நியூயார்க்: இந்தியாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளருக்கு, துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளர்களுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இயங்கும், 'தி கமிட்டி டு புரடக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்' என்னும் சி.பி.ஜே., அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த, துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளர்களுக்கு, 'சர்வதேச ஊடக சுதந்திர விருது' வழங்கி கவுரவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான விருது, இந்தியா, மத்திய அமெரிக்கா மற்றும் துருக்கி நாடுகளை சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயல் இயக்குனர் ஜோயல் சிமோன் கூறியதாவது: உலகம் முழுவதும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கொலை மிரட்டல், சிறைவாசம் மற்றும் நாடு கடத்தப்படும் நிலையிலும் கூட, துணிச்சலான செயலால், குற்ற நடவடிக்கைகளை, உலகிற்கு அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களுக்கு, இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருது, இந்தியாவின் இணையதள பத்திரிகையான, 'ஸ்கிரோல்.இன்' பத்திரிகையாளர் மாலினி சுப்ரமணியத்துக்கு வழங்கப்படுகிறது. கொலை மிரட்டல் காரணமாக, மூன்று வாரங்கள் வெளிநாட்டில் வசித்த, மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஆஸ்கர் மார்ட்டினஸ், துருக்கி உளவுத்துறை குறித்த செய்திக்காக, 92 நாட்களாக சிறையில் அடைபட்டுள்ள, துருக்கி பத்திரிகையாளர் ஜான் துன்தார் ஆகியோருக்கும், இந்தாண்டுக்கான விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாலினி சுப்ரமணியம் : சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குறித்த செய்தியை தொகுத்து வெளியிட்ட மாலினி சுப்ரமணியம், போலீசாரின் சித்ரவதைக்கும் ஆளானார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE