ஒரு நல்ல ஆசிரியர் கல்வியை மட்டுமின்றி கலையையும் வளர்ப்பார் என்கிறார் நடிகர் தாமு.ராமநாதபுரம் வந்த நடிகர் தாமு 'தினமலர்' சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக நம்மிடம் பகிர்ந்தது...பேஸ்புக்கில் நயன்தாரா, தல, தளபதி போட்டோவை வைத்துள்ள மாணவர்கள், என்றைக்காவது தனது ஆசிரியர் படத்தை வைத்தது உண்டா. நடிகர் பிறந்த நாளை கொண்டாடும் இவர்கள் ஆசிரியர் பிறந்த நாளை கொண்டாடியது உண்டா.'மிமிக்கிரி' கலையில் நான் சிறக்க காரணம், எனது மூன்றாம் வகுப்பு கணித ஆசிரியை வேலம்மாள். வகுப்பறையில், பின் வரிசையில் அமர்ந்து கொண்டு மாடு போல கத்துவேன். (மாடு போல் கத்தி காட்டினார்).அந்த ஆசிரியை, ஒன்றும் தெரியாதது போல், யாரோ மாட்டை பள்ளிக்குள் அவிழ்த்து விட்டுள்ளனர், என்று அப்பாவித்தனமாக கூறுவார். சில நேரம் நாய் போல் குரைப்பேன்.ஆசிரியை வேலம்மாள், எனது மிமிக்ரியை ரசித்திருப்பது பிறகுதான் தெரிந்தது. ஒரு நாள் தலைமை ஆசிரியர் என்னை அழைத்து, நீ வகுப்பறையில், மாடு, நாய் போல் குரல் எழுப்புகிறாயா.. என்றார். நான் மறுத்தேன். உனது கணக்கு ஆசிரியை சொன்னாரே, என்றார். மேலும் கலை விழா போட்டியில் என்னை மிமிக்கிரி செய்யவும் உத்தரவிட்டார். ஒரு நல்ல ஆசிரியர் கல்வியையும் வளர்ப்பார், கலையையும் வளர்ப்பார். ஆசிரியரும் அம்மா, அப்பாவை போன்றவர்தான். அம்மா பத்து மாதம் கருவறையில் சுமந்தார். ஆசிரியர்கள் பத்து ஆண்டுகள் வகுப்பறை என்ற கருவறையில் மாணவர்களை கவனிக்கின்றனர்.ஒரு ஆசிரியை வகுப்பறைக்குள் வந்தால் அவருக்கு கல்வி போதித்த 75 ஆசிரியர்கள் அவருடன் வருகின்றனர். எனவே, அவரை கேலி செய்வது அந்த 75 ஆசிரியர்களை அவமதிப்பதற்கு சமம்.சினிமாவுக்கு நீண்ட விடுமுறை விட்டுள்ளேன். கலாம் கட்டளையை நிறைவேற்றும் பணிக்கு நீண்ட விடுமுறை தேவைப்படுகிறது. ஆசிரியர்- மாணவர் நல்லுறவு பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை பழுது பார்த்து பலப்படுத்துவதற்கான ஆற்றலை கலாம் எனக்கு கொடுத்து சென்றார்.ஆசிரியர் சமூகம் மேம்படவும், மாணவர் நலனுக்காகவும் 'லீடு இந்தியா 2020' குழு உழைக்கிறது. இந்த குழுவின் தமிழக பொறுப்பாளராக 2011ல் பொறுப்பேற்றேன். கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் எனக்கு சிறப்பு பயிற்சியளித்தார். அந்த பயிற்சி எனது பயணத்தின் பாலமாகவும், பலமாகவும் உள்ளது. திரைப்பட நடிகராக, பலகுரல் சக்ரவர்த்தியாக பெற்ற பெயரை விட, கலாம் சீடராக வலம் வருவதே பெருமை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE