வண்ணத்துப்பூச்சியின் சிறகை பிய்த்துவிடாதீர்கள்!| Dinamalar

வண்ணத்துப்பூச்சியின் சிறகை பிய்த்துவிடாதீர்கள்!

Added : நவ 25, 2016 | கருத்துகள் (1)
வண்ணத்துப்பூச்சியின் சிறகை பிய்த்துவிடாதீர்கள்!

“பொங்கி எழும் வேகமிக்க நீரோட்டத்தின் மேல் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சி குழந்தை” என்கிறார் ஜேனஸ் கோர்ச்சாக். குழந்தைகள் மென்மையானவர்கள். குழந்தைகளின் இறகுகள் மீது நம் மகிழ்ச்சிகளை, ஆசைகளை, கனவுகளை ஏற்றி கிழித்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். டாக்டராக வேண்டும். இன்ஜினியராக வேண்டும். அமெரிக்காவிற்கு சென்று வேலைப்பார்க்க வேண்டும் என்ற நம் கனவுகளை குழந்தைகளின் மீது திணிப்பதை தவிர்ப்போம். பெற்றோரின் எதிர்பார்ப்பின் சுமை தாங்காமல் பெரும் குழப்பத்திற்கு ஆளாகும் அக்குழந்தை சற்றே பின் தங்கும் போது நாம் அக்குழந்தைகள் மீது அதிர்ச்சியடைந்து, அவர்களின் வளர்ச்சியின் மீது குறை கூற ஆரம்பிக்கின்றோம். பிற குழந்தையின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு அக்குழந்தையின் இறகினைப் பிய்த்து எறிகின்றோம்.
பாவம் குழந்தைகள் : சமீபத்தில் நண்பரின் இல்லத்திற்கு சென்றிருந்தேன். அப்போது நண்பரின் ஆறாம் வகுப்பு படிக்கும் பையன் சோர்வாக அமர்ந்து இருந்தான். எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் 'டிவி' அமைதியாக இருந்தது. விசாரித்தேன். “சென்ற வாரம் பத்தாயிரம் ரூபாய்க்கு பியானோ வாங்கி தந்திருக்கின்றேன். இரண்டு நாள் தான் பியானோ கிளாஸ் சென்றான். அதன் பின் செல்ல வில்லை. தெண்டமாக பியானோ இருக்கு! எப்ப பாரு நோட்டை எடுத்து எதையாவது கிறுக்கி கொண்டு இருக்கான். சரியான கிறுக்கன். அவனை பார்த்தாலே எரிச்சல் எரிச்சலா வருகின்றது” என்று நண்பர் மிகவும் கடிந்து பேசினார். மெல்ல விசாரித்ததில் நண்பர், 'டிவி' யில் மகனைப் பாடச் செய்ய வேண்டும், பெரிய 'சிங்கர்' ஆக்க வேண்டும் என்ற தனது ஆசைக்காக மகனை மியூசிக் கற்றுக் கொள்ள அனுப்பி உள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன். அந்த பையன் கிறுக்கியதாக கூறிய நோட்டை எடுத்து பார்த்தேன். மிக நேர்த்தியான முறையில் ஓவியம் வரைந்திருந்தான். நண்பரிடம் அவனது விருப்பத்தை எடுத்துரைத்துவிட்டு வந்தேன். இப்படித்தான் குழந்தைகள் சரியே இல்லை என்று வாதாடுகின்றோம்.
கேள்வி கேட்டால்...
“குழலினிது; யாழினிது' என்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்” என்கின்றார் திருவள்ளுவர். குழந்தைகள் பேச ஆரம்பிக்கும் போது மழலையை கேட்டு ரசிக்கின்றோம். ஆஹோ ஓஹோ என பாராட்டுகின்றோம். அவர்கள் நன்றாக பேச கற்றுக் கொண்டு பள்ளிக்கு செல்லும் பருவம் அடைந்ததும், எதை குறித்தாவது கேட்டால், பேசினால், 'தொண தொண' ண்னு பேசாதே என்று குழந்தைகளின் பேச்சை தவிர்க்கின்றோம். பல சமயங்களில் குழந்தைகளை பேசுவதற்கே அனுமதிப்பது இல்லை. பள்ளிக்கூடங்கள் அதை விட மோசமாகவே உள்ளன. குழந்தைகள் வகுப்பறையில் கை கட்டி வாய் பொத்தி அமர வேண்டியுள்ளது. வகுப்பறையில் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க உரிமை இல்லை. “கேள்வி கேட்பவனே சிறந்த மாணவன்” என்கின்றார் அப்துல் கலாம். ஆனால் கேள்வி கேட்பவனை அதிகப் பிரசங்கி என்று பட்டமளித்து, என்றும் வாய் திறவா ஊமையாக்கி விடுகின்றோம்.
உரிமைகளை பறிக்காதீர் : வளர வளர குழந்தைகளின் சின்ன சின்ன உரிமைகள் கூட பறிக்கப்படுவதை நாம் உணர்வதே இல்லை. குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போல் உரிமைகள் உள்ளன என்பதை மறந்துவிடுகின்றோம். குழந்தைகளின் உரிமையை மதித்து, அவர்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்க வேண்டும். நம் வாழ்வின் அற்புதமான கவித்துவமான அமைதியை, மகிழ்வை குழந்தைகள் தருகின்றனர் என்பதை உணருங்கள். குழந்தைகளுக்கான உரிமைகளை வழங்குவோம்! குழந்தைகளுக்கான உரிமைகளை பறித்து, குழந்தைகளின் வாழ்க்கைப் பக்கங்களை இருண்ட பக்கங்களாக மாற்றி விடாதீர்கள்! அவர்களின் பாதைகளை வறண்ட கரடு முரடான பாதையாக மாற்றிவிடாதீர்கள்! குழந்தைகளை குழந்தைகளாக பாவியுங்கள். குழந்தைகள் அளப்பரிய ஆற்றல் நிரம்பியவர்கள். அவர்களுக்குள் பொதிந்துள்ள திறமைகள் வெளிப்பட உதவியாக இருங்கள். குழந்தைகளின் கனவுகளுக்கு உதவி செய்யுங்கள் உங்களின் கனவுகளுக்கு உதவியாக குழந்தைகளை மாற்றாதீர்கள்!
