு ஒன்று யோசிச்சா, நம்மாளுங்க, எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாறேன்,'' என்று ஆதங்கப்பட்ட மித்ரா, ""ரூபாய் நோட்டு பிரச்னையால, கோர்ட் வழக்கு என்ன ஆச்சுன்னு தெரியுமா,'' என்று கேட்டாள்.
""முக்கியமா, கோர்ட்டுகள்ல, மோட்டார் விதி மீறல் வழக்குக்கு அபராதம் கட்டி, முடிவுக்கு வர்றது வழக்கம். இப்போ இருக்கிற நிலையில, ரூபா நோட்டு பிரச்னையா இருக்கு. அதனால், பத்து நாளாக அபராதம் விதிச்ச, வழக்கு எல்லாமே வாய்தா போட்டுட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
""போலீஸ், வழக்கு அபராதம்னு சொன்னதும் ஞாபகத்துக்கு வருது; "டிரங்க் அன்ட் டிரைவ்' கேஸ் எல்லாம், குறிப்பிட்ட ஒரு வக்கீல் கிட்டதான் கொடுக்கணுமுன்னு, முக்கிய பொறுப்புல இருக்கிற அதிகாரிங்க, நிர்ப்பந்தம் செய்றாங்களாம். அது உனக்கு ஞாபகம் இருக்கா'' என்றாள் மித்ரா.
""அட ஆமாம். அவர் மேல கூட, பொய் புகார் கொடுத்ததாக போலீஸ் வழக்கு போட்டிருக்காங்களே. அதில் இப்ப என்ன ஆச்சு,'' என, ஆர்வத்தோடு சித்ரா கேட்டாள்.
""அதிகாரிங்க மத்தியில் தன்னோட செல்வாக்கு குறைந்து போச்சுன்னு உணர்ந்த அவர், இப்ப போலீஸ் ஸ்டேஷனுக்கும், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் நேரடியா போய், வழக்குகளை தனக்கு தரணுமுன்னு, மிரட்டுற தொனியில, பேசி வர்றாராம். அதற்கு சம்மதிக்காத அதிகாரிங்க மீது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், தேவையில்லாம குடைச்சல் கொடுக்கறதா புலம்பறாங்க. இதுக்கு என்ன செய்யறதுன்னு; எப்ப சரியா நேரம் கிடைக்குமுன்னு, போலீஸ் தரப்பில் எதிர் பார்த்துகிட்டு இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
""சில்மிஷக்காரர்களுக்கு, வெள்ளி விழாப் பூங்கா, ரொம்ப வசதியாக மாறிட்டு வருது தெரியுமா,'' என, சித்ரா, அடுத்த டாபிக்கை ஆரம்பித்தாள்.
""பொழுது போக்க குழந்தைகளை அழைத்து வரும் குடும்பத்தினர்களை விட, காதல் ஜோடிகளே, இந்த பூங்காவுக்கு அதிகம் வர்றாங்க. அவங்களால தான்,
பூங்காவே ரன் ஆகுது,'' என்றாள் மித்ரா.
""ஆனா, அங்கே தான், சில்மிஷத்தில ஈடுபட்ட ஜோடிகளை, போலீசார் விரட்டியடிச்சாங்க பார்த்தியா,'' என்று சித்ரா கூறினாள்.
""இது எப்போது நடந்தது'' என்று, மித்ரா ஆச்சரியத்தோடு கேட்டாள்.
""போன வாரத்தில், சிட்டி போலீஸ் டி.சி., குடும்பத்தோடு பூங்காவுக்கு, சாதாரண உடையிலே, போயிருக்கார். பூங்காவில் திரும்பின பக்கமெல்லாம், சில்மிஷ ஜோடிகளாக இருந்திருக்கு. உடனே தகவல் சொல்லி, அதிரடிப்படையினர் வந்து, ஜோடிகளை விரட்டினாங்களாம். மகளிர் போலீசும் வந்துட்டாங்க. இனிமே, பூங்காவை முறையா கண்காணிக்கணும்னு டி.சி., கடுமையாக எச்சரிச்சராம்,'' என்றாள் சித்ரா.
""ஸ்பீடா இருந்தவர "வெயிட்டிங்'ல வச்சுட்டாங்க பாத்தியா?'' என்ற மித்ரா, வருவாய்த்துறை விஷயத்தை பேச ஆரம்பித்தாள்.
""அதிவேகம் ஆபத்து தானே. யாரு வேகமா போனா; என்னாச்சு அவருக்கு,'' சித்ரா ஆர்வமாக கேட்டாள்.
""ஆர்.டி.ஓ., வை சொல்றேன். சப்கலெக்டர் வந்தாங்கனு, ஆர்.டி.ஓ.,வை "வெயிட்டிங்'லே வச்சுட்டாங்க. மாவட்ட நிர்வாகத்துக்கு சங்கடம் வந்த போதெல்லாம், தனி ஆளா போய் சமாளிச்சுட்டு இருந்தாரு. ஆனா, வீரபாண்டி விவகாரத்தில் இப்படி ஆயிருச்சு,'' என்று கூறிய மித்ரா, சித்ரா கொடுத்த தண்ணீரை குடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
""வீரபாண்டியில, வாக்காளர் பெயர் நீக்கம் நடந்துச்சுல்ல. "ஆன்லைன்' மூலமாக, படிவம்"8 ஏ' வில் பதிவு செஞ்சு, வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் வேறு பகுதியில மாத்தி போட்டாங்களே. எதிர்க்கட்சிக்காரங்க, தீவிரமாக களமிறங்க தயாரானாங்க; ஆர்.டி.ஓ.,தான் பேசி, அமைதியாக்கினாரு. கடைசியில, அவருக்கே ஆப்பு வச்சிட்டாங்க,'' என்றாள் மித்ரா.
""திருப்பூருக்கு வர்ற எல்லோரும் இப்படித்தான், "வெயிட்டிங்'ல இருந்து வேற பதவிக்கு போறாங்க. முன்னாடி, மணல் கொள்ளையை கண்டிச்ச, ஆர்.டி.ஓ.,வும் இப்படித்தான் காத்திருந்தாரு'' என்றாள் சித்ரா.
""ஒருத்தர்னு சொன்னதும் ஞாபகம் வருது. ஏழு மாடியிலே கட்டியிருக்கற கலெக்டர் ஆபீசுக்கு, துப்புரவு வேலைக்கு ஒரேயொரு தொழிலாளி தான் இருக்காரு. கலெக்டர் இருக்கற, இரண்டாவது தளத்தை சரி செய்யவே, அவருக்கு நேரும் சரியா இருக்கு. மொத்தம், 16 கழிப்பிட வளாகமும், ஐந்து கூட்டரங்கு இருக்கு. கொறைஞ்சது நாலு பேராவது இருந்தாத்தான் வேலை ஒழுங்கா நடக்கும். அதனால, கலெக்டர் ஆபீஸ் கழிப்பறைகளே, நோய் பரப்புற வகையில்,
"கப்ஸ்' வீசுது,'' என்றார் மித்ரா.
""இன்னிக்கு, மூணு தொகுதி இடைத்தேர்தல் ரிசல்ட். ஞாபகம் இருக்கா,'' என்று சித்ரா கேட்டாள்.
"ஆமா. பழைய ரூபாய் நோட்டு பல சுத்து போயிருக்கு. அதுக்கு தகுந்தமாதிரி, "ரிசல்ட்' வரும்னு ஆளுங்கட்சிக்காரங்க காத்திட்டு இருக்காங்க. எலக்ஷன் வேலைக்கு போயிருந்தாங்க, அவங்க செலவுக்கு ரூபா நோட்ட மாத்திட்டாங்க. வாக்காளருக்கு பழைய நோட்டு போயிருச்சு. "டிரான்ஸ்போர்ட்', "டாஸ்மாக்'ல மாத்துன காசை, அங்க செலவு செஞ்சுட்டாங்க. டிச., மாச கடைசிக்குள்ள, உள்ளாட்சி தேர்தலை அறிவிச்சா, அதுக்கும் பழைய நோட்டை செலவழிச்சு, பதவியை பிடிச்சுடலாம்னு காத்திருக்காங்க'' என்று, ஒரே மூச்சில் மித்ரா சொன்னாள்.
"" இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வருமான்னு சொல்ல முடியலேன்னு, எம்.எல்.ஏ., க்களே சொல்றாங்க'' என்றாள் சித்ரா.
""அதுமட்டுமில்ல. மக்கள் தொகை அடிப்படையில வார்டுகள பிரிச்சு, உள் ளாட்சி எல்லைகளை வரையறை செஞ்சு, அப்புறமா தேர்தல் நடத்தனும்னு,
"பினாமி'கள் மூலமா, தேர்தல் கமிஷனருக்கு மனு கொடுத்திருக்காங்க. எப்படியோ தேர்தல் தள்ளிப்போகனும்னு நினைக்கறாங்க போல,'' என்ற மித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X