மனம் திறந்து பேசுங்கள் : குழந்தைகளிடம் மனம் திறந்து பேசுங்கள். பள்ளியில் நடந்த சம்பவங்கள் குறித்து பேசுங்கள். குழந்தைகளுக்கு நல்லது கெட்டது குறித்த விஷயங்களை எடுத்து கூறுங்கள். குழந்தைகள் அன்புக்கு ஏங்குபவர்களாக உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எந்த குழந்தையும் இது தவறு என்று அறிந்து தவறை செய்வதில்லை. அவர்களை அறியாமல் பயங்கரமான தவறுகளை செய்திடக்கூடும். அதற்காக அவர்களை புறக்கணிக்காதீர்கள். வேதனைப்படும் குழந்தைகள் தனித்து இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தாங்கள் மாறுப்பட்டிருப்பதையும் சிக்கலில் இருப்பதையும் உணர்ந்த குழந்தைகள், உதவிக்கு ஏங்குபவர்களாக இருப்பார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.புல்தரையைப் பார்த்த குழந்தை அதில் புரண்டு உருளவே ஆசைப்படும். மைதானத்தைப் பார்த்த குழந்தை ஓடுவதற்கே ஆசைப்படும். ஆனால் நாம் 'அங்கே ஓடாதே! ஏய் டிரஸ் அழுக்காகிடும்' என அலுத்துக் கொள்கின்றோம். பெண் குழந்தைகள் நிலமை மிகவும் மோசம்! அவர்களை சிரிக்க கூட நாம் அனுமதிப்பதில்லை. “பொட்டைக்கழுதை என்ன பல் இளிப்பு” என அதட்டிவிடுகின்றோம். குழந்தைகள் விரும்புவதை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.புதியதற்கான ஆய்வு மனப்பான்மையை ஊக்குவிப்பதன் மூலம், குழந்தை தன் விருப்பத்துறையில் வரையறுத்து செயல்பட உதவலாம். ஆகவே குழந்தைகளை தவறிழைக்க அனுமதிப்பதுடன், அதிலிருந்து மகிழ்வுடன் மேம்படவும் அனுமதிப்போம். “உங்கள் வாழ்க்கையை புதைகுழியாய் நீங்கள் உணரும் போது குழந்தை அதே வாழ்க்கையை தன் புல்தரையாய் உணர்ந்தால் அனுமதியுங்கள்” என்கின்றார் ஜேனஸ் கோர்ச்சாக். குழந்தைகள் சிரிப்பதையும், தந்திரங்கள் செய்வதையும் விரும்புவர்களாக உள்ளார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்!
திணிக்காதீர்கள் : வீட்டில், பள்ளிக்கூடத்தில், பள்ளிப்பேருந்தில், மைதானத்தில், தெருவில் பார்ப்பதையும் கேட்பதையும் தான் குழந்தைகள் பிரதிபலிக்கின்றன. குழந்தைகள் தங்கள் சூழலின் மொழியினை தான் பேசுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் அந்த சூழலால் அதிகமாகவோ குறைவாகவோ களங்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.எதையும் திணிக்காதீர்கள். ஆனால் அவர்களிடம் வளர்ந்துள்ள தளைகளைக் களைதல் அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். குழந்தைகளை வலிந்து இழுத்து உயர்த்த நினைக்காதீர்கள்; அறுந்து விடுவார்கள்! அவர்களின் ஆசைகளை தடுக்காமல் வார்த்தெடுங்கள். விண்ணை தொட்டுவிடும் அளவு உயர்ந்து விடுவார்கள். குழந்தைகளின் மீது அதிகாரம் செலுத்தாமல், உத்தரவு இடாமல் இலக்கை நோக்கி நகர்த்த உதவுங்கள். உங்கள் விருப்பத்தை, கோரிக்கையாயின்றி வேண்டுகோளாய் வினவுங்கள். அவசியம் குழந்தைகள் அதனை கேட்டுக்கொள்வார்கள்! திணிக் காத, வலிந்து இழுக்காத, தடுக்காத, அதிகாரம் செலுத்தாத, ஆசிரியரே அல்லது பெற்றோரே அவர்களிடம் வல்லமை பெற்றவர்களாக திகழ்கின்றார்கள். எது எப்படி இருந்தபோதிலும் குழந்தைகளே நம் வாழ்வின் ஆறுதல், நம்பிக்கை, மகிழ்ச்சி. மொத்தத்தில் அவர்களே எல்லாம்! ஆகவே நம் குழந்தைகளை நாம் நேசிப்போம். குழந்தைகளைக் கொண்டாடுவோம்!
க.சரவணன்தலைமையாசிரியர், மதுரை

99441 44263.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X